திருத்தூங்கானைமாடம்
(பெண்ணாகடம்)

இறைவர் திருப்பெயர்		: சுடர்க்கொழுந்தீசர், பிரளய காலேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: ஆமோதனம்பாள், கடந்தை நாயகி, அழகிய காதலி.
தல மரம்			: சண்பகம்.
தீர்த்தம்				: கயிலைத்தீர்த்தம், பார்வதிதீர்த்தம் (பரமானந்ததீர்த்தம்), 
				 இந்திரதீர்த்தம், முக்குளம், வெள்ளாறு.
வழிபட்டோர்			: தேவகன்னியர், காமதேனு, வெள்ளையானை, இந்திரன், 
				 பார்வதி ஆகியோர்.
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் -	ஒடுங்கும் பிணிபிறவி.
				 2. அப்பர்  -	பொன்னார் திருவடிக்கு.

pennakadam temple

தல வரலாறு

 • இவ்வூரில் ஆறாயிரம் கடந்தையர்கள் (வீரமக்கள்) வாழ்ந்ததால் 'கடந்தை நகர் ' எனப் பெயர் பெற்றதென்பர்.

 • ஆழிபுரண்டக்கால் அசையாது அதிகார நந்தி மூலம் பிரளய கால வெள்ளத்தைத் தடுத்த பெருமானின் திருத்தலம்.

 • இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த தேவகன்னியர் இத்தலத்து இறைவனைக் கண்டு மகிழ்ந்து வழிபாடியற்றி வாழ்ந்தனர். மலர் வராமைக் கண்ட இந்திரன் காமதேனுவை அனுப்ப அது வந்து, நிலையறிந்து, தானும் இறைவனை வழிபட்டு நின்றது. காமதேனுவை தேடிச்செல்லுமாறு இந்திரன் தன் வெள்ளையானையை அனுப்ப, அதுவும் வந்து, நிலைமை கண்டு, இறைவனை வணங்கி, அங்கேயே நின்றுவிட, ஒன்றும் புரியாத இந்திரன், தானே புறப்பட்டுத் தேடிவந்து, நிலைமையறிந்து, பெருமானை வழிபட்டான் என்பது வரலாறு. எனவே மேற்சொல்லிய மூவரும் (பெண் + ஆ + கடம்) வழிபட்டதலம் - பெண்ணாகடம் எனப் பெயர் பெற்றதென்பர்.

 • இக்கோயிலுக்கு 'தூங்கானைமாடம்' (கஜப் பிரஷ்டம்) என்பது பெயர்.

 • காமதேனு பூசை செய்யும்போது வழிந்தோடிய பால் கயிலை தீர்த்தத்தில் நிரம்பி குளமாகியது என்பர்.

 • மூலஸ்தானத்திற்கு வடபால் கட்டு மலைமேல் சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி தனிக்கோபுரத்துடன் கூடிய கோயில் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் உள்ள சௌந்தர சோழபுரத்தில் வாழ்ந்த சௌந்தரவல்லி என்னும் தேவரடியார், பண்டம் மாற்ற இத்தலத்திற்கு வரும்போது, கடைவீதியிலிருந்தே வழிபடுவதற்கேற்ப இக்கோயில் கட்டப்பட்டதென்று ஒரு செய்தி சொல்லப்படுகிறது.

 • வெள்ளாற்றின் கரையில் உள்ள இத்தலத்தினை வழிபட வந்த சோழ மன்னன், ஆற்றில் வெள்ளம் வந்தமையால் அக்கரையில் இருந்தவாறே தவஞ்செய்ய, அவனுக்கு அருள்புரியவேண்டி, இறைவன் அவன் காணுமளவுக்கு உயர்ந்து காட்சி தந்தார்; அதுவே இம்மலைக் கோயிலாகும் என்ற செவிவழிச் செய்தியொன்றும் சொல்லப்படுகிறது.

 • கலிக்கம்ப நாயனாரால் வெட்டுண்ட அவர் மனைவியின் கை மீண்டும் துளிர்க்க அருளிச் செய்த பிரான் ஆதலின் இறைவனுக்கு 'கைவழங்கீசர் ' என்ற பெயரும் உண்டு.

சிறப்புக்கள்

 • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரின் பாடல் பெற்றத் தலம்.

 • அப்பர் - சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலம்.

 • கலிக்கம்ப நாயனார் அவதரித்து சிவத் தொண்டாற்றிய சிவப்பதி. நாயனாரின் திருவுருவச் சிலை திருக்கோயிலில் உள்ளது.
  	அவதாரத் தலம்	: பெண்ணாகடம் (தூங்காணைமாடம்).
  	வழிபாடு		: சங்கம வழிபாடு.
  	முத்தித் தலம் 	: பெண்ணாகடம்.
  	குருபூசை நாள் 	: தை - ரேவதி.
  

 • பணியாளே சிவனடியாராக வரக்கண்டு, நீர் வார்க்கத் தாமதித்த மனைவியின் கையை வெட்டிய கலிக்கம்ப நாயனார் வீடுபேறு பெற்றதலம்

 • மெய்க்கண்டாரின் அவதாரத் தலம்.

