logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

காசி மஹாத்மியம் - உரைநடை

கடவுள் வாழ்த்து

துண்டி விநாயகர்

துண்டி விநாயகனை, மண்டு மவாவினொடு
கண்டு வணங்கிடுவோர், பண்டை வினையறுமே.

தணிகை நாதர்

சிற்பரர்க்குத் தெரியொணாத்[1]
தற்பரப் பொருள் சாற்றிய
உற்பவக் கிரி[2] யோங்கிய
கற்பகத்தைக் கருதுவாம்.
------
[1]. தெரியொணாத் தற்பரப் பொருளைச் சிற்பரர்க்குச் சாற்றிய என அந்வயப்படுத்திப் பொருள் கொள்க.
[2]. உற்பலக்கிரி --நீலோற்பலமலை--திருத்தணிகை.

விசுவ நாதர்

விசுவ நாதனைப், பசுவ தேறியைக்
கசிவி னோதிட, அசைவு[3] தீருமே.
------
[3]. அசைவு--சலனம், கலக்கம்.

அன்னபூரணி யம்மை

அன்ன பூரணிச், சொன்ன[4] தாள்களைச்
சொன்ன தொண்டரை, உன்னி உய்குவாம்.
---------
[4]. சொன்ன--பொன்மயமான, சொர்ண என்பதன் மரூஉ.

காசி விசேடம்

எண்மைப் புல னேய்ந்தமுநி
ஒண்மைக் கர மோய்ந்திடலால்
உண்மைப் போரு ளோர்ந்தனமே
திண்மைக் கதி தேர்ந்தனமே.[5]
---------------------------
[5]. ஒரு முறை சிவன் பெரியரோ விஷ்ணு பெரியரோ என்னுந் தருக்கம் முநிவர்களுக்குள் உண்டாக அவர்கள் வியாச முநிவரை இதற்கு முடிபு கூறும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அவர் விஷ்ணுவே பெரியர் என்றார். அப்போது சில முநிவர்கள், "ஐயா, இப்போது இங்கே சொன்ன சொல்லைக் காசித் தலத்திற் கங்கைக் கரையில் விசுவேசர் சந்நிதியில் சொல்லுவீரானால் ஒப்புக்கொள்ளுவோம்" என்றார்கள். அவரும் அப்படியே செய்கிறேன் என்று காசியைச் சேர்ந்து கங்கைக் கரையில் நின்று 'விஷ்ணுவே பெரியர்' எனக் கூறிக்கொண்டே தமது கையை மேலே தூக்க, நந்தியெம்பெருமான் "உம்" என்று அதட்டினார். அப்போது முநிவர் கை அப்படியே தம்பித்து நின்றுவிட்டது. பின்னர் அவருக்கு நல்லுணர்ச்சி தோன்ற, சிவபிரானையும் நந்திகேசுரரையுந் துதித்துத் தமது கையின் சுவாதீனத்தைப் பெற்றனர், -- என்னுஞ் சரித்திரம் இப்பாட்டிற் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் விஷயம்,

"ஐயிரு புராணநூல் அமலற் கோதியுஞ்
செய்யபன் மறைகளுந் தெரிந்து மாயையால்
மெய்யுறு சூள்புகல் வியாதன் நீட்டிய
கையடு நந்திதன் கழல்கள் போற்றுவாம்.

பைய ராவின்மேற் கண்டுயில் பண்ணவன் தனக்குந்
தையல் பாதிய னேபரம் பொருளெனுந் தன்மை
மையன் மாநுட ருணர்ந்திட மறைமுநி யெடுத்த
கைய தேயுரைத் திட்டதோர் காசியைக் கண்டான்"

என்னுங் கந்த புராணச் செய்யுள்களாலும், "கங்கைசூழ் கிடந்த காசிமால் வரைப்பிற், பொய்புகல் வியாதன் கைதம்பித்தலின்" என்னும் சுலோக பஞ்சக மொழிபெயர்ப் பானும் அறியலாகும். இச் சரித்திரத்தாற் காசியின் சிறப்பு நன்கு விளங்கும்.
---------
 

