திருஅதிகை வீரட்டானம்
(திருவதிகை)

இறைவர் திருப்பெயர்		: வீரட்டேஸ்வரர், வீரட்டநாதர், அதிகைநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: திரிபுரசுந்தரி
தல மரம்			: சரக்கொன்றை.
தீர்த்தம்				: கெடிலநதி (தென்கங்கை)
வழிபட்டோர்			: திலகவதியார், அப்பர் பெருமான்.
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் -	1. குண்டைக் குறட்பூதங்.

				 2. அப்பர்  -	1. கூற்றாயின வாறுவி, 
						2. சுண்ணவெண் சந்தனச், 
						3. முளைக்கதிர் இளம்பிறை, 
						4. இரும்புகொப் பளித்த, 
						5. வெண்ணிலா மதியந், 
						6. நம்பனே எங்கள், 
						7. மடக்கினார் புலியின், 
						8. முன்பெலாம் இளைய, 
						9. மாசிலொள் வாள்போல், 
					    10. கோணன் மாமதி, 
					    11. எட்டு நாண்மலர், 
					    12. வெறிவிரவு கூவிளநற், 
					    13. சந்திரனை மாகங்கைத், 
					    14. எல்லாஞ் சிவனென்ன, 
					    15. அரவணையான் சிந்தித், 
					    16. செல்வப் புனற்கெடில. 

				 3. சுந்தரர் -	1. தம்மானை அறியாத.

thiruvadikai temple

தல வரலாறு

 • அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.

 • திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிகழ்ந்தத் தலம்.

 • ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம்.

 • அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம்.

 • திலகவதியார் தன்தம்பியாகிய (அப்பர்) மருள்நீக்கியாரை நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட, இறைவன் "சூலை தந்து ஆட்கொள்வோம்" என்று பதிலுறைத்த பதி.

 • சூலை நோயின் துன்பம் தாளப்பெறாத அப்பர் பெருமான், யாருமறியாமல் பாடலிபுத்திரத்தை (திருப்பாதிரிப்புலியூர்) விட்டு நீங்கி, இங்கு வந்து, தமக்கையாரைக் கண்டு, தொழுது, திருவாளன் திருநீறு தரப் பெருவாழ்வு வந்ததென்று பணிந்து ஏற்று, உருவார அணிந்து, அவர்பின் சென்று, அதிகைப் பிரான் அடிமலர் வீழ்ந்து வணங்கி, "ஆற்றேன் அடியேன்" என்று "கூற்றாயினவாறு" பதிகம் பாடிச் சூலை நீங்கப்பெற்ற அற்புதத்தலம்.

சிறப்புகள்

 • சைவத்துக்குத், திருத்தொண்டுக்கு உறைப்பான திருநாவுக்கரசரை வழங்கியருளிய பெருமைமிகு தலமிதுவே.

 • சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான 'உண்மை விளக்கம்' நூலை அருளிய 'மனவாசகங்கடந்தாரின்' அவதாரத் தலம்.

 • இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கியதும் - திருவடி தீட்சை பெற்றதும் இத்தலமே.

 • பல்லவ மன்னனான மகேந்திரவர்மனின் மனத்தை மாற்றிச் சமண் பள்ளிகளை இடித்துக் குணபரவீச்சரம் எழுப்பச் செய்ததும் இத்தலத்தின் பெருமையை பறைசாற்றும் நிகழ்ச்சியாகும்.

 • அதிரைய மங்கலம், அதிராஜமங்கலம், அதிராஜமங்கலியாபுரம் என்னும் பெயர்கள் இத்தலத்திற்குரியனவாகக் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.

 • மணவிற் கூத்தனான காலிங்கராயன் என்பவன் இக்கோயிலுக்குப் பொன்வேய்ந்து நூற்றுக்கால் மண்டபம், மடைப்பள்ளி, யாகசாலை ஆகியவற்றை அமைத்து, அம்பாள் கோயிலையும் கட்டுவித்தான் என்பது கல்வெட்டுச் செய்தி.

 • தென்கங்கை எனப்படும் கெடிலநதி (தல தீர்த்தம்) பக்கத்தில் ஓடுகிறது.

