திருமாற்பேறு (திருமால்பூர்)

The myth of thirumarperu temple

இறைவர் திருப்பெயர்		: மணிகண்டேஸ்வரர், தயாநிதீஸ்வரர், 
				 பிரவாளேஸ்வரர், சாதரூபர், பவளமலையார், 
			 	 வாட்டந்தவிர்த்தார், மால்வணங்கீசர்.
இறைவியார் திருப்பெயர்		: அஞ்சனாட்சி, கருணாம்பிகை.
தல மரம்			: வில்வம்.
தீர்த்தம்				: சக்கர தீர்த்தம் 
வழிபட்டோர்			: திருமால், சந்திரன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் -	1. ஊறி யார்தரு நஞ்சினை, 
						2. குருந்தவன் குருகவன். 

				 2. அப்பர்  -	1. மாணிக் குயிர்பெறக், 
						2. பொருமாற் றின்படை, 
						3. ஏது மொன்று மறிவில, 
						4. பாரானைப் பாரினது

தல புராணம்

 • மக்கள் வழக்கில் 'திருமால்பூர் ' என்று வழங்குகின்றது.

 • திருமால், இறைவனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம், ஆதலின் 'மாற்பேறு ' என்னும் பெயர் பெற்றது.

 • திருவீழிமிழலைக்குரிய வரலாறு இத்தலத்திற்கும் சொல்லப்படுகிறது. அதாவது, திருமால், நாடொறும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சித்து வழிபட்டாரென்றும், ஒரு நாள் மலர் ஒன்று குறைய, தன் கண்ணையே பறித்து இறைவன் திருவடியில் சார்த்தி அர்ச்சித்தார்; கருணையே வடிவான இறைவன் திருமாலுக்கு பத்மாட்சன் என்ற நாமத்தை அருளி, அத்தலத்திற்கும் திருமாற்பேறு என்னும் நாமம் விளங்க அருள் செய்தார் என்பது தல வரலாறு. இவ்வாறு வழிபட்டுத் தம் சக்ராயுதமான 'சுதர்சனத்தை'த் திரும்பப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. (இதை உறுதிப்படுத்தும் வகையில் திருமாலின் உற்சவத் திருமேனி ஒன்று, ஒரு கையில் தாமரை மலரும் மறு கையில் 'கண்'ணும் கொண்டு, நின்ற கோலத்தில் இருப்பதை இக்கோயிலில் காணலாம்.)

சிறப்புகள்

 • திருமால் வழிபட்டுச் சக்ராயுதம் பெற்ற தலமாதலின் இதற்கு 'ஹரிசக்ரபுரம் ' என்றும் பெயருண்டு.

 • இத்தலத்தில் இறைவனுக்கு பல திருநாமங்கள் இருப்பின் 'மணிகண்டேஸ்வரர் ' என்னும் திருநாமமே வழக்கில் உள்ளது.

 • மூலவர்; சிவலிங்கத் திருமேனி - தீண்டாத் திருமேனி. குவளை (கவசம்) சார்த்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது.

 • வாயிலின் வெளித் தூண்களில் பசுவொன்று சிவலிங்கத் திருமேனிக்கு பால்சுரந்து வழிபடும் சிற்பம் உள்ளது.

 • ஒருபுறம் வல்லபை விநாயகர் பத்துக் கரங்களுடன் காட்சித் தருவது; ஓர் அபூர்வ அமைப்பாகும்.

 • கூப்பிய கரங்களுடன் மூலவரைப் பார்த்தவாறு மகா விஷ்ணு காட்சி தருகிறார்.

 • சந்நிதி வாயிலை கடந்து, மண்டபத்து தூண்களில் அம்பாள் வில்வடிவில் பெருமானை வழிபடுவது முதலான அரிய சிற்பங்கள் உள்ளன.

 • துர்க்கையின் திருமேனி மிகவும் அழகு வாய்ந்தது - அஷ்டபுஜங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி அழகாக காட்சித் தருகின்ற திருமேனி.

 • மூலவருக்கு எதிரில் உள்ள மகாவிஷ்ணுவுக்குத் தீபாராதனை முடிந்த பின்பு சடாரி சார்த்தி தீர்த்தம் தரும் மரபு உள்ளது.

 • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

 • நாடொறும் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சென்னையிலிருந்து இத்தலத்திற்கு நேரடி பேருந்து வசதியுள்ளது; ஆனால் அடிக்கடி இல்லை. காஞ்சிபுரத்திலிருந்து அடிக்கடி இத்தலத்திற்கு பேருந்து உள்ளது. அரக்கோணம் - காஞ்சிபுரம் இருப்புப் பாதையில் இத்தலம் உள்ளது. இந்நிலையத்திலிருந்து 5-கி. மீ. உள்ளே சென்றால் இத்தலத்தை அடையலாம்.

தொடர்பு :

 • 04177 - 248220, 09345449339

 • பாடல்பெற்றத் தலங்களைத் தொடர்ந்து செல்ல : -
 • < PREV <
  தொண்டை நாட்டு 10வது
  தலம் திருவல்லம்
  Table of Contents > NEXT >
  தொண்டை நாட்டு 12வது
  தலம் திருஊறல்


 • காஞ்சிபுரத் தலங்களைத் தொடர்ந்து செல்ல : -
 • < PREV <
  ஓணகாந்தன்தளி
  Table of Contents > NEXT >
  பரசுராமேச்சரம்