திருக்கொள்ளம்பூதூர்
(திருக்களம்புதூர், திருக்களம்பூர்) திருக்கோயில் தலவரலாறு
Sthala puranam of Thirukkollampudur Temple


இறைவர் திருப்பெயர்		: வில்வாரண்யேஸ்வரர், வில்வவனநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: சௌந்தரநாயகி, அழகு நாச்சியார்.
தல மரம்			: வில்வம்.
தீர்த்தம்				: பிரம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், காண்டீப தீர்த்தம் 
				 (அருச்சுன தீர்த்தம்), முள்ளியாறு.
வழிபட்டோர்			: விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேடன், இடைக்காடர், 
				 அருச்சுனன், வரகுண பாண்டியன், கோச்செங்கட்சோழன், 
				 பிருகுமுனிவர், காசிபர், கண்வர், அகத்தியர், வசிட்டர், 
				 வாமதேவர் முதலியோர்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - கொட்ட மேகமழுங் கொள்ளம்.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
Full appearance of the temple

தல வரலாறு

 • இத்தலம் வில்வவனம் - கூவிளவனம் என்னும் சிறப்பினது. (கூவிளம் - வில்வம்) கூவிளம்புதூர் - கொள்ளம்புதூர் ஆயிற்று.

 • ஞானசம்பந்தர், பாண்டிய நாட்டில் சைவம் தழைக்கச் செய்து, சோழ நாட்டில் கொள்ளம்பூதூருக்கு வருகை தந்தபோது முள்ளியாற்றில் வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. ஓடஞ் செலுத்த முடியாமையால் ஓடக்காரர்கள் தங்கள் ஓடங்களைக கரையில் நிறுத்திவிட்டுப் போயிருந்தனர். அங்கு வந்த ஞானசம்பந்தர், அவ் ஓடங்களுள் ஒன்றினை அவிழ்த்து நாவினையே ஓடக் கோலாகக் கொண்டு "கொட்டமே கமழும்" எனத் தொடங்கும் பதிகம் பாடி மறுகரையை அடைந்தார். இறைவன் காட்சிதர, தரிசித்து, ஆலயத்தை அடைந்து போற்றிப் பதிகத்தை நிறைவு செய்து வழிபட்டார். (இவ்வற்புதம் இன்னும் இத்தலத்தில் 'ஓடத் திருவிழா 'வாக ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.)

rAjagOpuram

சிறப்புகள்

 • ஊருக்குப் பக்கத்தில் முள்ளியாறு எனப்படும் வெட்டாறு ஓடுகிறது. இது அகத்திய காவேரி எனப்படும். இவ்வாற்றின் எதிர்க்கரையில் ஞானசம்பந்தர் கோயில் உள்ளது. இக்கோயிலை 'நம்பர் கோயில்' என்றழைக்கின்றனர். நம்பர் என்பது ஞானசம்பந்தரைக் குறிக்கும். இந்த ஆற்றை ஓடம் போக்கி ஆறு என்றும் மக்கள் வழங்குகின்றனர்.

 • பிரமவனம், பஞ்சாட்சரபுரம், காண்டீபவனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாம்.

 • சுவாமி விபுலானந்தர் அவர்கள் - யாழ் நூலின் ஆசிரியர் பல காலம் ஆராய்ந்து வெளியிட்ட யாழ் நூலை (1947-ல்) அரங்கேற்றிய இடம் இத்தலமேயாகும்.

 • இத்திருக்கோயிலில் நாடொறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன.

 • மூன்றாம் இராசராசன், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலுள் உள்ளன.

 • கல்வெட்டுக் குறிப்பில் சுவாமி 'கொள்ளம்பூதூர் உடையார் ' என்றும்; தேவி 'அழகிய நாச்சியார் ' என்றும் குறிக்கப்பட்டுள்ளனர்.

 • ஆலயத்தில் நந்தா விளக்கெரிக்கவும், நாள் வழிபாட்டுக்கும் நிவந்தங்கள் விட்ட செய்திகளை இக்கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

 • கல்வெட்டில் இத்தலம் 'அருமொழிதேவ வளநாட்டுச் சோற்றூர்க் கூற்றத்துத் திருக்கொள்ளம்பூதூர் ' என்று குறிக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் வழியாகக் குடவாசல் செல்லும் பேருந்தில் சென்று கொள்ளம்பூதூரை அடையலாம்.

< PREV <
காவிரி தென்கரை 112வது
தலம் திருவெண்டுறை
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 114வது
தலம் திருப்பேரெயில்