அத்தீச்சுரம் - (சிவசைலம்)

Attheechuram - (Sivasailam)

இறைவர் திருப்பெயர்		: சைலநாத சுவாமி, அத்ரீசுவரர், சிவசைல நாதர்.
இறைவியார் திருப்பெயர்		: பரம கல்யாணி.
தல மரம்			: கடம்ப மரம்.
தீர்த்தம்				: கடனா நதி.
வழிபட்டோர்			: அத்ரி, பிருங்கி முனிவர்கள்.
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - நாடகமா டிடநந்தி (6-71-8).
sivasailam gopuram

தல வரலாறு

 • தற்போது 'சிவ சைலம்' என்று வழங்குகிறது. கோயிலுள்ள பகுதியே 'சிவ சைலம்' எனப்படும்.

 • அத்ரி முனிவர் வழிபட்டதால் சுவாமி அத்ரீசுவரர் என்று பெயர் பெற்றார்.

 • இங்குள்ள நந்தி முன் காலையூன்றி எழும் நிலையில் உள்ளது கவனிக்கத் தக்கது. இதற்கான காரணம் - சிற்பி இதைச் செதுக்கியபோது (நந்தி) தானாக எழுந்ததாகவும், அதனால் சிற்பி அடித்ததாகவும், இதன் காரணமாக நந்தியின் மேற்பாகத்தில் பள்ளம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 • இறைவன் அத்ரி மகரிஷிக்குக் காட்சிதந்த பெருமையுடையது.

sivasailam temple

சிறப்புக்கள்

 • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 • அத்ரி முனிவரின் ஆசிரமம் மலை மேல் உள்ளது.

 • பொதுவாக வண்டுகட்கு உடம்புள் சதைப்பற்று இருக்காது. ஆனால் பிருங்கி முனிவர் இங்கு வண்டு உருவம் எடுத்துப் பெருமானை வழிபட்டதால் இங்குள்ள வண்டுகளுக்கு உடம்புள் சதைப்பற்று இருக்கும் என்று செவி வழிச் செய்தி சொல்லப்படுகிறது.

 • கோயிலின் அருகில் கடனா நதி பாய்கிறது.

 • இங்குள்ள விசேஷம் முதலில் (கடனா நதி) தீர்த்தத்திற்கும், பின்பு நந்தி தேவருக்கும் தீபாராதனை முதலிய உபசாரங்கள் நடைபெறுகின்றன. உச்சிக்காலம் முடிந்ததும் நைவேத்யம் கொண்டு செல்லப்பட்டு அங்குத் தீர்த்தத்திற்கும் நந்தி தேவருக்கும் நிவேதிக்கப்பட்டு, கரைக்கப்பட்டு விடுகிறது.

 • அம்பாள் - கருவறைச் சுவரின் வெளிப்பக்கம் நால்வர், அருணந்தி சிவம் உமாபதி சிவம் சந்நிதிகள் உள்ளன.

 • மூலவர் - சிவ சைலநாதர்; பழமையான மூர்த்தி. மூலவரின் திருமேனியில் பின்புறத்தில் சிரசு தொடங்கி சடையுள்ளது. இதைத் தரிசிக்க, பின்புறக் கருவறைச் சுவரில் சிறிய சாளரம் உள்ளது.

 • ஆழ்வார்குறிச்சி - சிவசைலம் பாதையில்; ஆழ்வார் குறிச்சி ஊரைத்தாண்டியதும், "சிவந்தியப்பர் கோயில்" என்றொரு கோயில் உள்ளது.

 • சிவ சைலநாத சுவாமி கோயிலில் திருவிழா தொடங்கும்போது, கொடி ஏறுதல் மட்டுமே அங்கு நடைபெறும். மற்றபடி விழா உற்சவங்கள், தேரோட்டம் முதலிய அனைத்தும் சிவந்தியப்பர் கோயிலில் தான் நடைபெறுகிறது. இப்படி ஒரு வழக்கம் உள்ளது. எனவே சிவந்தியப்பர் கோயிலை மக்கள் 'திருவிழாக் கோயில்' என்றே அழைக்கின்றனர்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
ஆழ்வார் குறிச்சியிலிருந்து கடனா நதி அணைக்குப் போகும் நகரப் பேருந்தில் ஏறிச்சென்று; கல்யாணிபுரம் நிறுத்தத்தில் இறங்கிச் சிறிது தூரம் நடந்தால் கோயிலையடையலாம். அடிக்கடி பேருந்துகள் இல்லை. வி.கே. புரம், கருத்தப்பிள்ளையூர் முதலிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்து பாதையில் சிவசைலம் கோயில் உள்ளது.

< PREV <
அணிஅண்ணாமலை
Table of Contents > NEXT >
அயனீச்சரம்