திருப்பந்தணைநல்லூர் (பந்தநல்லூர்)

இறைவர் திருப்பெயர்		: பசுபதீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: வேணுபுஜாம்பிகை, காம்பனதோளியம்மை.
தல மரம்			: சரக்கொன்றை.
தீர்த்தம்				: சூரியதீர்த்தம்.
வழிபட்டோர்			: காமதேனு, திருமால், கண்வமகரிஷி, வாலி, இந்திரன், 
				 பிரமன், சூரியன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் -	இடறினார் கூற்றைப். 
				 2. அப்பர்  -	நோதங்க மில்லாதார்.

robust figure of rAjagOpuram

தல வரலாறு :

 • மக்கள் வழக்கில் பந்தநல்லூர் என்று வழங்குகிறது.

 • உமாதேவி பந்துகொண்டு விளையாட விரும்பினாள். இறைவனும் நால்வேதங்களையே பந்துகளாக்கித் தந்துதவினார். உமாதேவி மிகவும் விருப்புடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அதற்கு இடையூறாக ஆகலாகாது என்றெண்ணிச் சூரியன் அஸ்தமிக்காதிருந்தான். காலநிலை மாறுவதுகண்டு தேவர்கள் இறைவனிடம் முறையிட்டனர். இறைவனும் அவ்விடத்திற்கு வந்தார். அவரையும் கவனியாது உமை விளையாடிக்கொண்டிருந்தாள். அஃதறிந்த இறைவன் கோபங்கொண்டு, அப்பந்தை தன் திருவடியால் எற்றிட்டார். பந்தைக் காணாத உமை, இறைவனிடம் வந்து வணங்க, அம்பிகையை பசுவாகுமாறு சபித்தார். சாபவிமோசனமாக, அப்பந்து விழும்தலத்தில், கொன்றையின்கீழ் தாம் வீற்றிருப்பதாகவும், அங்கு வந்து வழிபடுமாறும் பணித்தார். அவ்வாறே திருமாலை உடன் ஆயனாக அழைத்துக்கொண்டு, பசு உருவில் (காமதேனுவாகி) கண்வ முனிவர் ஆசிரமம் அடைந்து அங்கிருந்து வந்தார். அங்கிருக்கும் நாளில் புற்று உருவிலிருந்த இறைவன் திருமேனிக்குப் பால் சொரிந்து வழிபட்டு வந்தார். ஆயனாக வந்த திருமால் நாடொறும் கண்வமுனிவரின் அபிஷேகத்திற்குப் பால் தந்து வந்தார். ஒரு நாள் பூசைக்குப் பசுவிடம் பால் இல்லாமைக் கண்டு, சினமுற்றுப் பசுவின் பின்சென்று அதுபுற்றில் பால் சொரிவதுகண்டு சினந்து பசுவைத் தன் கைக்கோலால் அடிக்க, அப்பசுவும் துள்ளிட, அதனால் அதன் ஒருகாற் குளம்பு புற்றின்மீது பட - இறைவன் ஸ்பரிசத்தால் உமாதேவி தன் சுயவுருவம் அடைந்து சாபவிமோசனம் நீங்கி அருள் பெற்றாள். பசுவுக்குப் பதியாக வந்து ஆண்டுகொண்டமையால் சுவாமி பசுபதி என்று பெயர் பெற்றார். இறைவன் எற்றிய பந்து வந்து அணைந்த இடமாதலின் பந்தணைநல்லூர் என்று ஊர்ப் பெயருண்டாயிற்று. மூலவரின் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு பதிந்திருப்பதை இன்றும் காணலாம்.

 • காம்பீலி மன்னனின் மகன் குருடு நீங்கிய இடம். இதனால் இம்மன்னன் தன் மகனுக்கு பசுபதி என்று பெயர் சூட்டியதோடு, திருக்கோயில் திருப்பணிகளையும் செய்து வழிபட்டதாக வரலாறு. இது தொடர்பாகவே இங்குள்ள திருக்குளம் இன்றும் காம்போச மன்னன் துறை என்றழைக்கப்படுகிறது.

full appearance of the temple

சிறப்புகள் :

 • தென்கயிலை, கோவூர், கொன்றைவனம், விஷ்ணுபுரி, இந்திரபுரி, கணவராச்சிரமம், வாலிநகர், பானுபுரி, ஆவூர், கந்துகபுரி என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.

 • மூலவர் - புற்று - சுயம்பு மூர்த்தி.

 • (விநாயகர் - பக்கதில் சுவர் ஓரத்தில் இவ்வூர்க்கோட்டையில் புதைந்து கிடந்து கண்டெடுக்கப்பட்ட பலரகமான குண்டுகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை சோழர் காலத்து யவனப் பொறிகளை எறிவதற்காகச் சேகரித்த குண்டுகளாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.)

 • தனிக்கோயிலாக பரிமளவல்லித் தாயாருடன் ஆதிகேசவப்பெருமாள் வீற்றிருக்கின்றார். இவர்தான் உமையுடன் ஆயனாக வந்தவர்.

 • சுவாமி சந்நிதி நுழைவாயிலுக்கு "திருஞான சம்பந்தர் திருவாயில் " என்று பெயரிடப்பட்டுள்ளது.

 • இருபுறங்களிலும் தலப்பதிகங்கள் பதித்த கல்வெட்டுக்கள் உள்ளன.

 • கோயிலுள் பிரமன், வாலி முதலியோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

 • நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே வரிசையாக காட்சியளிக்கின்றன.

 • புற்றில் பால்சொரிந்து சொரிந்து வெண்மையாகியதால் இலிங்கத் திருமேனி வெண்ணிறமாக உள்ளது; மூலவர் புற்றாதலின் குவளை (கவசம்) சார்த்தியே அபிஷேகம் நடைபெறுகின்றது.

 • அம்பாள் தவம் செய்யுங் கோலமாதலின் இருபுறமும் ஐயனாரும் காளியும் காவலாகவுள்ளனர்.

 • கோயிலுக்கு சுமார் 900 ஏக்கர் நிலம் இருக்கின்றது. (இவ்வளவு நிலமிருந்தும் பயனின்றியுள்ளது; வழிபாடு நடப்பதே சிரமமாகவுள்ளதாம்)

 • சோழர், விசயநகரர் காலத்திய கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவன் பசுபதிதேவர் என்றும், முதலம் இராசராசன் கல்வெட்டில் இத்தலம் 'பந்தணைநல்லூர் ' என்றும் குறிக்கப்படுகின்றது.

 • இங்குள்ள கல்வெட்டொன்று முதலாம் இராசராசன் அரியணையேறிய 11-ஆம் ஆண்டில் செம்பியன்மாதேவி, ஒருவிளக்குக்குப் பன்னிரண்டு கழஞ்சு பொன்வீதம் மூன்று விளக்குகளுக்கு நிபந்தம் அளித்த செய்தியைத் தெரிவிக்கின்றது.

அமைவிடம்

இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - பந்தநல்லூர், திருப்பனந்தாள் - பந்தநல்லூர் பேருந்து வசதிகள் உள்ளன.

தொடர்பு :

 • 0435 - 2450595, 09865778045.

< PREV <
காவிரி வடகரை 34வது
தலம் திருகடம்பூ
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 36வது
தலம் கஞ்சனூர்