திருஎறும்பியூர் (திருவெறும்பூர்)

இறைவர் திருப்பெயர்		: பிப்பிலிகேஸ்வரர் (பிப்பிலி - எறும்பு), எறும்பீஸ்வரர், 
				 எறும்பீசர், மதுவனேஸ்வரர், மணிகூடாசலபதி, மாணிக்கநாகர் 
இறைவியார் திருப்பெயர்		: சௌந்தரநாயகி, மதுவனேஸ்வரி, நறுங்குழல் நாயகி 
				 (சுகந்த குழலேஸ்வரி), இரத்தினாம்பாள்.
தல மரம்			: வில்வம்.
தீர்த்தம்				: பிரம தீர்த்தம்
வழிபட்டோர்			: திருமால், பிரமன், நைமிசாரண்ய ரிஷிகள், இந்திரன், தேவர்கள்.
தேவாரப் பாடல்கள்		: அப்பர் - 1. விரும்பி யூறு விடேல்மட, 
					  2. பன்னியசெந் தமிழறியேன்.
erumbiyur temple

தல வரலாறு

 • தற்போது மக்கள் வழக்கில் 'திருவெறும்பூர் ' என்றும் 'திருவரம்பூர் ' என்றும் வழங்குகிறது.

 • இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங்கொண்டு வழிபட்ட தலமாதலின் இத்தலம் இப்பெயர் பெற்றது.

 • "தாருகாசூரனை" அழிக்கத் தேவர்கள் வழிகேட்டுப் பிரமனை அனுகினர். அவர் சொல்லியவண்ணம் இந்திரனும், தேவர்களும் தங்கள் உருவம் அசுரர்களுக்குத் தெரியக் கூடாதென்றெண்ணி, எறும்பு வடிவங்கொண்டு இத்தலத்திற்கு வந்து வழிபட்டனர். அவ்வாறு வழிபடும்போது சிவலிங்கத்தின் மீதிருந்த எண்ணெய்ப் பசையால் மேலேற முடியாது கஷ்டப்பட, சுவாமி புற்றாக மாறி, எறும்புகள் மேலேறிப் பூசை செய்வதற்கு வசதியாகச் சொரசொரப்பான திருமேனியுடையவரானார். அவர்கள் மேலேறுவதற்கு வசதியாகச் சாய்ந்தும் பூசையை ஏற்றுக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

 • திரிசிரன் திருச்சியில் வழிபட்டதுபோல், அவனுடைய சகோதரன் 'கரன்' என்பவன் எறும்பு உருக்கொண்டு இங்கு வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

சிறப்புகள்

 • இக்கோயில் மலைமீது உள்ளது. மலைக்கோயில் புராணப்படி இதற்கு; பிப்பிலீச்சரம், மணிக்கூடம், இரத்தினக்கூடம், திருவெறும்பிபுரம், எறும்பீசம், பிரமபுரம், இலக்குமிபுரம், மதுவனபுரம் குமாரபுரம் எனப் பல பெயர்களுண்டு. தென் கயிலாயம் என்றும் இத்தலத்தைச் சொல்வர்.

 • கல்வெட்டில் இறைவனின் திருப்பெயர், 'திருமலையாழ்வார்' என்றும், 'திருவெறும்பியூர் உடைய நாயனார்' என்றும் குறிக்கப்பெற்றுள்ளது.

 • நவக்கிரக சந்நிதியில் சூரியம் திருவுருவம் இருமனைவியரோடும் நடுவில் உள்ளது.

 • கருவறை கல்லாலான கட்டிடம்.

 • மூலலிங்கம் மண்புற்றாக மாறியிருப்பதால், நீர்படாமல் பாதுகாக்கப்படுகிறது. சிவலிங்கத்திருமேனி வடபால் சாய்ந்துள்ளது. மேற்புறம் சொரசொரப்பாக (தலபுராணம் தொடர்புடையது) உள்ளது. சிவலிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்கள் உள்ளன.

 • கருவறையின் வெளிப்புறம் கல்வெட்டுக்கள் உள்ளன.

 • கல்வெட்டில் இத்தலம் "ஸ்ரீ கண்டசதுர்வேதி மங்கலம்" என்று குறிக்கப்படுகிறது.

 • எறும்பியூர் தலபுராணம் உள்ளது.

 • (கி. பி. 1752-ல் ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் நடந்த போரின்போது இவ்விடம் போர் வீரர்கள் தங்கும் ராணுவத் தளமாக விளங்கியது.)

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருச்சியை அடுத்த இருப்புப் பாதை நிலையம், திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ளது. திருச்சியிலிருந்து அடிக்கடி நகரப்பேருந்துகள் உள்ளன.

தொடர்பு :

 • 09842957568

< PREV <
காவிரி தென்கரை 6வது
தலம் திருச்சிராப்பள்ளி
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 8வது
தலம் திருநெடுங்களம்