களந்தை ஆதித்தேச்சரம்
(களப்பால் - கோயில் களப்பால்)

இறைவர் திருப்பெயர்	: ஆதித்தேச்சரர், அழகியநாதசுவாமி.
இறைவியார் திருப்பெயர்	: பிரபாநாயகி, பண்ணேர் மொழியாள்.
தல மரம்		: 
தீர்த்தம்			: 
வழிபட்டோர்		: 
திருவிசைப்பா பாடல்கள்	: கருவூர்த்தேவர் - திருவிசைப்பா நீலமே கண்டம் 96-வது பாடல்.
வைப்புதல பாடல்		: சுந்தரர் - தில்லைவாழ் அந்தணர்தம் 6-வது பாடல்.

தல வரலாறு

 • இத்தலம் மக்கள் வழக்கில் களப்பால் என்றும் கோயில் களப்பால் என்றும் வழங்குகிறது. ஊர் - களப்பால்; கோயில் - ஆதித்தேச்சரம்.

 • களப்பாளர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்த ஊராதலின் இப்பெயர் பெற்றிருக்க வேண்டும். இது மருவி களந்தை என்றாயிற்று.

 • இக்கோயில் விசயாலய சோழனின் மகன் ஆதித்தசோழன் (கி.பி. 850 - 890) கட்டுவித்தது. எனவே ஆதித்தேச்சரம் என்று பெயர் பெற்றது.

சிறப்புக்கள்

 • இத்தலம் திருவிசைப்பாத் தலம் ஆகும்.

 • இஃது சுந்தரர் வாக்கில் இடம்பெற்ற வைப்புத் தலமுமாகும்.

 • இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் ஒருவரான கருவூர்த்தேவர் திருவிசைப்பா பாடியுள்ளார்.

 • ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.

 • முற்றியாற்றின் கரையில் அமைந்த தலம். இங்கு அழகியநாதசுவாமி கோயில், கயிலாயநாதர் கோயில், ஆனைகாத்த பெருமாள் கோயில் என மூன்று கோயில்கள் உள்ளன. இவற்றுள் அழகியநாதசுவாமி திருக்கோயிலே திருவிசைப்பா பாடல் பெற்றதாகும்.

 • அழகியநாதசுவாமி கோயிலில் உள்ள பாண்டிய மன்னன் குலசேகரனின் கல்வெட்டு இத்தலத்து இறைவனை 'களப்பால் உடையார், ஆதித்தேச்சரமுடையார்' என்று குறிப்பிடுகிறது. (களப்பால் என்பது களந்தை என்று மருவிவரும். ஆதலின் இதுவே திருவிசைப்பா பாடல் பெற்றதாகும். இக்கோயிற் பதிகத்தில் அழகர் என்ற சொல்லால் இறைவனைக் குறிப்பது இதற்குரிய சான்றாகிறது.)

 • இங்குள்ள நடராசர் மூர்த்தம் திருவாரூரில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளதாம்.

 • கூற்றுவ நாயனார் அவதரித்த பதி.
  	அவதாரத் தலம்	: களந்தை (களப்பால் - கோயில்களப்பால்).
  	வழிபாடு		: இலிங்க வழிபாடு.
  	முத்தித் தலம் 	: களந்தை (களப்பால் - கோயில்களப்பால்).
  	குருபூசை நாள் 	: ஆடி - திருவாதிரை.
  

 • கோயிலுள் கூற்றுவ நாயனாரின் மூலவுருவம் உள்ளது.

 • "கூற்றுவன் - களப்பாளன்", களப்பால் என்னும் சிவதல (திருவிசைப்பா) நகரத்தை உண்டு பண்ணித் தலைநகராகக் கொண்டு ஆண்ட சிற்றரசர். சிறந்த சிவபக்தியும் வீரமும் உடையவர். மூவேந்தர்களை வென்று சபாநாயகப் பெருமான் திருவடினை முடியாகச் சூடிக்கொண்டவர். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவர் பெயர் களந்தையாண்டான், களந்தையாளி, களந்தையுடையான், களப்பாளி என்று வழங்குகிறது.

 • இவரை "ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன், அடியேன்" என்று போற்றுகிறது திருத்தொண்டத் தொகை.

 • நாடுகளைப் பல கூற்றங்களாகப் பிரித்த காரணத்தால் கூற்றுவன் என்ற சிறப்புப் பெயர் வந்தது. - (ஆதாரம்: சூரியக்குலக் கள்ளர் சரித்திரம்).

 • இத்தலதிற்குப் பக்கத்தில் திருக்களர், கோட்டூர் (திருமுறைத் தலங்கள்), கீழ்க்கோட்டூர் மணியம்பலம் (திருவிசைப்பா தலம்) முதலிய தலங்கள் உள்ளன.

 • களந்தை என்ற பெயரில் தமிழகத்தில் பல ஊர்கள் இருந்ததாகவும், இருப்பதாகவும் தெரியவருகிறது. (அன்பர் பெருமக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.)

அமைவிடம்

	அ/மி. ஆதித்தேச்சரர் திருக்கோயில், 
	களப்பால் / கோயில் களப்பால், 
	நடுவக் களப்பால் (அஞ்சல்) - 614 710.
	திருத்துறைப்பூண்டி (வழி), 
	மன்னார்குடி (வட்டம்), 
	திருவாரூர் (மாவட்டம்).

	தொலைபேசி : 04367 - 277279.

மாநிலம் : தமிழ் நாடு
திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலையில் 3 கி.மீ. தொலைவு சென்று மடப்புரம் தாண்டினால் இடப்பால் களப்பால் என்று கைகாட்டி உள்ளது. அச்சாலையில் சென்று இத்தலத்தையடையலாம், ஒருவழிச் சாலை.

< PREV <
கழுமாரம்
Table of Contents > NEXT >
காட்டூர்

 • கூற்றுவ நாயனார் வரலாறு (மூலம்)