திருப்புள்ளமங்கை (பசுபதி கோயில்)

இறைவர் திருப்பெயர்		: பிரமபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர், பசுபதீஸ்வரர், பசுபதிநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: அல்லியங்கோதை, சௌந்தரநாயகி.
தல மரம்			: ஆலமரம்.
தீர்த்தம்				: எதிரில் உள்ள திருக்குளம்.
வழிபட்டோர்			: பிரம்மா.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - பாலுந்துறு திரளாயின.

view of rAjagOpuram

தல வரலாறு

 • ஊர்ப்பெயர் பண்டை நாளில் 'புள்ள மங்கை' என்றும், கோயிற் பெயர் 'ஆலந்துறை' என்றும் வழங்கப்பெற்றது. இன்று ஊர்ப் பெயர் மாறி 'பசுபதி கோயில்' என்று வழங்குகின்றது. 'புள்ளமங்கை' என்றதற்கேற்ப இப்போதும் கோபுரத்தில் கழுகுகள் இருக்கின்றன.

 • குடமுருட்டி ஆற்றின் கரையில் திருக்கோயில் உள்ளது. ஆலமரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய நீர்த்துறை தலம் ஆதலின் 'ஆலந்துறை' என்று பெயர் பெற்றிருத்தல் வேண்டுமென்பர்.

 • அமுதத்தைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் இஃது என்பது தலபுராணச் செய்தி.

 • பிரம்மா பூஜித்து சாபவிமோசனம் பெற்றமையால் சுவாமி இங்கு பிரமபுரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு விளங்குகின்றார்.

சிறப்புகள்

 • திருச்சக்கரப்பள்ளியின் சப்தஸ்தானத் தலங்களுள் இத்தலமும் ஒன்று.

 • அகழி அமைப்புடைய கர்ப்பக்கிருகம்; கீழே கருங்கல் கட்டமைப்பும் மேலே சுதை அமைப்பும் உடையது.

 • விமானத்தின் கீழ் சிவபுராணம், 108 நாட்டிய கரணங்கள், இராமாயண காட்சிகள் ஆகியன சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.

 • இக்கோயிலில் நவக்கிரகங்களுக்கு நடுவில் நந்தி உள்ளார்.

 • இங்குள்ள துர்க்கை - மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கிறது. கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம், வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களை ஏந்தி, இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க; இரு வீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சித்தர; திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் பின்புறம் அம்பறாத்தூணி விளங்க, துர்க்காம்பிகை விளங்கும் கோலம் - இக்கோலம் தனிச் சிறப்பு. (திருநாகேச்சுரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கை ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை என்றும்; இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.)

 • இக்கோயில் கல்வெட்டுக்களில் "ஆலந்துறை மகாதேவர் கோயில்" என்று குறிக்கப்படுகிறது.

 • முதலாம் பராந்தகன் காலத்தில் (கி. பி. 907 - 955) கருவறையும், அர்த்த மண்டபமும் திருப்பணி செய்யப்பெற்றுள்ளன.

 • (சம்பந்தர் இப்பாட்டில் 'பொந்தின்னிடைத் தேன்ஊறிய' என்று பாடியிருப்பதற்கேற்ப, கோயில் சாளரத்தில் தேனடை இருக்கின்றது.)

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சையிலிருந்து பசுபதிகோயிலுக்குப் பேருந்து வசதியுண்டு. திருவையாறு - கும்பகோணம் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கின்றது. கும்பகோணம் - தஞ்சாவூர் இருப்புப் பாதையில் பசுபதிகோயில் புகைவண்டி நிலையம் உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 15வது
தலம் திருத்தென்குடித்திட்டை
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 17வது
தலம் திருச்சக்கரப்பள்ளி

சப்த மங்கைத் தலங்கள்:
< PREV <
தாழமங்கை
Table of Contents > NEXT >
சக்கரமங்கை