திருவாலங்காடு திருக்கோயில் தல வரலாறு

The myth of sacred temple of thiruvalangadu

இறைவர் திருப்பெயர்		: வடாரண்யேசுவரர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டுஅப்பர்.
இறைவியார் திருப்பெயர்		: பிரம்மராளகாம்பாள், வண்டார்குழலி.
தல மரம்			: பலா. (ஆலமரம் என்றும் சொல்லப்படுகிறது.)
தீர்த்தம்				: 'சென்றாடு தீர்த்தம் ' (செங்கச்ச உன்மத்ய மோக்ஷ புஷ்கரணி), 
				  முக்தி தீர்த்தம்.
வழிபட்டோர்			: கார்க்கோடகன், சுநந்த முனிவர் முதலியோர்.
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் -	1. துஞ்ச வருவாருந்.

				  2. அப்பர்   -	1. வெள்ளநீர்ச் சடையர்,
						2. ஒன்றா வுலகனைத்து.
 
				  3. சுந்தரர்  -	1. முத்தா முத்தி தரவல்ல.

thiruvaalangadu temple

தல வரலாறு

  • இத்தலம் 'வடாரண்யம் ' எனவும் பெயர் பெற்றது.

  • இறைவன் காளியுடன் நடனமாடிய தலம்.

  • காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்து நடராசப் பெருமானின் திருவடிக் கீழிருந்து சிவானந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தலம்.

சிறப்புகள்

  • நடராசப்பெருமானின் ஊர்த்தவ தாண்டவத் தலமாகவும், பஞ்ச சபைகளுள் இரத்தினசபையாகவும் சிறப்புற்று விளங்குகிறது இத்தலம்.

  • மிகப் பெரிய குளமாகிய முக்தி தீர்த்தக் கரையில் நடனமாடித் தோற்ற காளியின் உருவம் உள்ளது.

  • இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் சித்த வைத்திய சாலை உள்ளது.

  • கோயிலின் வெளிப்பிரகாரத்தில் சந்தன மரங்கள் உள்ளன.

    thiruvaalangadu temple

  • மூன்று நிலைகளையுடைய உள் கோபுரத்தில் ஊர்த்தவ தாண்டவம், பிரம்மா, நந்தி மத்தளம் வாசித்தல், காரைக்காலம்மையார் பாடுதல், ரிஷபாரூடர், கஜசம்ஹாரமூர்த்தி, காரைக்காலம்மையார் வரலாறு முதலியவை சுதையில் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

  • இரத்தின சபையில் உள்ள நடராசர், அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான் 'ரத்ன சபாபதி ' என்று அழைக்கப்படுகிறார்.

  • சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகதலிங்கமும்; திருமுறைபேழையும் உள்ளன.

  • சுந்தரர் பதிகம் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருப்பதை, சபையை வலம் வரும்போது காணலாம்.

  • இரத்தின சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு, ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.

  • கருவறை நல்ல கற்கட்டமைப்புடையது.

    thiruvaalangadu temple

  • கோஷ்ட மூர்த்தங்களில் துர்க்கைக்கு பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்டமூர்த்தமாக உள்ளது.

  • பஞ்சபூத தல லிங்கங்கள் உள்ளன.

  • மூலவர் சுயம்பு மூர்த்தி.

  • பழையனூருக்குச் செல்லும் வழியில், திருவாலங்காட்டிலிருந்து ஒரு கி.மீ.-ல் பழையனூர் வேளாளர்கள் எழுபதுபேர் தீப்பாய்ந்து செட்டிப்பிள்ளைக்குத் தந்த வாக்குறுதியைக் காத்த 'தீப்பாய்ந்த மண்டபம் ' உள்ளது. இங்குள்ள தொட்டியின் உட்புறத்தில், யாகம் வளர்த்து இறங்குவதுபோல் இவர்கள் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிரில் 'சாட்சி பூதேஸ்வரர் ' சந்நிதியும், தீப்பாய்ந்த இடமும் உள்ளது.

  • தீப்பாய்ந்த வேளாளர்களின் மரவில் பழையனூரில் தற்போதுள்ளவர்கள் நாடொறும் திருவாலங்காடு வந்து இறைவனை தரிசித்துச் செல்லும் மரபை நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள். சதாகாலமும் சேவைக்கு சந்து செல்லும் இவர்கள், இம்மரபை பிற்காலத்தோரும் அறியும் வகையில் "கூழாண்டார் கோத்திரம் சதாசேர்வை" என்று கல்லில் பொறித்து, அக்கல்லை, கோயிலின் முன் வாயிலில், உயர்ந்த படியைத் தாண்டியவுடன் முதற் படியாக வைத்துள்ளனர். இம்மரபினரின் கோத்திரமே 'கூழாண்டார்கோத்திரம்'. அதாவது தாங்கள் கூழ் உணவை உண்டு, விளைந்த நெல்லை இறைவனுக்கு சமர்ப்பித்தவர்கள் என்பது பொருளாம். சிவப்பற்றினை உணர்த்தும் இச்செய்தி நெஞ்சை நெகிழச் செய்கிறது.

  • கல்வெட்டில் நடராசப்பெருமானின் பெயர் 'அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார் ' என்று குறிக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் செல்லும் பேருந்துப் பாதையில் இத்தலம் உள்ளது. காஞ்சியிலிருந்தும், அரக்கோணத்திலிருந்தும், திருவள்ளூரிலிருந்தும் இவ்வூருக்குப் பேருந்துகள் உள்ளன.

< PREV <
தொண்டை நாட்டு 14வது
தலம் திருவிற்கோலம்
Table of Contents > NEXT >
தொண்டை நாட்டு 16வது
தலம் திருப்பாசூர்