திருச்சிற்றம்பலம்

காசி மஹாத்மியம்

(உரைநடை)

வ. சு. செங்கல்வராய பிள்ளை

     சிவபக்த சிரோமணிகளாகிய நைமிசாரணிய முநிவர்கள் சூத முநிவரை நோக்கி 'முநிபுங்கவரே! எங்கள் வினைகளைப் போக்கக் கூடிய சிவசரிதங்கள் தங்கள் திருவாக்கால் எண்ணில்லாதன உரைத்தீர். க்ஷேத்திரங்களுக்கெல்லாம் நாயகமாகிய ஸ்ரீ காசி நகரத்தின் சிறப்பையுந் தயை கூர்ந்து உரைத்தருளல் வேண்டும்' என்று கேட்டுக்கொள்ள, சூத முநிவரும் மனமகிழ்ச்சியுடன் 'அன்பர்களே, உங்கள் இஷ்டத்தை நிறைவேற்றுகின்றேன்' என்று சொல்லிப் பின்வருந் திவ்ய சரிதத்தை அவர்களுக்கு உரைத்தருளுகின்றார்:

     திருவளர்ந்தோங்கும் பரதகண்டத்தில் சிம்ஹள தீபம் என்னும் தேசத்தில் சிம்ஹத்வஜன் என்றொரு அரசன் இருந்தான். அவன் சகல நற்குண நற் செய்கைகளும் வாய்ந்தவன். போரில் மஹாவீரன். அவனுடைய மனைவி பெயர் மந்தாரலக்ஷ்மி. பெண்டிர்க்குரிய நால்வகைக் குணமும் பொருந்தி யுள்ளவள். அழகிற் சிறந்தவள். தன் கணவன் மாட்டு நிறைந்த காதலும் பக்தியும் உடையவள். எவ்வாற்றானும் மேன்மையுற்றும் புத்திர பாக்கியம் இல்லாக் குறையால் அரசனுக்குத் தினந்தோறும் கவலை வளர்ந்து கொண்டே வந்தது. புத்திரப் பேற்றைக் குறித்துப் பல வித தருமங்களை மன்னவன் உவப்போடு செய்தான். கோயில்களுக்குத் தீப கட்டளை, அன்ன கட்டளை முதலிய ஏற்படுத்தினான். பூசுரர்களுக்குத் தினந்தோறும் குடை, உடை, பசு, பூமி முதலிய தானங்கள் செய்தான்.

     என்ன செய்தும் புத்திரோற்பத்தி யடையாமையால் அரசன் மிகக் கவற்சியோடு தன் மனைவியை நோக்கி, 'ஹே! மந்தார லக்ஷ்மி! மனோமணி! எனது பிரிய நாயகி! நாம் இருவரும் பாக்கிய ஹீனர்கள். ஒரு குழந்தையின் தாமரைப் பூப் போலும் முகத்தைக் கண்டு களிக்கும் பாக்கியம் நமக்கு இல்லாமற் போய் விட்டது. இங்ஙனம் புத்திரனில்லாது இப்போது வருந்தும்படி நாம் முன் ஜன்மத்தில் என்ன பாவஞ் செய்தோமோ? புத்திரனில்லாதவனுக்கு நாடும் நகரமும் நாநா பதார்த்தங்களும், தனங்களும், சுற்றமும் யாது பயனைத் தரும்? அவனுக்கு இம்மையினுந் துக்கம், மறுமையினுந் துக்கம். நமது கர்ம வினையைப் பார்த்தாயா? பிதிர்த்தொழில் செய்ய மக்களில்லாவிட்டால் நமக்கு நல்ல கதி எங்கனங் கிடைக்கும்?' என்று கூறி இருவருங் கவலுந் தருணத்தில் ஆநந்த ஸ்வரூபியாகிய ஸ்ரீ நாரத முநிவர் அரசனது சபா மண்டபத்திற்கு வந்தார்.