 • மிகப்பெரிய கோயில், சுவாமி கர்ப்பக்கிருகம் தேர்போலப் பதுமைகளால் அலங்கரிக்கப்பட்டு, நிழல் பூமியில் சாயாதபடிக் கட்டப்பட்டுள்ளது.

 • கோபுர வாயிலில் இருபுறங்களிலும் அளவற்ற சிற்பங்கள் உள்ளன; வலப்பக்கத்தில் சற்று உயரத்தில் திரிபுரமெரித்த கோலம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

 • வாயிலின் இருபுறங்களிலும் நடனக்கலைச் சிற்பங்கள் (பரத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள 108 கரணங்களை விளக்கும் சிற்பங்கள்) அளவிறந்துள்ளன.

 • கோயிலின் உட்புறத்திலுள்ள மற்றொரு பதினாறுகால் மண்டபத்தின் இரு தூண்களில் ஒன்றில் சுப்பிரமணியத் தம்பிரான் (அமர்ந்த நிலை) சிற்பமும், இதற்கு நேர் எதிர்த்தூணில் சிவஞானத் தம்பிரான் (நின்று கைகூப்பிய நிலை) சிற்பமும் உள்ளது. சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர்தான் இக்கோயிலைத் திருத்திச் செப்பம் செய்தவர் என்றும்; இவர் சீடரான சிவஞானத் தம்பிரான்தான் முதன்முதலில் இத்திருக்கோயிலில் அப்பர் பெருமானுக்குப் பத்து நாள்கள் விழா எடுத்துச் சிறப்பித்தார் என்பர்.

 • இக்கோயிலில் திகவதியாருக்கு சந்நிதி உள்ளது.

 • அப்பர் சந்நிதி - மூலமூர்த்தம் உள்ளது; அமர்ந்த திருக்கோலம் - சிரித்த முகம் - தலை மாலை, கையில் உழவாரப்படை தாங்கிய பேரழகு.

 • பிரகாரத்தில் பஞ்சமுக சிவலிங்கமும் (பசுபதிநாதர்), வரிசையாகப் பல சிவலிங்கத் திருமேனிகளும் உள்ளன.

 • மூலவர் பெரிய சிவலிங்கத் திருமேனி - பெரிய ஆவுடையார்; சிவலிங்கத் திருமேனி பதினாறு பட்டைகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.

 • கருவறை சுதையாலான பணி; இதன் முன் பகுதி வளர்த்துக் கற்றளியாகக் கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றிலும் குடவரைச்சிங்கள்.

 • நாடொறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடக்கின்றன.

 • இத்தலத்திலிருந்து 1 கி.மீ. தொலைவு சென்றால் ஸ்ரீ சிதம்பரேஸவரர் கோயில் உள்ளது; இதுவே சித்த வட மடம் ஆகும். இப்பகுதி புதுப்பேட்டை என்று வழங்குகிறது. (சித்வடமடத்தைப் பிற்காலத்தில் சித்தாண்டிமடம், சித்தாத்த மடம் என்றெல்லாம் வழங்கினர். இப்போது இப்பகுதி கோடாலம்பாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.)

 • மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குணபரவீச்சரம் - "ஆதிமூல குணபரேச்சுரன் கோயில்" என்றழைக்கப்படுகிறது. இது கோயிலுக்குப் பக்கத்தில் மேற்கே பெரியரோடு கரையில் உள்ளது. சிறு கட்டிடமாக இடிந்த நிலையில், உடைந்துபோன படிமங்களுடன் காணப்படுகிறது. தற்போதுள்ள கோயில் பிற்காலத்தில் பாண்டியர்களால் எழுப்பப்பட்டது. இக்கோயில் மராட்டிய, ஆங்கிலேயர் காலத்தில் போர்க்கோட்டையாகவும் மாறி மாறிப் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றில் அறிகிறோம்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து 2-கி. மீ. தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய இடங்களிலிருந்து பண்ருட்டிக்குப் பேருந்து வசதி உள்ளது. பண்ருட்டி இருப்புப் பாதை நிலையம்.

தொடர்பு :

 • 09443988779
 • 09442780111
 • 09841962089

< PREV <
நடு நாட்டு 6வது தலம்
திருச்சோபுரம்
Table of Contents > NEXT >
நடு நாட்டு 8வது தலம்
திருநாவலூர் (திருநாமநல்லூர்)