திருமாகறல்

The myth of sacred temple of Thirumagaral

	இறைவர் திருப்பெயர்	: திருமாகறலீஸ்வரர்.
	இறைவியார் திருப்பெயர்	: திரிபுவனநாயகி, புவனநாயகி.
	தல மரம்		: எலுமிச்சை.
	தீர்த்தம்			: அக்கினி தீர்த்தம்.
	வழிபட்டோர்		: இந்திரன்.
	தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - விங்குவிளை கழனிமிகு.

Magaral temple

தல வரலாறு

 • இராசேந்திரசோழனுக்கு, இறைவன் பொன் உடும்பாகத் தோன்றி, அவன் துரத்த, புற்றில் ஓடி ஒளிந்து பின் சிவலிங்க வடிவமாக வெளிப்பட்ட தலம்.

 • மாகறம் - உடும்பு.

 • மக்கட்பேறு வேண்டுவோர் இங்கு வந்து அங்கப்பிரதட்சணம் செய்யும் வழக்கம் முன் காலத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

 • இத்தலம் தொடர்பாகக் கிடைத்த செவி வழிச் செய்தி - இராசேந்திர சோழ மன்னனுக்கு நாடொறும் இக்கோயிலிலிருந்த பலா மரத்திலிருந்து பலாப்பழம் ஒன்று அனுப்பப்பட்டு, அது வழியில் தில்லையில் நடராசப் பெருமானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு, பின்பு மன்னனுக்குப் பிரசாதமாகத் தரப்பட்டு வந்தது. காலப்போக்கில் இக்கோயிலில் பணிசெய்தோர் இம்மரத்தை தீயிட்டு அழித்துவிட்டனர். பலாப்பழம் வாராதது அறிந்த மன்னன் ஆள் அனுப்பிச் செய்தியறிந்தான்; அவர்களைத் தண்டிக்க எண்ணினான். ஆனால் கோயிற் பணியாளரைத் தண்டித்தலாகாது என்றெண்ணி, அவர்கள் அனைவரையும் இரவோடு இரவாக ஊரைவிட்டு அழைத்துச்சென்று, மறுநாள் பொழுதுவிடியும் இடத்தில் விட்டுவிடுமாறு உத்திரவிட்டான். அவ்வாறே அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு விடப்பட்ட ஊர் (திருத்தணிக்கும் திருவள்ளுருக்கும் இடையில்) 'விடிமாகறல்' என்று வழங்கப்படுகிறது.

 • சேலம் சுப்பராயப் பிள்ளை என்பவர் தம் உடலில் இடுப்பின் கீழ் செயலற்றுப் போக எல்லாவித மருத்துவமும் செய்து பலனின்றிப்போக, திருமுறையில் கயிறுசார்த்திப் பார்த்து, இத்தலப்பதிகம் வர, இங்கு வந்து தங்கி, நாடொறும் இறைவனை வழிபட்டுத் தலப்பதிகத்தைப் பாராயணம் செய்து சிலகாலம் வாழ்ந்து இப்பெருமானருளால் உடல் பூரணகுணம் பெற்றுத் திரும்பினார். இந்நிகழ்ச்சி அண்மைக் காலத்தில் நிகழ்ந்ததாகும். இப்பகுதியில் உள்ள சமய அன்பர்கள் அனைவரும் இதை அறிவர்.

சிறப்புகள்

 • சிவலிங்கத் திருமேனி உடும்புபோல சிறுத்து உள்ளது; சுயம்பு மூர்த்தி; ஆவுடையார் பின்பு கட்டப்பட்டது.

 • இறைவனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் : அடைக்கலங்காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், உடும்பீசர், பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங் காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர் முதலிய திருநாமங்களாகும்.

 • இங்கு திங்கள் கிழமை தரிசனம் விசேஷமாக சொல்லப்படுகிறது.

 • சம்பந்தரின் இப்பதிகம் 'வினை நீக்கும் பதிகம்' என்னும் சிறப்புடையது.

 • ஆலய விமானம் 'கஜப்பிரஷ்ட' அமைப்புடையது.

 • இக்கோயிலில் யானைமீது முருகன் அமர்ந்திருக்கும் அபூர்வ திருமேனி அழகுறக் காட்சித் தருவதைக் காணலாம்.

 • கோயிலின் உள்ளே இக்கோயில் பதிகம் சலவைக் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன.

 • குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், விசயகண்ட கோபாலதேவர் காலத்திய கல்வெட்டுக்கள் உள.

 • கல்வெட்டுக்களில், இத்தலம் சயங்கொண்ட சோழமண்டலத்துப் பொற்கோட்டத்து மாகறல் நாட்டு மாகறல் என்றும் ; கோயிலுக்கு நிலங்கள் விடப்பட்டச் செய்திகளும் குறிக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் (வழி) ஓரிக்கை - பேருந்து பாதையில் உள்ள தலம். காஞ்சிபுரத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.

தொடர்பு :

 • 09443596619

< PREV <
தொண்டை நாட்டு 6வது
தலம் குரங்கணில்முட்டம்
Table of Contents > NEXT >
தொண்டை நாட்டு 8வது
தலம் திருவோத்தூர்