திருச்சிவபுரம்

sivapuram temple
இறைவர் திருப்பெயர்	: சிவகுருநாதசுவாமி, சிவபுரீஸ்வரர், புரமபுரீஸ்வரர், 
			 சிவபுரநாதர்.
இறைவியார் திருப்பெயர்	: ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி.
தல மரம்		: சண்பகம் (தற்போதில்லை)
தீர்த்தம்			: சந்திர தீர்த்தம்.
வழிபட்டோர்		: திருமால், குபேரன், இராவணன், பட்டினத்தார், 
			 அருணகிரிநாதர், மகாவிஷ்ணு முதலியோர்.
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	1. புவம்வளி கனல்புனல், 
					2. இன்குர லிசைகெழும், 
					3. கலைமலி யகலல்குல்.

			 2. அப்பர்  -	  வானவன்காண் வானவர்க்கும்.

தல வரலாறு

 • திருமால் வெள்ளைப் பன்றி வடிவிலிருந்து பூசித்து பேறு பெற்ற, தலம்.

 • இவ்வூரில் பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனாலேயே ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு. அவ்வாறு பாடிய இடம் இன்று 'சுவாமிகள் துறை ' என்றழைக்கப்படுகிறது.

 • குபேரன் பூசித்த வரலாறு - ஒருமுறை இராவணன், தூய்மையற்றவனாய் இறைவன் வழிபட வந்தான். நந்தி அவனைத் தடுத்தார். உண்மையறியாது குபேரன் இராவணனுக்காகப் பரிந்து பேச, நந்தி சாபமளித்தார். தளபதி என்னும் பெயருடன் பேராசைக்காரனாக இறைவனை வழிபட்டு வந்தான். ஒரு நாள் வடக்குப் பிரகாராத்தில் கோமுகம் அருகில் காணப்பட்ட செப்புப் பட்டயத்தில் இருந்த சுலோகத்தைப் படித்தான். மாசி மாதத்தில் சிவராத்திரி, சோமவாரம், பிரதோஷம் இவை மூன்றும் சேர்ந்து வரும் நாளில் உடற் குறையில்லாத ஆண் குழந்தையை பெற்றோர் பிடிக்க அரிந்து - ரத்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் பெரும் பொருள் கிடைக்கும் என்று அறிந்தான். அவ்வாறே வறுமையால் வாடிய தம்பதிகட்குப் பொருள் தந்து அவர்களைச் சம்மதிக்க வைத்து - மன்னன் வாள் கொண்டு அரியும் போது - குழந்தை, அன்னை சிங்கார வல்லியை வேண்டிட, அத்தாயும் இறைவனிடம் வேண்டினாள். இறைவன் மகிழ்ந்து தளபதியின் சாபம் நீங்கவே இவ்வாறு நேர்ந்ததாக அருளி, தளபதியைக் குபேரனாக்கினார். இதை நினைவூட்டும் வகையில் பெருமானின் முடியில் ரத்தத்துளி போன்று இருப்பதைக் காணலாம். தாயாக வந்த இந்திராணியும் - தந்தையாக வந்த இந்திரனும் - குழந்தையாக வந்த அக்னியும்; கிழக்குப் பிரகாரத்தில் சிவலிங்கத் திருமேனி தாங்கி இருப்பதாகவும் கூறுவர். (ஆதாரம் - கோயில் வரலாறு)

view of the temple

சிறப்புக்கள்

 • இவ்வூரிலுள்ள பட்டினத்து விநாயகர் கோயிலில் பட்டினத்தார் சிலை அமர்ந்த நிலையில் உள்ளது. பட்டினத்தாரின் தமக்கை இவ்வூரில் வாழ்ந்தார்.

 • குபேரபுரம், பூகயிலாயம், சண்பகாரண்யம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.

 • மூலவர் கம்பீரமான சற்றுப் பெரிய சிவலிங்கத் திருமேனி; மகாவிஷ்ணு பூசித்தது.

 • இங்குள்ள நடராசர் திருமேனி மிகவும் அழகானது. (இத்திருவுருவச் சிலைதான் அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டுவிட்டது. அது கண்டுபிடிக்கப்பட்டு, இந்திய அரசின் பெரு முயற்சியால் திரும்பக் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு கருதி, திருவாரூர் சிவாலயத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது - தற்போது வேறொரு நடராசத் திருவுருவம் சிவகாமியுடன் எழுந்தருளுவித்து வழிபடப்படுகிறது.)

 • இங்குள்ள நால்வர் பிரதிஷ்டையில் பரவையாரும் இடம் பெற்றுள்ளார்.

 • இது கற்கோயிலாகும்.

worshiped scene of thirumAl as a pig form

அமைவிடம்

இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் சாக்கோட்டை சென்று, சாக்கோட்டையில் "பட்டாமணிஐயர் ஸ்டாப்"பிற்கு பக்கதில் பிரியும் (சிவபுரி) கிளைப் பாதையில் (மண் பாதை) 2 கி. மீ. சென்றால் சிவபுரத்தை அடையலாம்.

< PREV <
காவிரி தென்கரை 66வது
தலம் திருஅரிசிற்கரைப்புத்தூர்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 68வது
தலம் திருக்கலயநல்லூர்