அச்சிறுபாக்கம் (அச்சரப்பாக்கம்) தல புராணம்

Achiruppakkam Temple thala puranam

இறைவர் திருப்பெயர்		: பார்க்கபுரீஸ்வரர், ஆட்சீஸ்வரர், ஆட்சிகொண்டநாதர், 
				 ஸ்திரவாசபுரீஸ்வரர், முல்லைக்கானமுடையார்.

இறைவியார் திருப்பெயர்		: இளங்கிளியம்மை, சுந்தரநாயகி, பாலசுகாம்பிகை, 
				 அதிசுந்தரமின்னாள்.

தல மரம்			: சரக்கொன்றை.
தீர்த்தம்				: சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம்.
வழிபட்டோர்			: கௌதமர், கண்வர் முதலியோர்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - பொன்றிரண் டன்ன புரிசடை

achiruppakkam temple

தல வரலாறு

 • மக்கள் வழக்கில் அச்சரப்பாக்கம் என்று வழங்குகிறது.

 • விநாயகரை வணங்காது, திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனுடைய தேர் அச்சு முறிந்த இடம் (அச்சு + இறு + பாக்கம்) ஆதலின் இப்பெயர் பெற்றது. இறைவன் இத்தலத்தில் விநாயகருக்கு அருள் புரிந்து, தொடர்ந்து சென்று திருவதிகையில் அசுரரை (திரிபுராதிகளை) வென்றதாக வரலாறு.

 • முன்பொருமுறை இவ்வூர் வழியே சென்ற பாண்டிய மன்னன் ஒருவன் காட்டு முல்லைக் கொடிகள் சூழ்ந்த காட்டைக் கண்டான். பொன்நிறமான உடும்பு ஒன்று ஓடுவது கண்டு அவன் துரத்திச் செல்ல அது ஓடிச்சென்று சரக்கொன்றை மரத்தின் பொந்தில் புகுந்து கொண்டது. அரசன் ஆணைப்படி ஏவலர்கள் அம்மரத்தை வெட்ட, குருதி வெளிப்பட, தோண்டுகையில் சிவலிங்கம் வெளிப்பட்டது. வெட்டிய தழும்புப்பட்ட இறைவனுக்கு, அரசன் "திரிநேத்திரதாரி " என்னும் முனிவரிடம் செல்வத்தைத் தந்து கோயில் கட்டச் செய்தான். அவரும், தன்னையும், மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு, இரு கருவறைகள் கொண்ட இக்கோயிலைக் கட்டினார். கோயிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரைக் கேட்க, அவர் அரசே! உம்மை ஆட்கொண்டவர் "உமையாட்சீஸ்வரர் "; எமையாட்கொண்டவர் "ஆட்சீஸ்வரர் " என்று மறுமொழி தந்ததாக வரலாறு கூறுகின்றது. (உமையாட்சீஸ்வரர் சந்நிதி, வாயிலுக்கு நேரே உள் அடங்கி, பிராகாரத்தில் உள்ளது.)

achiruppakkam temple

சிறப்புகள்

 • பிரமகபால மாலையுடன் பைரவர் காட்சித் தருகிறார்.

 • மூலவர் - ஆட்சீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி; சுயம்பு மூர்த்தி. தாழ அமைந்த சதுரமான ஆவுடையார். பெருமானுக்கு முன்பு நாம் நின்று வழிபடுமிடத்தில் கீழே கிணறுள்ளதாம். கருங்கற்கள் போட்டு மூடப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் கற்களின் இடுக்கு வழியாகப் பார்த்தால் நீர் இருப்பது நன்கு தெரியுமாம்.

 • கோஷ்ட மூர்த்த சோமாஸ்கந்தருக்குக் கீழே, நாகமொன்று சிவலிங்கத்தை வழிபடுவது, காரைக்காலம்மை தலையால் நடப்பது, கண்ணப்பர் கண்ணைப் பெயர்க்கும்போது இறைவனின் கைவெளிப்பட்டுத் தடுப்பது, ஒரு தலையுடன் இருமான்கள் போன்ற சிற்பங்கள் கண்ணுக்கு விருந்தளிப்பதுடன் மனத்திற்கும் அமைதியைத் தருகின்றனவாக உள்ளன.

 • சித்திரைத் பெருவிழாவில் 11-ஆம் நாள் சுவாமி 'பெரும்பேறு கண்டிகை' கிராமத்திற்கு எழுந்தருளி, அகத்தியருக்குக் காட்சிதரும் ஐதீகம் நடைபெறுகிறது.

 • கருவறைச் சுவரில் நிரம்பக் கல்வெட்டுக்கள் உள்ளன.

 • 'மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்துத் தென்பால் தனியூர் அச்சிறுபாக்கம்' என்பது கல்வெட்டுக் குறிப்பு.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகத்தை அடுத்து இவ்வூர் உள்ளது. புகைவண்டி நிலையம். செங்கற்பட்டிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது.

தொடர்பு :

 • 044 - 27523019
 • 09842309534.

< PREV <
தொண்டை நாட்டு 28வது
தலம் திருக்கழுக்குன்றம்
Table of Contents > NEXT >
தொண்டை நாட்டு 30வது
தலம் திருவக்கரை