கச்சிப்பலதளி
[கச்சபேசம், கயிலாயம், காயாரோகணம், (காஞ்சிபுரம்)]

கச்சி மாநகரில் மிகப்பல சிவாலயங்கள் உள்ளன. இவற்றைத் திருநாவுக்கரசர் பெருமான் கச்சிப் பலதளி என்று தொகுப்பாகத் தமது பதிகத்தில் போற்றியுள்ளார். காஞ்சிப் புராணத்தில் கூறப்்பட்டுள்ள கச்சிப் பலதளிகள் பற்றிய தகவல் காண்க.

 
இறைவர் திருப்பெயர்		: கச்சபேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: சுந்தராம்பிகை. 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - எச்சில் இளமர் ஏம (6-70-4). 
kaccabesam temple

தல வரலாறு

 • 1. கச்சபேசம் : கச்சபேஸ்வரர் கோயில் என்று வழங்குகிறது. மேற்கு ராஜ வீதியின் தென் கோடியில் உள்ளது.

 • கச்சபம் - ஆமை. ஆமை உருக் கொண்ட திருமால் அவ்வுருவில் பெருமானை வழிபட்ட தலமாதலின் கச்சபேசம் என்றாயிற்று.

 • 2. கயிலாயம் : கயிலாசநாதர் கோயில் என்று வழங்குகிறது. பெரிய காஞ்சிபுரம் புத்தேரித்தெரு வழியாக நேரே சென்று சற்றுத் தொலைவிலுள்ள இக்கோயிலை அடையலாம்.

 • 3. காயாரோகணம் : பிள்ளையார் பாளையப் பகுதியில் தாயார் குளத்தின் பக்கத்தில் உள்ள கோயில். சுவாமி - காயாரோகணேஸ்வரர்.

 • மகாசம்ஹார காலத்தில் இறைவன் தான் ஒருவன் மட்டுமேயாக இருந்து, திருமாலையும் பிரமனையும் ஒடுக்கி அவர்களுடைய திருமேனிகளைத் தன் தோள் மேல் தாங்கி நடம் செய்தருளுவார் என்பது வரலாறு. எனவே இத்தலம் (காயம் - உடம்பு; ஆரோகணம் - ஏற்றல்) காயாரோகணம் என்று பெயர் பெற்றது.

 • காயாரோகணம் இறைவனை இயமன் வழிபட்டுத் தென் திசைக்குத் தலைவனாகும் பேற்றைப் பெற்றான்; அவன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் எமதரும லிங்கேசம் என்ற பெயரில் தாயார் குளக்கரையில் தனிக்கோயிலாக உள்ளது.

 • இவ்விறைவனை (காயாரோகணம்) இலக்குமி வழிபட்ட தீர்த்தமே தாயார் குளமாகும்.

kaccabesam temple

சிறப்புக்கள்

 • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 • 1. திருஏகம்பம், 2. திருமேற்றளி, 3. கச்சிநெறிக்காரைக்காடு, 4. கச்சி அநேகதங்காவதம், 5. ஓணகாந்தன் தளி என்பன காஞ்சிபுரத்தில் பாடல் பெற்ற கோயில்களாகும். இவையன்றிப் பாடல் பெறாத கோயில்கள் இத்தலத்தில் பல உள்ளன.

 • கச்சபேஸ்வரர் கோயிலின் வலப்பால் இஷ்ட சித்தீசம் என்னும் காஞ்சிப் புராணத்தில் இடம் பெற்றுள்ள கோயிலும் அதற்குரியதான தீர்த்தக் குளமும் உள்ளது.

 • கயிலாசநாதர் கோயில் இராச சிம்ம பல்லவனால் கட்டப்பட்ட சிற்பக் கலையழகு வாய்ந்த கோயில்.

 • கோயிலின் (கயிலாசநாதர்) முகப்புத் தோற்றமே ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்ட உருண்டை வடிவிலான விமான அமைப்பை வரிசையாகக் கொண்டு விளங்குகிறது.

 • பதினாறு பட்டைகளுடன் கூடி பளபளப்பாகச் சிவலிங்கத் திருமேனியில் அருள்மிகு கயிலாய நாதர் தரிசனம் தருகின்றார் - பெரிய மூர்த்தி.

 • பிராகாரத்தில் ஒருவர் அமர்ந்து தியானிக்கக் கூடிய வகையில் பிறைகள் (உள்ளிடங்கள்) நிரம்ப அமைக்கப்பட்டுள்ளன.

  kailasanathar temple

 • கயிலாசநாதர் - இக்கோயில் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

 • தேவகுருவான வியாழ பகவான் இவ்(காயாரோகணம்)விறைவனை வழிபட்டுத் தேவர்க்குக் குருவாகும் தன்மையைப் பெற்றதாகக் காஞ்சிப் புராண வரலாறு கூறுகிறது.

 • இங்குள்ள (காயாரோகணத்தில்) வியாழ பகவன் - குரு சந்நிதி மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது.

 • (காயாரோகண) கோயிலுக்கு வெளியில் ஒட்டினாற்போல் தனியே லிங்கபேகம் என்னும் சிவலிங்க சந்நிதியும் ஒன்றுள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்திற்கு - சென்னை, திருச்சி மற்றும் முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் நிரம்ப உள்ளன.

< PREV <
ஏறனூர்
Table of Contents > NEXT >
கச்சிமயானம்