அளப்பூர்
(தரங்கம்பாடி)

இறைவர் திருப்பெயர்		: மாசிலாமணீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: தர்மசம்வர்த்தினி (அறம் வளர்த்த நாயகி).
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - 1. அண்ணா மலையமர்ந்தார் (6-51-3), 
					  2. எச்சில் இளமர் ஏம (6-70-4), 
					  3. பிறையூருஞ் சடைமுடியெம் (6-71-4). 

				 சுந்தரர் - 1. ஆரூர் அத்தா ஐயாற் (7-47-4).

தல வரலாறு

 • இன்று இவ்வூர் "தரங்கம்பாடி" என்று வழங்குகிறது.

 • அளம் என்பது உப்பளத்தைக் குறிக்கும். இக்கோயிலுக்குப் பல உப்பளங்கள் சொந்தமாக இருந்தன. அதனால் வந்த பெயர் அளப்பூர் ஆகும்.

சிறப்புக்கள்

 • இத்தலம் அப்பர், சுந்தரர் ஆகியோர்களின் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 • வரலாற்றுச் சிறப்புடைய தலம்.

 • டேனிஷ்காரர் ஆட்சி புரிந்த இடம்; கடலோரத்தில் டேனிஷ் கோட்டையும் அருங்காட்சியகமும் உள்ளன.

 • ஒரு காலத்தில் இவ்வூர் துறைமுகமாக இருந்ததை நினைவூட்டும் வகையில் ஓரிரு சுவர்கள் மட்டும் கடலில் நின்று காட்சி தருகின்றன.

 • குல சேகர பாண்டிய மன்னன் சிறந்த சிவபக்தன். இவன் தன் 38வது ஆட்சியாண்டில் கி.பி. 1306ல் இவ்வூரைத் தோற்றுவித்துக் கோயிலையும் கட்டினான். வேதத்தின் ஆறு அங்கங்களுக்கும் மூலம் இறைவனே யாதலின் இவ்வூருக்கு (ஷட் - அங்கன் பாடி) "சடங்கன்பாடி" என்று பெயர் வைத்தான். சுவாமிக்கு மணிவண்ணீசுவரமுடையார் என்று திருநாமஞ் சூட்டினான். கடற்கரையை யொட்டிய நகர மாதலாலும், தோற்றுவித்தவன் குலசேகரபாண்டியன் என்பதாலும் இவ்வூருக்குக் குலசேகரன் பட்டினம் என்ற பெயரும் வழங்கலாயிற்று.

 • கி.பி. 1354ல் ஆண்ட வீர பாண்டியன் ஆட்சிக் காலத்திலும் இப்பெயர்களே வழங்கி வந்தன.

 • இசுலாமியர்களால் தென்னிந்தியா தாக்கப்பட்ட பின்னர், விஜய நகர மன்னர்கள் தென்னிந்தியாவைக் காத்து ஆண்டனர். அக்காலத்தில் தஞ்சையிலிருந்து கி.பி. 1567ல் ஆட்சி செய்த அச்சுத்தப்ப நாய்க்க மன்னர் காலத்தில் ஊர்ப்பெயர் சடங்கண்பாடி என்றிருந்த போதிலும், சுவாமி பெயர் மாசிலாமணீஸ்வரர் என்று மாறியுள்ளது.

 • ஆங்கிலேயர்களால் ஷடங்கன் பாடி - சடங்கன்பாடி என்ற பெயர்களை சரியாக உச்சரிக்க வராமற் போகவே, தரங்கம்பாடி என்று பெயர் மாறி TRANQUEBAR என்றானது. (தரங்கம் - அலை. அலைகள் சூழ்ந்த நகரம் - தரங்கம்பாடி).

 • கோயிலின் முன் மண்டபத்திற்கு சுமார் 25 அடியில் கொடிமரம் இருந்திருக்க வேண்டும். கடலில் மீன் பிடிப்பவர்கள் கடலில் 150 அடிக்குள் சுவர்கள் இருப்பதாக கூறுகின்றனர்.

இறையன்பர்களின் கவனத்திற்கு :-

 • கடல் அலைகள் மோதுவதனால் கோயிலின் முற்பகுதி முழுவதும் அழிந்து விட்டது. கற்களெல்லாம் கடல் நீரில் வீழ்ந்து கிடக்கின்றன. இக்கற்களின் மீது ஏறிச் சென்றே - கடல் நோக்கி வீற்றிருக்கும் பெருமானைத் தரிசிக்க வேண்டியிருக்கிறது.

 • மூலவரும், விநாயகரும் மட்டுமே கோயிலில் உள்ளனர். மூர்த்தங்கள் எல்லாம் - அகிலாண்டேஸ்வரி, பாலசுப்பிரமணியர், சண்டேசுவரர், துர்க்கை, மகாலட்சுமி, நவக் கிரகங்கள் - கோயிலுக்குப்பக்கத்தில் ஓரிடத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுப் பூசைகள் நடைபெற்று வருகின்றன.

 • கோயில் முற்பகுதி முழுவதும் கடல் அலைகள் மோதி அழிந்து போயிருக்க, பிற்பகுதி ஓரளவு காப்பாற்றப்பட்டுள்ளது. 1954ல் அம்பாள் விமானத்தை இடம் மாற்றி, சுவாமிக்குப் பக்கத்தில் தனியே கட்டி, காப்பாற்றியுள்ளனர்.

 • இக்கோயிலுக்கு விரைவில் திருப்பணி செய்யவேண்டியது சைவர்களின் கடமையாகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருக்கடையூரிலிருந்து தென்கிழக்கே 8 கி. மீ. தொலைவு. நாகப்பட்டினத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. தரங்கம்பாடியில் புகை வண்டி நிலையம் உள்ளது.

< PREV <
அவல்பூந்துறை
Table of Contents > NEXT >
அறப்பள்ளி