திருவிற்கோலம் (கூவம்) திருக்கோயில் தலபுராணம்

Thiruvirkolam temple thalapuranam

இறைவர் திருப்பெயர்		: திரிபுராந்தகேஸ்வரர், திருவிற்கோலநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: திரிபுராந்தகி, திரிபுரசுந்தரி.
தல மரம்			: தனியாக ஏதுமில்லை. (இத்தலமே 'நைமிசாரண்ய 
			 	 க்ஷேத்திரம்' எனப்படுகிறது.)
தீர்த்தம்				: அக்கினி தீர்த்தம். 
வழிபட்டோர்			: 
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - உருவினார் உமையொடும்.
தலப் பாடல்கள்			: கூவப்புராணம்

Tiruvirkolam temple

தல வரலாறு

 • இறைவன், மேருமலையை வில்லாகக் கையில் பிடித்த கோலம் = திரு + வில் + கோலம் - இதுவே தலத்தின் பெயராயிற்று.

 • மூலவர் - திரிபுரம் எரித்த மூர்த்தி.

  Tiruvirkolam temple

 • அதிக மழை, வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் என்றும், போர் நிகழ்வதாயின் செம்மைப் படரும் என்றும் சொல்லப்படுகிறது. இது பற்றியே ஞானசம்பந்தர் தம் பாடலில் 'ஐயன் நல் அதிசயன் ' என்று குறிப்பிடுகின்றார். (இவ்வண்ண மாற்றம் தற்போது காணப்படவில்லையாம்.)

 • வாயிலில் இரு துவாரபாலகர்கள், திரிபுராதிகள் மூவருள் இருவர் இவர்கள் என்று சொல்லப்படுகிறது.

 • கோயிலுக்கு வெளியே - திரிபுர சம்ஹார காலத்தில் தேர் அச்சு முறிந்திட, உடனே பெருமானை விடையாக இருந்து தாங்கியதாகச் சொல்லப்படும், கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் உள்ளது.

சிறப்புக்கள்

 • மூலவர் தீண்டாத் திருமேனி - சுயம்பு மூர்த்தி. அபிஷேகங்கள் செய்வதால் உண்டாகும் மேற்புறப் படிவுகள் தானாகவே பெயர்ந்து விழுந்து திருமேனி சுத்தமாகிவிடுமாம் (சுற்றிலும் உள்ள பத்து ஊர்களுக்கு இம்மூர்த்தியே குல தெய்வமாம்.)

  Virkolam Temple Pond

 • மணல் லிங்கம், இங்கு மூர்த்தியைப் பாலாலயம் செய்யும் வழக்கமில்லையாம். பதினாறு முழ வேஷ்டிதான் சுவாமிக்கு சார்த்தப்படுகிறது.

 • இங்குள்ள தீர்த்தத்திற்கு 'அச்சிறுகேணி ' என்றும், 'கூபாக்கினி தீர்த்தம் ' என்றும் பெயர்களுண்டு. இக்குளத்தில் தவளைகளே இல்லை; சுற்றிலும் வயல்வெளிகள் இருந்தும் இக்குளத்தில் தவளைகளே இல்லை. பிடித்து வந்து விட்டாலும் வெளியேறி விடுமாம். இத்தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபடுவோர்க்குப் புத்திரப்பேறு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

  Tiruvirkolam Temple

 • பிரகாரத்தில் முருகப்பெருமான் சந்நிதி உரிய இடத்தில் இல்லாமல் இடம் மாறி, இலிங்கோற்பவருக்கு நேரே உள்ளது.

 • தனிக் கோயிலாக விளங்கும் பைரவர் சந்நிதியில், பைரவருக்கு நாய் இல்லை. திரிபுரசம்ஹார காலத்தில் பைரவர் சென்று தேவர்கள் அனைவரையும் அழைத்து வந்ததாகவும், அப்போது அவர் வாகனமாகிய நாய் வழி தவறிவிட்டதென்றும்; அதனாலேயே பைரவருக்கு இங்கு நாய் வாகனமில்லையென்றும் செவி வழிச் செய்தியாகச் சொல்லப்படுகிறது.

