கீழ்க்கோட்டூர் மணியம்பலம் / (கோட்டூர்)

இறைவர் திருப்பெயர்		: மணியம்பலநாதர், அமுதலிங்கேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்	: மணியம்பலநாயகி, அமுதாம்பிகை, மதுரவசனாம்பிகை.
தல மரம்			: வன்னி.
தீர்த்தம்			: இந்திர தீர்த்தம்.
வழிபட்டோர்		: பிரமன், ஐராவதம்.
திருவிசைப்பா பாடல்கள்	: கருவூர்த்தேவர் - திருவிசைப்பா; (3-வது தலம்).

தல வரலாறு

  • கீழ்க்கோட்டூராகிய இத்தலமே மணியம்பலம் எனப்படும். ஐராவதம் வழிபட்ட பெருமையுடையது மேலக்கோட்டூர் சிவாலயம். அந்த ஐராவதத்தின் மணி விழுந்ததால் கீழ்க்கோட்டூர் சிவாலயம் மணியம்பலம் என்று பெயர் பெற்றது.

சிறப்புக்கள்

  • கோட்டூர் சோழநாட்டு (காவிரி)த் தென்கரைத் தலம். கோட்டூர், (1) மேலக்கோட்டூர் (2) கீழ்க்கோட்டூர் என இரு பிரிவுகளாக உள்ளது. மேலக்கோட்டூரிலுள்ள திருக்கோயில் திருமுறைப் பாடல் பெற்றது. கீழ்க்கோட்டூரில் உள்ள இத்திருக்கோயில் தான் திருவிசைப்பா தலம்.

  • இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார்.

  • ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.

  • மூலவர் சிறிய அழகான மூர்த்தி.

  • நித்திய வழிபாடுகள் முறையாக நடைபெறுகின்றன.

  • நவராத்திரி, சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விசேஷகால வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி பாதையில் "திருப்பத்தூர் பாலம்" என்னுமிடத்தைத் தாண்டி மேலும் 1-கி.மீ. சென்றால் கோட்டூர் தலத்தையடையலாம். முதலில் வருவரு திருமுறைப்பாடல் பெற்ற ஆலயம்தான். (மேலக்கோட்டூர்) கோயிலின் முன்பு வளைவு உள்ளது; அதைத்தாண்டி சற்று உள்ளே சென்றால் கீழக்கோட்டூர் மணியம்பலம் கோயிலை அடையலாம். வழி விசாரித்துச் செல்ல வேண்டும்.