     அரசன் அவரைப் பேராநந்தத்தோடு எதிரேற்று வந்தித்துப் பூசித்து சிம்ஹாசனத்தில் வீற்றிருக்கச் செய்தான். பின்பு அவரது பாதார விந்தத்தில் வீழ்ந்து நமஸ்கரித் தெழுந்து அவரை நோக்கி, 'வீணாதரரே! முநிபுங்கவரே! உமது பாத பதுமத்தை யான் ஈண்டுக் காண்பதனாலேயே எனக்கு எல்லா நன்மையுங் கைகூடின. எனது துக்கமெல்லாம் ஒழிந்தன. நான் மக்கட் பேறடைய யாதோர் ஐயமும் இல்லை. புண்ணிய புருஷர்கள் ஒருவன் திருஷ்டியிற் பட்டபோதே நன்மைகளெல்லாம் அவனை நாடிவரும். இன்று நான் பரிசுத்தனாயினேன்; மிகப் பிரசித்தனாயினேன்; சிம்ஹள தேயத் தரசர்களுள் மிக்க நிலை பெற்றவனாயினேன். ஹே! மந்தாரலக்ஷ்மி! இங்கே வா! முநிபுங்கவரது பாத தாமரையைச் சிரசிற்றரித்துக் கொள். இவரோ திவ்யர். மஹா முநிவர். பிரமபுத்திரர். நினைத்த காரியத்தை நிமிஷத்தில் முடிக்க வல்லவர். இவர் கடாக்ஷம் பெற்றாய்; புத்திரப்பே றுற்றாய் எனப் பலவாறு கூறி, முநிபுங்கவரைப் பணிந்து நின்றான்.

     இவ்வார்த்தைகளைச் செவியேற்ற ஸ்ரீ நாரத முநிவர; சந்திரிகை போலும் ஒளி பொருந்திய புன்சிரிப்போடு தமது அமுத வாயைத் திறந்து,

     "பூபதே! நீ ஸ்ரீ நீலகண்டப் பெருமானைப் பூசித்தல் வேண்டும். அவரே தேவாதி தேவர். மூவர்கள் முதல்வர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க் கினியர். அவரை வழிபட்டால் உனக்குமங்களம் உண்டாகும். உனது பூர்வ கர்ம வினையால் உனக்குச் சந்ததி யில்லாதாயிற்று. நீ முன் ஜன்மத்தில் அந்தணருடைய பொருளை மோசஞ் செய்து கவர்ந்தாய். உன்முற்பிறப்பின் வரலாற்றைக் கூறுகிறேன்; கேட்பாயாக --

     'நீ குந்தள தேசத்தில் அந்திய வமிசத்திற் பிறந்து வளர்ந்தாய். பலர் பொருளைக் கவர்ந்து வீடு, வாசல் முதலிய கட்டிக்கொண்டாய். தாடங்கன் என்பது உன் பெயர். உன்னுடைய பண ஆசையால் நீ ஒரு முறை பிராமணர் வீதியில் தேவேந்திரனுக்குச் சமமான செல்வத்தை யுற்ற கோவிந்தசருமன் என்பவனுடைய வீட்டில் இரவிற் கன்னம் வைத்துச் சுவரைத் தொளைத்து உள்ளே புகுந்து நவனும் அவன் மனைவியும் குழந்தையும் உறங்குவதைக் கண்டு ஆண்டுள்ள பொருள்க ளெல்லாவற்றையுங் களவாடினாய். அப்போது அங்கே வைரக் கடுக்கன், பொற்றோடு, பொன் அறைநாண், பொற்சிலம்பு முதலிய அணிந்து உறங்கும் குழந்தையை அதிக குதூகலத்துடன் மெதுவாய் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து அருகிலுள்ள காட்டில் நுழைந்து, ஆபரணங்களெல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, குழந்தையைக் கழுத்தைப் பற்றித் திருகி முறித்து ஓர் ஆழ்ந்த கிணற்றில் எறிந்து சென்றாய்.