 • வலம் முடித்து உள்ளே செல்லும் போது எதிரில் நடராசர் காட்சி தருகிறார்; காளிக்கு இப்பெருமான் அருள்புரிந்ததால் இந்நடனம் 'ரக்ஷீநடம் ' எனப்படுகின்றது. காளிக்கு அருள்புரிந்த நிகழ்ச்சி இன்றும் பெருவிழாவில் 10-ம் நாளில் கொண்டாடப்படுகிறதாம்.

 • இக்கோயில் கஜப்பிரஷ்ட விமான அமைப்பு.

 • கோயிலிலிருந்து 2-கி. மீ. தொலைவில் உள்ள 'திருமஞ்சனமேடை' என்று சொல்லப்படும் (கூவம் ஆற்றின் கரையில் உள்ள) இடத்திலிருந்துதான் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கென ஒருவர் நியமிக்கப்பட்டு, இவ்வாறு தினந்தோறும் நான்கு காலங்களுக்கும் அவ்வப்போது தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்த்தம் கொண்டு வருவதில் தவறு நிகழ்ந்து - அதாவது கொண்டு வருபவர் அத்தீர்த்தத்திற்குப் பதில் - செல்ல வேண்டிய தொலைவுக்குப் பதிலாக வேறு தீர்த்தத்தைக் கொண்டு வந்து, அதை அபிஷேகம் செய்துவிட்டால் சுவாமி மீது சிற்றெறும்புகள் படரும் என்றும் அதைக் கொண்டு அத்தவற்றைக் கண்டுக் கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது.

  Tiruvirkolam Temple full view

 • இப்பெருமானுக்கு உச்சிக்கால அபிஷேகம் பற்றிய அரிய செய்தி - கடம்பத்தூர் புகைவண்டி நிலையத்திற்கு அருகிலுள்ள 'பிஞ்சிவாக்கம் ' கிராமத்திலிருந்து வேளாளர்கள் தர, ஆயர் ஒருவர் நாடொறும் சுவாமிக்கு உச்சிக்கால அபிஷேகத்திற்குப் பால் கொண்டு வருகின்றார். அவர் அப்பாலை, வரும் வழியில் கீழே வைக்காமல், பயபக்தியுடன் கொண்டு வருகிறார். அவருக்கு அதற்காக அவ்வூரில் நிலம் மான்யமாக தரப்பட்டுள்ளது. கோயிலிலும் நாடொறும் அவருக்கு சுவாமிக்குப் படைத்த பிரசாதம் (அன்னம்) தரப்படுகின்றது. இந்த பால் அன்றாடம் வந்த பிறகே 'உச்சிக்கால அபிஷேகம் ' செய்யப்படுகிறது. தொன்றுதொட்டு இன்று வரை ஒரு நாளும் தடங்கலின்றி இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 • சுவாமி, அம்பாளுக்கு முன்னால் தனித்தனியே கொடி மரங்கள் உள்ளன.

 • இவ்வூருக்குக் 'கூபாக்னபுரி ' என்றும் பெயர் சொல்வதோடு, கோயிலுக்கு எதிரில் உள்ள நிலங்களும் 'குமாரவட்டம் ' என்று முருகன் பெயராலேயே வழங்கப்படுகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சென்னையிலிருந்து நேரே செல்லப் பேரந்து வசதி உள்ளது. காஞ்சியிலிருந்து சுங்குவார்சத்திரம் வழியாகத் திருவள்ளூர் செல்லும் பாதையிலும் சென்று கூவம் கூட்ரோடில் இறங்கிச் செல்லலாம்.

தொடர்பு :

 • 09443253325

< PREV <
தொண்டை நாட்டு 13வது
தலம் திருஇலம்பையங்கோட்டூர்
Table of Contents > NEXT >
தொண்டை நாட்டு 15வது
தலம் திருவாலங்காடு