திரைலோக்கிய சுந்தரம் - (திருலோக்கி)

இறைவர் திருப்பெயர்		: சுந்தரேஸ்வரர், சுந்தரம்
இறைவியார் திருப்பெயர்	: அகிலாண்டேஸ்வரி.
தல மரம்			: சரக்கொன்றை.
தீர்த்தம்			: லட்சுமி தீர்த்தம்.
வழிபட்டோர்		: பிருகுமுனிவர், தேவகுரு முதலியோர்.
திருவிசைப்பா பாடல்கள்	: கருவூர்த்தேவர் - திருவிசைப்பா.
trailokyasundaram temple

தல வரலாறு

 • திரைலோக்கிய மாதேவி என்பவள் முதலாம் இராசராசனின் மனைவியர்களுள் ஒருத்தியாவாள்; சுவாமி பெயர் சுந்தரேசுவரர்; இவையிரண்டும் சேர்ந்து இத்தலத்திற்குத் திரைலோக்கிய சுந்தரம் என்று பெயர் வழங்கியது போலும்.

சிறப்புக்கள்

 • இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார்.
 • இவர் (கருவூர்த் தேவர்) பாடியுள்ள இத்தலத்து திருவிசைப்பா பதிகத்தில் முதலிரு பாடல்கள் தலைகூற்றாகவும் ஏனையவை தோழி தலைவனிடம் கூறும் கூற்றாகவும் அமைந்துள்ளன.
 • ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.
 • இவ்வூரில் (1) சுந்தரேஸ்வரர் கோயில் (2) கயிலாயநாதர் கோயில் என்று இரு கோயில்கள் உள்ளன. இவற்றுள் சுந்தரேஸ்வரர் கோயிலே திருவிசைப்பா பாடல் பெற்றதாகக் கொள்ளப்படுகிறது.
 • கோட்டூர் என்னும் திருமுறைப்பாடல் பெற்ற தலம் இதுவன்று, அதுவேறு. கோட்டீர் என்னும் இச்சிறிய கிராமமும் திலோக்கிய சுந்தரமும் முதல் இராசராசன் காலத்தில் ஒன்றாக இருந்தது போலும்.
 • கருவூர்த்தேவர் இக்கோட்டூரைக் (இன்று 'துகிலி' என்று வழங்குகிறது) 'கோடை' என்று கொண்டு திருலோக்கிய சிறப்பித்து "கோடைதிரைலோக்கிய சுந்தரனே" என்று பாடுகிறார். இத்தொடர் இப்பதிகம் முழுவதும் வருகிறது.
 • மூலவர் - சற்று உயர்வான ஆவுடையாரில் சற்றே குட்டையான பாணவடிவில் சுந்தரேஸ்வரர் தரிசனம் தருகிறார்.
 • மூலவருக்கு முன் உள்ள மண்டபத்தில் வலப்பால் ஆலிங்கன மூர்த்தி சிலாரூபத்தில் அருமையாகக் காட்சியளிக்கிறார். தோள்மேல் கைபோட்டு அம்பாளை அணைத்திருக்கும் லாவகமே தனியழகு - கண்டு மகிழவேண்டும்.
 • ஆலிங்கனமூர்த்திக்கு நேர் எதிரில் - ரிஷபத்தின் மீது (ரிஷபாரூடராக) சுவாமியும் அம்பாளும் வீற்றிருக்கும் அற்புதமான சிலாரூபம் - ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அதிசய அமைப்பு உடையதாகக் காட்சியளிக்கிறது. பின்புறத்தில் லிங்க வடிவமும் செதுக்கப்பட்டு உள்ளது. வியப்பூட்டும் இப்புதுமையான சிலாரூபம் வேறெங்கும் காண முடியாதது.
 • முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டொன்றில் இவ்வூர் 'திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்கலம்' என்று குறிக்கப்பட்டுள்ளது.
 • கல்வெட்டில் இத்தலம் விருதராச பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு தைலோக்கி ஆகிய சதுர்வேதி மங்கலம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருப்பனந்தாளிலிருந்து ஆடுதுறை சாலையில் 3 கி.மீ. சென்று இவ்வூரையடையலாம். திருப்பனந்தாளிலிருந்து, கும்பகோணம் - பூம்புகார்ச் சாலையில் கோட்டூர் என்று வழங்கும் 'குகிலி' ஊரையடைந்து, அதைத் தாண்டி, "திருலோக்கி 5 கி.மீ." என்று வழிகாட்டிப் பலகையுள்ள இடத்தில் (இடதுபுறம்) திரும்பிச் சென்றால் கீழசூரியமூலை, வழியாகவும் இவ்வூரையடையலாம். (இவ்விரு சாலைகளின் நிலைமையை திருப்பனந்தாளிலேயே விசாரித்துக்கொண்டு, பிறகு உரிய பாதையில் செல்வது நல்லது)