வீட்டிற் கோவிந்த சருமனும் அவன் மனைவியும் தங்குழந்தையைக்காணாது பிரமித்து வாய்விட்டலறினார்கள். 

'ஐயோ! எங்கள் அருமைக் குழவியைக் காணோமே! 
எங்கள் கண்மணியை இழந்தோமே! என் செய்வேம்! என் செய்வேம்! 
அந்தோ! தெய்வமே! மோசஞ் செய்தாயே! இதுவோ நினதருள்! 
அப்பா! குழந் தாய்! யாண்டுச் சென்றாய்! எங்கே இருக்கிறாய்!

"வாராயோ! வாராய! மைந்த! எதிர் வாராயோ!
பாராயோ எங்கள் முகம்! பாராயோ எங்கள்முகம்!

கண்ணே! மணியே! கரும்பே! தெளி தேனே!
உண்ணோய் கெடஎம்முன் ஓடியெதிர் வாராயோ!

காண்டகு காதலனே! காண்டகு காதலனே!
யாண்டுநீ போயினையோ! யாண்டுநீ போயினையோ!

மதியிழந்தேம் செல்வ! வகையிழந்தேம் நல்ல
கதியிழந்தேம் மைந்தவுனைக் காணாத பாவியேம்."

     இங்ஙனம் இவர்கள் அழ, இத் துக்க சமாசாரம் ஊர் முழுவதும் பரவிற்று. அவ்வூர் அரசன் செங்கோல் நடாத்துஞ் சீரிய குணத்துச் செல்வன். அவன் இதனைக் கேட்கவே, வெவ்விடந் தலைக்கொண்டாற் போல் வேதனை யகத்து மிக்குக் காவலரைக் கூவி, 'நீங்கள் நாற்புறத்துங் காற்றிற் பறந்தோடித் துருவித் திருடனை உடனே கொணருதிர்' எனப் பணித்தான். அங்ஙனம் புறப்பட்ட காவலருட்சிலர் தாடங்கனாய உன்னைப் பிடித்தார்கள். கைகளிலும், உடல் மீதும், இரத்தக் கறை இருக்கக் கண்டு உன்னை அவர்கள் இறுகப் பிணித்து நையப் புடைக்கவே, நோய் தாளாது நீ உண்மையை ஒப்புக்கொண்டாய். நீ கவர்ந்த சொத்துக்களை உன்னிடமிருந்து பற்றிக் கொண்டு துஷ்டனாகிய உன்னையும் கழுமுனையி லேற்றும்படி அரசன் ஆக்ஞாபித்தான். ராஜ வீதியின் கோடியில் ஒரு புறத்தில் உன்னைக் கழுவேற்றினார்கள். கோவிந்த சருமனும் அவன் சுற்றத்தாரும் 'விதியினை யாவரே வெல்லு நீர்மையார்" என்ற உண்மையை யோர்ந்து ஒருவாறு மனம் தேர்ந்து சிறிது கவற்சி நீங்கினார். இஃதிவ் வாறாக:

