திருக்கருகாவூர் கோயில் தலவரலாறு
Sthala puranam of Thirukkarukavur Temple


இறைவர் திருப்பெயர்		: கர்ப்பபுரீஸ்வரர், முல்லைவனநாதர், மாதவிவனேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: கர்ப்பரக்ஷாம்பிகை, கருக்காத்தநாயகி.
தல விநாயகர்			: கற்பக விநாயகர்.
தல மரம்			: முல்லை.
தீர்த்தம்				: க்ஷீரகுண்டம், பிரமதீர்த்தம் முதலியன.
வழிபட்டோர்			: பிரமன், கௌதமர், சந்திரன் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் -	முத்தி லங்குமுறு வல்லுமை. 
				 2. அப்பர்  -	குருகாம் வயிரமாங் கூறு.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
தல வரலாறு

 • ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது.

Sri Karppapureeswarar temple, Thirukkarukavur.

Sri Karppapureeswarar temple, Thirukkarukavur.

சிறப்புகள்

 • இங்கு தலவிநாயகராக கற்பகவிநாயகர் உள்ளார்.

 • முல்லைவனம், மாதவிவனம், கர்ப்பபுரி என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.

 • கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர்.

 • இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை. கருவுடன் மரணமடைவோரும் இலர். கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள்.

 • காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்களுள் இதுவுமொன்று; அவை:- 1. கருகாவூர் - முல்லைவனம், 2. அவளிவணல்லூர் - பாதிரிவணம், 3. அரதைப்பெரும்பாழி - வன்னிவனம், 4. இரும்பூளை - பூளைவனம், 5. கொள்ளம்புதூர் - வில்வவனம் என்பனவாம். (இவ்வைந்து தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் ஆகிய காலங்களில் வழிபடும் பழக்கமும் வழக்கில் உள்ளது.)

 • ஸ்காந்தத்தில் க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனற்குமார சங்கிதையில் நாரதருக்கு சனற்குமாரர் கூறுவதாகவுள்ள பகுதியில் இத்தலச் சிறப்பு இடம் பெற்றுள்ளது.

 • இக்கோயிலில் ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த லிங்கமும் உள்ளது.

 • மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்புறம் பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது. சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி (இத்தலம் ஒரு காலத்தில் முல்லை வனமாக இருந்ததால்) சுற்றிய வடு உள்ளது.

 • இங்குள்ள நந்தி - உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர்.

 • இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

 • கருவுற்ற பெண்களுக்குச் சுகப்பிரசவம் உண்டாகும் பொருட்டு, ஸ்ரீ கர்ப்பரக்ஷ£ம்பிகையின் திருவடியில் வைத்து, மந்திரித்து விளக்கெண்ணெய் தரப்படுகிறது. பிரசவ வலியேற்படும் காலத்தில் இதை வயிற்றில் தடவிவர, சுகப்பிரசவமாகும்.

 • சோழர்கள், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன.

 • முதலாம் இராசராசன் கல்வெட்டில் "நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் " என்று தலம் குறிக்கப்படுகின்றது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ள தலம். இத்தலத்திற்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன.

< PREV <
காவிரி தென்கரை 17வது
தலம் திருச்சக்கரப்பள்ளி
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 19வது
தலம் திருப்பாலைத்துறை