 • கோயிலின் முன் வாயிலில் தென்பால் குடவரை விநாயகரை இருக்கிறார்.

 • இக்கோபுரவாயிலில் மேல்பக்கச் சுவரின் தென்பால் மெய்கண்டார் கோயில் உள்ளது. நேர் எதிரில் கலிக்கம்ப நாயனார் காட்சி தருகிறார்.

 • 30 அடி உயரமுள்ள அழகான துவஜஸ்தம்பம் அருகில் கிழக்கு நோக்கிய பிரதோஷ நந்தி சந்நிதி உள்ளது.

 • மூலவரின் - கர்ப்பக் கிருகத்தின் விமானம் ஐராவதம் வழிபட்டதற்கு அடையாளமாக யானை நிற்பதுபோல் (கஜப்ருஷ்ட அமைப்பு) அமைந்துள்ளது.

 • மூலவர் சுயம்பு லிங்கம்; சற்று உயரமானது, ஆவுடையார் சதுர வடிவானது.

 • கர்ப்பக்கிருகத்தின் முன்வாயில் தவிர, ஏனைய மூன்று புறங்களிலும் இறைவனைக் கண்டு வணங்குமாறு சன்னல்கள் - பலகணிகள் அமைந்திருப்பது சிறப்புடையது.

 • தலமரத்தின் கீழ் சண்டேஸ்வரரின் சந்நிதி உள்ளது.

 • இத்தலத்திற்கு, ஐராவதம் வழிபட்டதால் 'தயராசபதி' என்றும், ஆதிநாளில் மலர்வனமாக விளங்கியதால் 'புஷ்பவனம், புஷ்பாரண்யம்' என்றும் இந்திரன் வழிபட்டதால் 'மகேந்திரபுரி' என்றும், பார்வதி வழிபட்டதால் 'பார்வதிபுரம்' என்றும், நஞ்சுண்ட இறைவனின் களைப்பைத் தீர்த்த தலமாதலின் 'சோகநாசனம்' என்றும், சிவனுக்குகந்த பதியாதலின் 'சிவவாசம்' என்றும் வேறு பெயர்கள் உள்ளன.

 • சித்திரை சதய விழாவில் அப்பர் சுவாமிகள் சைவ சமயஞ்சார்ந்து, இறைவனை வேண்டி, சூலமும் இடபக்குறியும் பொறிக்குமாறு வேண்டிப்பெற்ற விழா கொண்டாடப்படுகிறது.

 • மெய்கண்டாரின் தந்தையார் அச்சுத களப்பாளர் இப்பகுதியில் வாழ்ந்தவராவார்.

 • மெய்கண்டாரின் தந்தையான அச்சுத களப்பாளர் பெயரில் ஊருக்கு மேற்கில் 'களப்பாளர்மேடு' என்னும் இடமுள்ளது; அங்கு மெய்கண்டாருக்கு சிறிய கோயில் உள்ளது.

 • மறைஞான சம்பந்தர் பிறந்த தலமும் இதுவே. இவர் பெயரில் தனி மடம் உள்ளது.

 • சேது மகாராசா இத்திருக்கோயிலில் திருப்பணிகள் செய்ததோடு தேரும் அமைத்துத் தந்துள்ளார்.

 • சோழர் காலக் கல்வெட்டுக்கள் பல இக்கோயிலில் உள்ளன. கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவன் "தூங்கானைமாடமுடைய நாயனார்" என்று குறிப்பிடப்படுகின்றனர்.

 • கோயிலுக்குப் பொன், பசு, நிலம் முதலியவை விட்ட செய்திகள், கல்வெட்டால் தெரிய வருகின்றன.

அமைவிடம்

	அ/மி. பிரளயகாலேசுவரர் திருக்கோயில், 
	பெண்ணாகடம் & அஞ்சல், 
	விருத்தாச்சலம் வழி, 
	திட்டக்குடி வட்டம், 
	கடலூர் மாவட்டம் - 608 105.

	தொலைபேசி : +91-9976995722, 04143 - 222788.

மாநிலம் : தமிழ் நாடு
விழுப்புரம் - திருச்சி பாதையில் விருத்தாச்சலத்திற்கு அருகிலுள்ள புகைவண்டி நிலையம். விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி செல்லும் பாதையில் (விருத்தாசலத்திலிருந்த 17-கி. மீ. தொலைவில்) உள்ளது. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் தொழுதூரிலிருந்து 15-கி. மீ. தொலைவில் உள்ளது.

தொடர்பு :

 • 04143 - 222788, 098425 64768.

< PREV <
நடு நாட்டு 1வது தலம்
திருநெல்வாயில் அறத்துறை
Table of Contents > NEXT >
நடு நாட்டு 3வது தலம்
திருக்கூடலையாற்றூர்

 • கலிக்கம்ப நாயனார் வரலாறு (மூலம்)