     தாடங்கனாகிய நீ கழுமுனையில் தினந்தோறும் மரணவாஸ்தையோடு துடித்துக் கொண்டிருந்தாய். அப்போது காசி யாத்திரை செய்கின்ற புண்ணியசீலர் ஒருவர் அவ்வூரில் இரவில் நீ இருந்த இடத்திற்குச் சமீபத்தில் வந்து தங்கினார். அவர் உன் கூக்குரலைக் கேட்டு உன்னை உற்றுப் பார்த்துப் பயந்து பின் வாங்கினார். அப்போது நீ அவரை நோக்கி, 'ஐயரே! அஞ்சுதல் வேண்டாம், தயை செய்து சமீபத்தில் வாருங்கோள்' என்று சொல்ல, அவரும் சமீபித்து வந்தார். வருதலும் நீ அவரை நோக்கி, 'ஐயரே! தனது தீய நடத்தையால் வரும் ஆபத்துக்களை ஒருவன் நீக்க முடியுமா? நான் செய்த தீமையோ மிகவுங்கொடியது. அவனவனது கர்ம பலத்தை அவனவனே அனுபவித்தல் வேண்டும். நீங்கள் தீர்த்த யாத்ரிகர் போலத் தோன்றுகின்றது. புண்ணிய தீர்த்தங்களில் ஆடி வரும் நீங்கள் எனது வேண்டுகோள் ஒன்றைச் செவியேற்றருளல் வேண்டும்; கங்கைக் கரையிற் கயா சிரார்த்தம் வெகு விசேஷமென்று நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். அங்கே நீங்கங் சிரார்த்தம் செய்வதால் வரும் பலனில் நூற்றில் ஒரு கூறு தனியாய் எனது நற்கதிக்கென்று தத்தஞ் செய்ய வேண்டுகின்றேன். இதுவே என் பிரார்த்தனை. இப்பிறப்பில் இனி ஒன்றும் என்னால் இயலாதாதலின் இவ்வுதவிக்குக் கைம்மாறு நான் மறுபிறப்பிலேனுஞ் செய்கிறேன், என்று இரந்து கேட்டுக்கொண்டாய். இம்மொழியைக் கேட்ட தயாளுவாகிய அவ்வழிப்போக்கர் 'அங்ஙனே செய்கிறேன், அஞ்சுதல் வேண்டா' என வாக்குத்தத்தஞ் செய்து சென்றார்.

     இங்ஙனம் நாலைந்து நாள் நீ கழுமுனையிற் றுன் புற்றாய். அப்போது ஓர்நாள் நள்ளிருளிற் பேய்க் கூட்டங்கள் உன் அருகிற் போந்து சூழ்ந்தன. அவை வெகு கோரரூபத்தன. பிலம் போன்ற வாயையும், வாயால் உண்டு நிறையாத வயிற்றையும், பனங்காடு போலப் பரந்துள்ள கைகளையுங் கால்களையுங் கொண்டன. புற்றென்று நினைத்து உடும்பு, பாம்பு முதலிய உட்புகுந்து உறங்கும் உந்தியையும், பாம்பைப் போலத் தொங்கும் உரோமங்களையும், பாசிபடர்ந்த பழைமையான மூக்குத் தொளைகளையும் உடையன. ஆந்தை ஓர் புறத்துப் பதுங்கியிருக்க, துரிஞ்சில்
அங்கும் இங்கும் உலாவும் செவிகள் வாய்ந்தன. மண் வெட்டியையுங் கலப்பையையுங் கோத்துவைத்தாற் போன்ற பல் வரிசைகளைப் பெற்றன. பச்சோந்தி, பாம்பு முதலியவற்றைக் கோத்துத் தாலியாக அணிந்து கொண்டிருப்பன. ஆகாயத்தை முட்டுந் தலையையும், தாழ்ந்து மார்பின் கீழ் வந்து தட்டும் உதட்டையும் உடையன. பருத்துயர்ந்த பருமூங்கிற் புதர்களைக் கண்டால் 'எம் அன்னை அன்னை' என்று அவைகளோடு உறவாடுவன. ஒட்டகங்களைக் கண்டால் 'இவை எம் பிள்ளை பிள்ளை' என்று அவைகளைச் சீராட்டுவன. [6]
-----------------
[6]. கலிங்கத்துப் பரணியிலுள்ள பின்வருஞ் செய்யுள்களைத் தழுவிப் பேய்களின் வருணனை எழுதப் பட்டது:

'வன்பிலத்தொடு வாதுசெய் வாயின
வாயினால்நிறை யாத வயிற்றின
முன்பிருக்கின் முகத்தினு மேற்செல
மும்முழப்படு மம்முழந் தாளின.

