திருக்கண்டியூர்

இறைவர் திருப்பெயர்		: பிரமசிரக் கண்டீஸ்வரர், வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: மங்கள நாயகி.
தல மரம்			: வில்வம்.
தீர்த்தம்				: நந்திதீர்த்தம், தக்ஷதீர்த்தம், பிரமதீர்த்தம், குடமுருட்டி ஆறு முதலியன.
வழிபட்டோர்			: சூரியன், பிரமன், சாதாதாப முனிவர் முதலியோர்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர், அப்பர்.

தல வரலாறு

  • பிரமன் சிரத்தைத் (ஐந்தனுள் ஒன்றை) தம் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் - கண்டியூர் எனப் பெயர் பெற்றது. பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர் முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பேறடைந்தான் என்பது வரலாறு.

  • சாதாதாப முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வந்தார்; ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன் அம்முனிவருக்கு காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு.

சிறப்புக்கள்

  • அட்டவீரட்டத் தலங்களுள்ளும், சப்தஸ்தானத் தலங்களுள்ளும் ஒன்றாகத் இத்தலம் விளங்குகிறது.
  • "சாதாதாப" முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு 'ஆதிவில்வாரண்யம் ' என்றும் பெயர்.
  • பிரமகத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் சொல்லப்படுகிறது.
  • சூரியன் வழிபட்டதலமாதலின், மாசிமாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில் 5 . 45 மணிமுதல் 6 . 10 மணிவரை சூரிய ஒளி சுவாமிமீது படுகிறது.
  • சப்தஸ்தானத் திருவிழாவில் (ஏழூர்திருவிழா) சுவாமி இங்கு வந்து இறங்கி, சற்று இளைப்பாறி செல்லும். சிலாத முனிவருக்கு, சாதாதாப முனிவர் தமையனாராதலின், இளைப்பாறிச் செல்லும்போது மூத்தமாமனார் என்ற வகையில் கட்டிச் சோறு கட்டித் தரும் ஐதீகமாக அன்று (தயிர்சாதம், புளியோதரை) - கட்டித்தந்து சுவாமியுடன் அனுப்புவது மரபாக இருந்து வருகின்றது.
  • நவக்கிரக சந்நிதியின் சூரியன் இரு மனைவியருடன் காட்சித் தருகிறார்.
  • மூலவர் சுயம்பு மூர்த்தி; பாணம் சற்று உயரமாக உள்ளது.
  • பூ, ஜபமாலை ஏந்தி, இருகைகளாலும் இறைவனை பிரார்த்திக்கும் அமைப்பில் உள்ள பிரம்மாவின் இவ்வுருவம் அழகுடையது.
  • இத் தலத்தில் பிரமனுக்கு தனிக் கோயில் உள்ளது.
  • பிரமனின் சிரம் கொய்வதற்காக இறைவன் கொண்ட வடுகக் கோலம்; பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் கதவோரமாக சிறிய சிலா ரூபமாகவுள்ளது.
  • கல்வெட்டில், இப்பெருமான், "திருவீரட்டானத்து மகாதேவர்", "திருக்கண்டியூர் உடைய மகாதேவர்" எனக் குறிக்கப்படுகிறார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சை - திருவையாறு பேருந்துச் சாலையில் உள்ளது. தஞ்சையிலிருந்து 9 கி. மீ. தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 3 கி. மீ. தொலைவிலும் உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன.

< PREV <
காவிரி தென்கரை 11வது தலம்
திருப்பூந்துருத்தி
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 13வது தலம்
திருச்சோற்றுத்துறை