திருவோத்தூர் கோயில் தலவரலாறு (திருவத்திபுரம், செய்யாறு)

Sthala Puranam of Tiruvothur Temple

	இறைவர் திருப்பெயர்	: வேதபுரீஸ்வரர், வேதநாதர்.
	இறைவியார் திருப்பெயர்	: பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி.
	தல மரம்		: பனை.
	தீர்த்தம்			: கோயிலுள் உள்ள கிணறு.
	வழிபட்டோர்		: தொண்டைமான்.
	தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - பூத்தேர்ந் தாயன கொண்டு.

kOil rAjagOpuram

தல வரலாறு

 • மக்கள் வழக்கில் செய்யாறு, திருவத்திபுரம், திருவத்தூர் என்றெல்லாம் வழங்கப்படுகிறது. கோயில் உள்ள பகுதி திருவத்திபுரம் ஆகும்.

 • ஓத்து - வேதம். இறைவன் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலின் ஓத்தூர் - 'திரு' அடைமொழி சேர்ந்து 'திருஓத்தூர் ' - திருவோத்தூர் என்றாயிற்று.

 • சம்பந்தர் பதிகம் பாடி, இப்பெருமான் அருளால் ஆண்பனை, பெண்பனையான பெரும்பதி.

 • நத்தி சுவாமியை நோக்கியிராமல் முன் கோபுரத்தைப் பார்த்தவண்ணம் உள்ளது. இதுகுறித்து தலப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ள வரலாறு - விசுவாவசு என்னும் மன்னனின் வலிமைக்கு ஆற்றாது தோற்று, ஓடி, காட்டில் திரிந்த தொண்டைமான் வேதபுரீஸ்வரரைத் துதித்து வழங்கினான். இறைவன் காட்சி தந்து, அவனுக்கு அதிக பலத்தையும் சேனைகளையும் அருளி, விசுவாவசுவுடன் போரிட்டு மீண்டும் தன் அரசை எய்துமாறு பணித்தார். கேட்ட மன்னன் 'எங்ஙனம் போரிடுவேன்' என்று அஞ்சியபோது, 'நந்தி உனக்கு படைத் துணையாக வருவார், நீ அதற்கு முன்பாக யாம் கொடுத்த சேனைகளோடு சென்று போரிடுவாயாக' என்றார். மேலும்; "நாம் கூறியதில் உன் மனத்திற்கு சந்தேகமிருப்பின் சாட்சி காட்டுகின்றோர். நீ போய்ப்பார்; அந்த நந்திதேவன் கீழ்த்திசை நோக்கியிருக்கின்றார்." என்றார். அவ்வாறே தொண்டைமான் வந்து பார்க்க, (அவனுக்கு படைத்துணையாகும் நிலையில்) மேற்கு நோக்கியிருந்த நந்திதேவர் கீழ்த்திசையில் திரும்பியிருப்பதைக் கண்டு பயம் நீங்கினான். இறைவன் நந்தியைத் தளபதியாக்கி, சிவகணங்களைக் குதிரைகள் யானைகள் தேர்களைச் சேனைகளாகச் செய்து தந்து, தொண்டடைமானைப் போர்க்கு அனுப்ப, அவனும் அவ்வாறே சென்று, விசுவாவசுவை வென்று நாட்டாட்சியை அடைந்தான்.

thala vruksham


சிறப்புகள்

 • ஆலயத்துள் வெளிப் பிரகாரத்தில் (தல மரமான) பனைமரங்கள் உள்ளன.

 • அம்பாள் சந்நிதிக்கு எதிரில் தலத்து ஐதீகமான பனைமரம், ஞானசம்பந்தர், சிவலிங்கம் கல்லில் (சிலா ரூபத்தில்) அமைக்கப்பட்டுள்ளன.

 • பஞ்சபூதத் தலங்களை நினைவூட்டும் வகையில், தனித்தனி சிவலிங்கத் திருமேனிகள், தனித்தனி சந்நிதிகளாக - திருச்சிற்றம்பலவன், திருக்காளத்தியார், திருஆனைக்காவுளார், திருவண்ணாமலையார், திருவேகம்பன் சந்நிதிகளாக அமைந்துள்ளன.

 • சண்டேஸ்வரர் - ஒரு காலை மடக்கி, ஒரு காலைத் தொங்கவிட்டு, ஒருகையில் மழுவுடன்; ஒரு கையை மடக்கிய காலின் தொடைமீது வைத்தவாறு காட்சி தருகிறார்.

 • தட்சிணாமூர்த்திக்கும், துர்க்கைக்கும் தனிக் கோயிலாக உள்ளது.

 • இராசாதிராசன், குலோத்துங்கன், இராசேந்திரன், விக்ரமசோழன் முதலியோர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

 • கல்வெட்டில் இறைவன், 'ஓத்தூர் உடைய நாயனார் ' என்று குறிக்கப்படுகின்றார். மேலும் வழிபாட்டிற்கும், நிவேதனத்திற்கும், அர்ச்சகர்க்கும் நிலம் விடப்பட்ட செய்திகள் கல்வெட்டுக்களால் தெரியவருகின்றன.

 • திருவோத்தூர்த் தலபுராணம் இயற்றியவர் கருணாகரக் கவிராயர்.

Ottur temple pirAkArach chuRRu

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
வந்தவாசி, திருவண்ணாமலை, போளூர், ஆரணி முதலிய ஊர்களில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.

தொடர்பு :

 • 04182 - 224387

< PREV <
தொண்டை நாட்டு 7வது
தலம் திருமாறகல்
Table of Contents > NEXT >
தொண்டை நாட்டு 9வது தலம்
திருவன்பார்த்தான்பனங்காட்டூர்