திருப்பாலைத்துறை

இறைவர் திருப்பெயர்		: பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர்.

இறைவியார் திருப்பெயர்		: தவளவெண்ணகையாள். (மக்கள் தவளாம்பிகை, 
				  தவளாம்பாள் என வழங்குகின்றனர்)

தல மரம்			: பாலை. (இப்போதில்லை)

தீர்த்தம்				: வசிஷ்டதீர்த்தம், இந்திர தீர்த்தம், எம தீர்த்தம் முதலியன.

வழிபட்டோர்			: திருமால், பிரமன், திசைப்பாலகர்கள், வசிட்டர், அருச்சுனன், 
				  தேவர்கள் முதலியோர்.

தேவாரப் பாடல்கள்		: அப்பர் - நீல மாமணி கண்டத்தர்.

front appearance of the temple

தல வரலாறு :

  • பாண்டவர்களின் வனவாச காலத்தில், தௌமிய முனிவரின் ஆலோசனைப்படி அருச்சுனன் இத்தலத்திற்கு வந்து, வழிபட்டு, வில்வித்தையின் நுட்பங்களை உணர்ந்து, பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து வந்தான் என்று சொல்லப்படுகிறது.

  • தாருகாவனத்து முனிவர்கள், இறைவனைப் புறக்கணித்து அவரையே அழிக்க எண்ணி, தீயவேள்வி செய்து, புலியை வரவழைத்து, அதை இறைவன் மீது ஏவ, இறைவனும் அப்புலியின் தோலை உரித்து உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலம்.

view the temple

சிறப்புக்கள் :

  • இத்தலம் பாலைவனம், பிரம்மவனம், அரசவனம், புன்னாகவனம் எனப்பல பெயர்களால் சிறப்புறப்படுகிறது.

  • வேதங்களின் நடுவணதாகிய யஜுர்வேதத்தின் நடுவின் பஞ்சாக்ஷரம் விளங்குவது போல, திருமுறைகளில் தேவாரத்துள் நடுவணதாகிய அப்பர் தேவாரத்துள், குறுந்தொகையில், நடுப்பதிகமாகிய 51-ஆவது பதிகம் இத்தலத்துப் பதிகமாகும். இப்பதிகத்தின் நடுப்பாடலாக உள்ள "விண்ணினார் பணிந்து " என்று தொடங்கும் பாடலின் நடுவில் சூட்சும பஞ்சாக்ஷரம் விளங்குகிறது. இச்சிறப்பினையுடைய (பதிகத்திற்கு) உரிய தலம் இதுவேயாகும்.

  • கோயில் கீழ்ப்பகுதி கருங்கல்லிலும், மேற்பகுதி செங்கற் கட்டமைப்பிலும் காணப்படுகிறது.

  • கோயிலுள் பெரிய நெற்களஞ்சியம் உள்ளது - வட்ட வடிவில் கூம்பு முனையுடன் செங்கல்லால் கட்டப்பட்டுள்ள இக்களஞ்சியம் 12 ஆயிரம் கலம் கொள்ளளவுடையது. இவ்வளவு அதிகமான நெல் வருவாயைக் கொண்டதாக இக்கோயில் விளங்கியதென்பது நமக்குத் தெரிகிறது. (தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது.)

  • பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், வசிஷ்டர், மகாலட்சுமி, பார்த்திபன், மலையத்துவசன் ஆகியோர் வழிபட்ட சிவலிங்கள் உள்ளன.

  • சுவாமி, அம்பாள் இருவரும் கல்யாணத் திருக்கோலத்தில் விளங்குகின்றனர்.

  • இக்கோயிலில் முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் இராசராசன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோருடைய காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

  • கல்வெட்டுக்களில் இவ்வூர், "நித்தவிநோத வளநாட்டு நல்லூர் நாட்டைச் சேர்ந்த ஊர் " என்றும்; இறைவன் "திருப்பாலைத்துறை மகாதேவர் " என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

  • (முதற் குலோத்துங்கன் காலத்தில் இக்கோயில் கருங்கல் திருப்பணியாக ஆக்கப்பெற்றிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்கள் கருத்தாக உள்ளது.)

அமைவிடம்

இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம் - கோயில் வாயிலில் இறங்கலாம். கும்பகோணம் - தஞ்சை இருப்புப் பாதையில் பாபநாசம் நிலையத்தில் இறங்கி 1 கி. மீ. வடகிழக்கில் சென்று இத்தலத்தை அடையலாம்.

< PREV <
காவிரி தென்கரை 18வது
தலம் திருக்கருகாவூர்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 20வது
தலம் திருநல்லூர்