திருவெண்காடு

இறைவர் திருப்பெயர்		: சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர். 
இறைவியார் திருப்பெயர்		: பிரமவித்யாநாயகி.
தல மரம்			: வடஆலமரம்.
தீர்த்தம்				: முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்; முதலில் 
				 அக்கினி, பிறகு சூரிய இறுதியாக சந்திர தீர்த்தம் என்ற 
				 முறையில் நீராடுவர்.)
வழிபட்டோர்			: பிரம்மன், இந்திரன், வெள்ளையானை முதலியோர்.
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் - 	1. கண்காட்டு நுதலானுங், 2. உண்டாய் நஞ்சை,
						3. மந்திர மறையவை.

				 2. அப்பர் - 	1. பண்காட் டிப்படி, 2. தூண்டு சுடர்மேனித்.

				 3. சுந்தரர் - 	1. படங்கொள் நாகஞ்.
view the rAjagOpuram

தல வரலாறு :

 • இங்கு வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்; ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது.

 • சலந்தரன் மகன் மருத்துவன்; இறைவனை நோக்கித் தவம் செய்தான், இறைவன் காட்சி கொடுத்து சூலத்தைத் தந்து அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறியுறுத்தி அருள் செய்தார். ஆனால் மருத்துவனோ அதைத் தேவர்கள் தவம் செய்யவொட்டாதவாறு துன்புறுத்தப் பயன்படுத்தினான். அறிந்த இறைவன் சினந்து நந்தியை அனுப்பினார்; மருத்துவன் மாயச் சூலத்தை அவர்மீது ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப் போயிற்று. இஃதறிந்த இறைவன் தாமே அகோரமூர்த்தியாக (இத்தலத்தில் சிறப்பு மூர்த்தியாக அகோரமூர்த்தியே உள்ளார்.) வடிவுகொண்டு வந்து அவனை அழித்தார் என்பது வரலாறு. அவ்வாறு அழித்த (மாசி மகத்து மறுநாள்) நாள் ஞாயிற்றுக்கிழமை பூர நட்சத்திரம். இவ்வரலாற்றையொட்டிச் சுவாமிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம்.

front appearance of the temple

சிறப்புக்கள் :

 • அச்சுத களப்பாளர் மூலமாக மெய்கண்டார் அவதாரத்தை நாட்டுக்களித்து நலம் செய்த முக்குளநீர் உள்ள பதி.

 • இத்தலம் மூன்று மூர்த்திகள், மூன்று அம்பிகைகள், மூன்று தல மரங்கள், மூன்று தீர்த்தங்கள் (முறையே சுவேதாரண்யர், அகோரர், நடராசர்; பிரம்மவித்யாநாயகி, துர்க்கை, காளி; வடஆலமரம், கொன்றை, வில்வம்; சூரிய, சந்திர, அக்கினி) ஆகியவற்றைப் பெற்றுள்ளது.

 • இத்திருக்கோயிலில் உள்ள முக்குளத்தில் (வெண்காட்டு முக்குளநீர்) நீராடி இறைவனை வழிபடின் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஞானசம்பந்தர் அமுதவாக்கு.

 • "சங்குமுகம் ஆடி சாயாவனம் பார்த்து, முக்குளமும் ஆடி முத்திபெற வந்தானோ" என்று ஒரு தாலாட்டுப் பாட்டும் இத்தல முக்குளச் சிறப்பை விளக்குகின்றது.

 • இத்தலம் புதன் கிரகம் உரியவர்கள் வழிபடவேண்டிய சிறப்புத் தலமாகும். புதன் சந்நிதிக்குப் பக்கத்தில் முள் இல்லாத வில்வமரம் உள்ளது.

 • இத்தலத்தில் சந்திரன் வழிபட்ட லிங்கம் உள்ளது.

 • அகோரமூர்த்தியின் மூல மற்றும் உற்சவ திருமேனிகள் அற்புத வேலைபாடகளமைந்துள்ளன; காணத்தெவிட்டாத கலையழகு.

 • நடராசசபை தில்லையைப் போலச் செப்பறையில் அமைந்துள்ளது; உள்ளே உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தில்லையைப் போலவே நாடொறும் அபிஷேகம் நடைபெறுகிறது. சிதம்பர இரகசியமும் உள்ளது.

 • துர்க்கை இங்கு மேற்கு நோக்கியிருப்பது விசேஷமானது. திருமணமாகாதோர் இச்சந்நிதியில் பிரார்த்தனை செய்து கொள்வது மரபாக இருந்து வருகின்றது.

 • மூலவர் உட்புறச் சுவரில் தலப்பதிக கல்வெட்டுகள் உள்ளன.

 • நாடொறும் ஆறுகால வழிபாடுகள்; சுவேதாரண்யேசுவரருக்கு காமிகாகமத்தின்படியும், அகோரமூர்த்திக்கு காரணாகமத்தின்படியும், நடராசப்பெருமானுக்கு மகுடாகமத்தின்படியும் பூசைகள் நடைபெறுன்றன.

holy pond of the temple; called chandra thIrththam

view the temple

view the vimAnA of natarAjar

holy pond of the temple

holy pond of the temple; called sUriya thIrththam

அமைவிடம் :

இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை - மங்கைமடம் செல்லும் நகரப் பேருந்துகள் திருவெண்டுகாடு வழியாகச் செல்கின்றன.

< PREV <
காவிரி வடகரை 10வது
தலம் திருபல்லவனீச்சரம்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 12வது
தலம் கீழைத்திருக்காட்டுப்பள்ளி