திருப்பனந்தாள்

இறைவர் திருப்பெயர்		: செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், ஜடாதரர், 
				 அருணஜடேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: பிருகந்நாயகி, பெரிய நாயகி, தாலவனேஸ்வரி.
தல மரம்			: பனை.
தீர்த்தம்				: பிரம தீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம் 
				 முதலிய பல தீர்த்தங்கள்.
வழிபட்டோர்			: பிரமன், திருமால், இந்திரன், ஐராவதம், அகத்தியர், 
				 சூரியர், சந்திரன், ஆதிசேஷன், 	
				 நாககன்னிகை, தாடகை, குங்கிலியக்கலய நாயனார் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - கண்பொலி நெற்றியினான்.
thirupanandal temple

தல வரலாறு

 • பனையின் தாளின் இறைவன் எழுந்தருளியிருத்தலாலும்; பனைமரம் தலமரமாதலின் பனந்தாள் என்று பெயர் பெற்றது. கோயிலுக்கு தாடகையீஸ்வரம் - தாடகேச்சுரம் என்று பெயர்; தாடகை பூசித்தமையால் இப்பெயர் பெற்றது.

 • தாடகை என்னும் (இத் தாடகை என்னும் பெண் இராமாயாணத்தில் வருபவள் அல்லள்) பெண் ஒருத்தி புத்திரபேறு வேண்டி இத்தலத்துப் பெருமானை வழிபட்டு வந்தாள். ஒரு நாள் இறைவனுக்கு மாலை சாத்தும்போது, ஆடை நெகிழ, அதனை இரு முழங்கைகளாலும் பற்றிக்கொண்டு, மாலை சாத்த முடியால் வருந்த, அவளுக்கு இரங்கிப் பெருமான் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றருளினார். அன்று முதல் சாய்வாக இருந்த சுவாமியின் திருமுடியைப் பின்னால் குங்குலிய நாயனார் மாற்றினார்.

 • தல விருட்சத்தின் பக்கத்தில் உள்ள சிவலிங்கத்தையடுத்துள்ள கிணறு, நாககன்னிகை பிலம் எனப்படும். இதன் வழியாக நாககன்னியர் வந்து இறைவனை வழிபட்டதாக ஐதீகம் சொல்லப்படுகிறது.

சிறப்புகள்

 • இத்தலத்திற்கு தாலவனம் (தாலம் - பனை) என்றும் பெயருண்டு. பிராகாரத்தில் இரண்டு ஆண் பனைமரங்கள் உள்ளன.

 • மூலவர் சுயம்பு மூர்த்தி.

 • சுவாமி விமானம் பிரணவவடிவில் மூன்று ஸ்தூபிகளுடன் விளங்குகிறது.

 • பதினாறுகால் மண்டபத்தில் தாடகைக்காகப் பெருமான் வளைந்து கொடுத்ததும், குங்குலியக்கலயனார் பெருமானின் வளைவை நிமிர்த்தியதுமாகிய சிற்பங்கள் உள்ளன.

 • இத்தலத்தில் தான் குமரகுருபர சுவாமிகள் நிறுவியுள்ள ஸ்ரீ காசிமடம் உள்ளது.

 • திருப்பனந்தாளில் வாழ்ந்த நக்கன்தரணி என்பவனால் இக்கோயில் கருங்கல்லால் கட்டப்பட்டது.

 • இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் மேற்கு கோபுரத்தின் தென்பால், குங்குலியக்கலய நாயனாரின் கோயில் உள்ளது. இந்நாயனாரின் மனைவியின் பெயர் நீலாயி என்று கல்வெட்டு கூறுகிறது.

 • கல்வெட்டில் இத்தலம் திருத்தாடகை ஈச்சரம் என்றும் இறைவன் பெயர் தாடகேச்சரத்து மகாதேவர் என்றும் குறிக்கப்படுகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணத்திலிருந்தும் மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்தில் செல்லலாம்.

தொடர்பு :

 • 0435 - 2456047, 09443116322.

< PREV <
காவிரி வடகரை 38வது
தலம் திருமங்கலக்குடி
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 40வது
தலம் திருஆப்பாடி