திருமுண்டீச்சரம் (கிராமம்)

இறைவர் திருப்பெயர்		: சிவலோகநாதர், முடீஸ்வரர், முண்டீசர்.
இறைவியார் திருப்பெயர்		: சௌந்தர்யநாயகி, கானார்குழலி, 
				 செல்வநாயகி, செல்வாம்பிகை.
தல மரம்			: வன்னி (இப்போது இல்லை)
தீர்த்தம்				: முண்டக தீர்த்தம் (அ) பிரம்ம தீர்த்தம்.
வழிபட்டோர்			: திண்டி, முண்டி (இவர்கள் இறைவனின் 
				 காவலர்களாவர்), பிரமன், இந்திரன் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள்		: அப்பர் - ஆர்த்தான்காண் அழல்நாகம்.

Tirumunicharam temple

தல வரலாறு

 • பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள தலம். மக்கள் இவ்வூரைக் "கிராமம்" என்று அழைக்கின்றனர்.

 • துவாபர யுகத்தில் சொக்கலிங்க மன்னன் என்பவன் வேட்டைக்கு வந்தபோது குளத்தில் ஒரு அதிசயமான தாமரை மலரைக் கண்டான்; ஆள் அனுப்பி, அம்மலரை பறித்து வருமாறு கட்டளையிட்டான். அவனும் சென்று பறிக்கையில் அம்மலர் அவன் கைக்கு அகப்படாமல் சுற்றி வரலாயிற்று. அதுகண்ட மன்னன், அதன்மீது அம்பெய்த; குளம் முழுவதும் செந்நிறமாயிற்று. அது கண்ட மன்னன் மயங்கி அதனருகே சென்று பார்த்தபோது அம்மலரில் இலிங்கமிருப்பதைக் கண்டான்; அதை எடுத்து அக்குளக்கரையில் ஆலயம் எடுப்பித்துப் பிரதிஷ்டை செய்தான் என்று வரலாறு சொல்லப்படுகிறது. மன்னன் அம்பு எய்திய காரணத்தால் இன்றும் சுவாமி மீது அம்புபட்ட தழும்புள்ளது. இதனால் சுவாமிக்கு 'முடீஸ்வரர் ' என்றும் பெயர் வந்தது. இப்பெயரே கல்வெட்டில் "மௌலி கிராமம்" என்று குறிக்கப்படுகின்றது. நாளடைவில் மக்கள் 'மௌலி ' என்பதை விட்டுவிட்டு 'கிராமம்' என்றே அழைக்கலாயினர். 'முடீச்சுரம்' என்ற பெயர் 'முண்டீச்சுரம்' என்றாயிற்று என்பதும் எண்ணத்தக்கது.

 • வீரபாண்டியன் என்னும் மன்னனுக்கு இப்பெருமான் திருநீற்றுப் பை, (பொக்கணம்) தந்தார் ஆதலின் இவ்விறைவன் கல்வெட்டில் 'பொக்கணம் கொடுத்த நாயனார் ' என்றும்; மற்றும் ஆற்றுதளிப் பெருமான், ஆற்றுத்தளி மகாதேவர் என்றும் குறிக்கப்பபெறுகின்றார். (ஆற்றின் கரையிலுள்ள கோயில் - ஆற்றுத்தளி).

சிறப்புகள்

 • இக்கோயில் கி. பி. 943-ல் கேரள மன்னனான வெள்ளாங்குமரன் என்பவனால் (முதற்பராந்தகன் காலத்தில்) கருங்கல்லால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது.

 • இக்கோயிலில் கொடிமரமில்லை.

 • துவார வாயிலில் விநாயகரும் முருகனும் இடம் மாறியுள்ளனர். (முருகனின் இடக் கீழ்க்கை நாராச முத்திரையுடன் - அகமர்ஷண நீரைக் கீழே விடும் அமைப்பில் - இருப்பது கவனிக்கத் தக்கது.)

 • தட்சிணாமூர்த்தி கல்லால மரமின்றி மலைமீது நந்தியை வாகனமாகக் கொண்டு காட்சித் தருகிறார்.

 • சுவாமி அம்பாள் விமானங்கள் மிகப் பழமையானவை.

 • பழமையான கல்வெட்டுக்களில் திருமுடீச்சரம் என்றே பெயருள்ளது. முடியூர் நாடு என்னும் தனிப் பெயர் கொண்ட நாட்டுக்குத் தலைநகராக இருந்தது.

 • மதுரை கோப்பரகேசரி வர்மனின் 24-வது கல்வெட்டில் முடியூர் நாட்டு முடியூர் என்றுள்ளது.

 • சௌந்தரபாண்டியன் காலக் கல்வெட்டில் முடியூர் நாட்டுக் 'கிராமம் ' என்றுள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழயாக அரசூர் செல்லும் பாதையில் சென்று, திருவெண்ணெய்நல்லூரைக் கடந்து 2-கி. மீ. சென்றால் இத்தலத்தையடையலாம். விழுப்புரத்திலிருந்து நகரப்பேருந்து செல்கிறது.

தொடர்பு :

 • 04146 - 206700

< PREV <
நடு நாட்டு 18வது தலம்
திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்)
Table of Contents > NEXT >
நடு நாட்டு 20வது தலம்
திருபுறவார்பனங்காட்டூர்