பெருநெடும்பசி பெய்கல மாவன
பிற்றை நாளின் முன்னாளின் மெலிவன
கருநெடும் பனங்காடு முழுமையுங்
காலுங் கையு முடையன போல்வன.

வற்றலாக வுலர்ந்த முதுகுகண்
மரக்கலத்தின் மறிபுற மொப்பன
ஒற்றை வான்றொளைப் புற்றெனப் பாம்புடன்
உடும்பு முள்புக் குறங்கிடும் உந்திய.

பாந்த ணால்வன போலு முடன்மயிர்ப்
பாசி பட்ட பழந்தொளை மூக்கின
ஆந்தை பாந்தி யிருப்பத் துரிஞ்சில்புக்
கங்கு மிங்கு முலாவு செவியன.

கொட்டு மேழியுங் கோத்தன பல்லின
கோம்பி பாம்பிடை கோத்தணி தாலிய
தட்டி வானைத் தகர்க்குந் தலையன
தாழ்ந்து மார்பிடைத் தட்டு முதட்டின.

அட்ட மிட்ட நெடுங்கழை காண்கிலென்
அன்னை யன்னை யென்றாலுங் குழவிய
ஒட்ட ஒட்டகங் காண்கிலென் பிள்ளையை
ஒக்கு மொக்குமென் றொக்கலை கொள்வன'

இத்தகைய பேய்க் குழாத்தில் இருந்த ஒரு பெண் பேய், 'தெய்வமே! இப்பூமியில் எனது சாபத்தைப் போக்குவாரும் உண்டோ? ஒரு மனிதன்கூட எனக்கு அருகில் வருகின்றானில்லையே" என்று ஏக்கத்தோடு கதறாநின்றது. இதனைக் கேட்ட ஏனைய பேய்கள் 'உனக்குச் சாபம் எங்ஙனம் வந்தது?' என அப்பெண் பேய் சொல்லலுற்றது:

     "கேளுங்கோள் என் கதையை. யான் முன் ஜன்மத்திற் பெண்கள் சிகாமணியாய் வேசியர் குலத்துக்கு ஓர் ரத்ந மாலிகையாய்ப் பிறந்தேன். என் இச்சைபோன வழியெல்லாஞ் சுகித்திருந்தேன். குபேர நிதியும் தேவேந்திர போகமும் என்னிடத்து ஒருங்கு இருந்தன. தனப் பெருமையாலும் சௌந்தரியப் பெருமையாலும் நான் அரசர்களுக்கும் அஞ்சவில்லை.ரூபலாவண்யத்தாலும், வெகு ரம்யமாய்ச் சல்லாபஞ் செய்யுஞ் சாமர்த்யத்தாலும், ஆடல், பாடல் முதலியவற்றிலிருந்த முதற்றர தேர்ச்சியாலும், மற்றும் வேசியர்க்கு வேண்டிய லக்ஷணங்களாலும் வேசியர்
யாவரினும் மேம்பட்டு வேசியர்திலகம் எனப் பிரசித்தி பெற்றேன். பொருள் பறிப்பதில் எனக்கு இருந்த சாமர்த்யம் வேறு எவருக்குங் கிடையாது. இங்ஙனஞ் செல்வ மமதையாற் கண் கெட்டிருந்ததால் நான் ஒரு பெரிய தோஷத்திற்கு இடந் தந்தேன். ஒரு நாள் அந்தி வேளையில் எனது தோழியரோடு விளையாடிக்களித்து மாளிகையின் மேன்மாடியி லிருந்தேன். அப்போது வாயி லிருந்த தம்பலத்தை மென்று கீழே உமிழ்ந்தேன். அந்தோ! என் பாபம்! அது கீழே தெருவிற் போய்க்கொண்டிருந்த ஒரு விப்பிர சிகாமணியின் [7] தலை மீது வீழ்ந்தது. அம் மறையோன் நிமிர்ந்து நோக்கி, 'அடீ! வேசி! நீ நசிப்பாயாக! துஷ்டே! நீ பிசாசாகக் கடவது' எனச் சபித்தான்.
----
[7]. விப்பிர சிகாமணி -- பிராமண சிரேஷ்டன்.

