திருமுகத்தலை - (பன்னத்தெரு)

 
இறைவர் திருப்பெயர்	: பன்னகாபரணேஸ்வரர் 
இறைவியார் திருப்பெயர்	: சாந்தநாயகி. 
தல மரம்		: புன்னை. 
தீர்த்தம்			: கோயிலுக்கு எதிரில் உள்ள திருக்குளம். 
வழிபட்டோர்		: 
திருவிசைப்பா பாடல்கள்	: கருவூர்த்தேவர் - திருவிசைப்பா. 

தல வரலாறு

 • மக்கள் வழக்கில் பன்னத்தெரு என்று வழங்குகிறது.
 • முகலிங்கம், பண்டை நாளில் முகத்தலைலிங்கம் என்றும் வழங்கப்பட்டு வந்தது. அம்முகத்தலைலிங்கம் அமைந்துள்ள தலம். இதுவே பிற்காலத்தில் முகத்தலை என்றாயிற்று என்பர்.
 • பன்னகாபரணேஸ்வரர் வீற்றிருக்கும் தலமாதலின் பன்னத்தெரு என்று ஊருக்குப் பெயராயிற்று என்று கூறுவர்.
 • இதற்கேற்ப கோயிலின் உட்பிராகாரத்தில் முகலிங்கம் ஒன்றுள்ளது.
 • கோயிலுக்கு வெளியில் உள்ள பகுதி 'முகத்தலைக் கோட்டகம்' எனப்படுகிறது.

சிறப்புகள்

 • இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார்.
 • ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.
 • சிறிய கோயில், சுற்றிலும் பசுமையான சூழல்.
 • தலமரமான புன்னை மரத்தின்கீழ் விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
 • மூலவர் - பன்னகாபரணேஸ்வரர், பெயருக்கேற்ப வெள்ளி நாகாபரணத்தில் பிரகாசிக்க ஒளிர்விட்டுக் காட்சியளிக்கிறார்.
 • அம்பாள் - சாந்தநாயகி; நின்ற திருக்கோலம் - அற்புத தரிசனம்; மனதிற்குச் சாந்தி தரும் காட்சி.
 • மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட திருக்கோயில்; ஆதீனத்தின் மேலாளர் ஒருவர் அங்கிருந்து கொண்டு கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வருகின்றார். நல்ல பராமரிப்பு.
 • நித்திய வழிபாடுகள் குறைவின்றி நடைபெறுகின்றன.
 • மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ள இத்தலத்தில், கோயிலுக்கு விளக்கெரிக்க நிவந்தங்கள் ஏற்படுத்தப்பட்ட செய்திகள் தெரியவருகின்றன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் / வேளாங்கண்ணி சாலையில் 4-கி.மீ. சென்று 'கொக்காலடி' என்னும் ஊரையடைந்து; அங்கிருந்து மானாச்சேரி (மாராச்சேரி) பாதையில் 3-கி.மீ. சென்றால் திருமுகத்தலை - பன்னத்தெரு கோயிலை அடையலாம்.