கயிலாயநாதர் திருக்கோயில்

இறைவர் திருப்பெயர்		: கயிலாயநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: திருமால், நாரதர்.
kailAyanAthar temple

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • சிவனடியார்களாயினும் திரிபுராதிகள் மூவரும் அசுரர்களாதலின் தம்மியல்பிற்கேற்ப தேவர்களை வருத்திவந்தனர். அவர்களை அழிக்க சிவபெருமானாலன்றி வேறெவராலும் இயலாதென்றெண்ணிய திருமால், அதற்கு சாதனமாக அவர்களுடைய சிவபக்தியைச் சிதைக்க எண்ணி, தன் அம்சமாக ஆதிபுத்தனை படைத்து நாரதருடன் அனுப்பி, திரிபுராதிகள்தம் சிவபக்தியைச் சிதைக்கச் செய்தார். இதனால் திரிபுரசம்ஹாரம் நிறைவேறியது. ஆனபோதிலும், சிவப்பற்றைச் சிதைத்த பாவத்திற்கு கழுவாயாக நாரதரும், ஆதிபுத்தனும் காஞ்சிபுரம் வந்தபோது, அவர்களுடை பாவங்கள் பருத்திமலைபோல் மெலிவதை உணர்ந்தனர். இதன்காரணமாகவே அப்பகுதி பருத்திக்குன்றம் (திருப்பருத்திக்குன்றம்) என்று பெயர் பெற்று விளங்குகிறது.

  • நாரதரும், ஆதிபுத்தனும் பருத்திக்குன்றத்திற்கு சற்று அண்மையில் கயிலாயநாதர் என்ற திருப்பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அவர்களுக்கு இறைவனார் காட்சி தந்து, "எண்ணற்ற பிறவிகளில் உழன்றால் அன்றி அப்பாவம் தீராது; எனினும் இக்கோயிலில் வலம் வரும் பொருட்டு யாம் இருவாயில்களை அமைத்துள்ளோம். அதன்வழியே புகுந்தும், வெளிவந்தும் - அதுவே பிறப்பு, இறப்பாக அமைந்துவிட, வழிபட்டு, பலபிறவிகளில் உழன்றாற்போலப் பலமுறை வலம் வந்து பாவம் கழித்து முடிவில் பேறு பெறுவீர்களாக" என்றருளினார்.

  • இன்றும் மூலவரையொட்டினாற்போல் இருவழிகள் இருப்பதும், முடிந்தோர் அதன்வழியே புகுந்து வெளிவருவதும் தலவரலாறு தொடர்புடையதாகும்.

  • இக்கோயில் பூசலார் நாயனார் வரலாற்றுடன் தொடர்புடைய கோயிலுமாகும்.
  • இக்கோயில் காடவர்கோமான் என்னும் இராச சிம்ம பல்லவனால் கட்டப்பெற்றது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பெரிய காஞ்சிபுரம் புத்தேரித் தெருவில் சென்று இக்கயிலாயநாதர் கோயிலை அடையலாம்.

< PREV <
கச்சிஅனேகதங்காவதம்
Table of Contents > NEXT >
வீரராகவேசம்-லட்சுமணேசம்