     இதனைக் கேட்ட நான் மனங் கலங்கி விரைவிற் கீழிறங்கி ஓடி அவன் பாதத்து வீழ்ந்து நமஸ்கரித்து, 'அறியாது செய்த அபராதத்தை, அந்தணர் பெருமான் க்ஷமித்தருளல் வேண்டும். கருணாநிதியே! பெரியோர் சிறு நாய்களின் பிழையைப் பொறுத்தல் வேண்டுமன்றே' எனப் பல நய வசனங் கூறி எனது வீட்டுக்கு அழைத்து வந்து அப்யங்க ஸ்நாநஞ் செய்வித்து சோடசோபசாரங்களுஞ் செய்தேன். அன்னமும் பாலும் புசிப்பித்தேன். வெண் பட்டுஞ் செம்பொன்னும் அளித்தேன். பன்முறை பணிந்து பணிந்து வணங்கினேன். அவ்வந்தணர் பெருமானும் உள்ளம் உவந்து 'நன்றாகுக' எனக் கூறி என்னை நோக்கி, 'தாமரைக் கண்ணீ! என் மனத்திற் கோபம் அடங்கி உவகை உண்டாயிற்று, உனக்குச் சாப விமோசனந் தருகின்றேன். நீ பேய் உருவத்தோடு பூமியிற் பல இடங்களிலுந் திரிவாய். எப்போது உன்னை ஒரு மனிதன் பாணிக்கிரஹணஞ் செய்வானோ அப்போது உனக்குச் சுகம் உண்டாகும்' எனக் கூறிச் சென்றான். அன்றே நானும் இப்பேய் உருவத்தை யடைந்தேன். பல இடங்களிலும் உழன்றேன். பிராணி வர்க்கங்கள் என்னைக் காணும்போதே பயப்பட்டு ஓடுகின்றன. அப்படி யிருக்க என்னை எவன் பாணிக்கிரஹணஞ் செய்வான்? ஈஸ்வரா! என்ன தௌர்ப்பாக்கியம்! நான் யாரோடு நோகேன்! யார்க்கெடுத் துரைப்பேன்! என்னைக் கலியாணஞ் செய்து கொள்பவனுக்கும் சுபமுண்டாகும் என அவ்வந்தணர் கூறியுள்ளார். யாரும் பயத்தால் எனக்குச் சமீபத்திலும் வருகிறதில்லை; எனக்குத் தினந்தோறும் துக்கம் பெருகுகின்றது" -- என்று இவ் வண்ணம் தன் வரலாற்றை ஸவிஸ்தாரமாய்க் கூறி அப்பெண் பேய் புலம்பிற்று.

     இவ்விருத்தாந்தங்க ளெல்லாவற்றையும் கழுமுனையிலிருந்து கவனமாய்க் கேட்டுக்கொண் டிருந்த தாடங்களாய நீ, 'பேய் மணியே! உன்னை நான் கலியாணஞ் செய்து கொள்ளுகிறேன். ஆனால் நானோ மகாதுஷ்டன், கழுமுனையி லிருப்பவன். காலனூர்க்கேருந் தருணத்தினன். ஆயினும் இருவருக்கும் நன்மை உண்டாகுமாதலால் உன்னைக் காந்தருவ விவாகஞ் செய்துகொள்ளுகிறேன்; உன்னைச் சாபத்தினின்றும் மீட்பேன்' என்று சொல்ல, அப்பிசாசும் உடனே தன் குழுவினின்றும் பிரிந்து தானுங் கழு முனையிலேறிப் பாணிக்கிரஹணஞ் செய்து கொண்டது.

     பின்னர் மறுபிறப்பில் அப்பேய் ராஜகுமாரியாய்ப் பிறந்தது. சாக்ஷாத் அந்த ராஜகுமாரியே உன் மனைவி மந்தாரலக்ஷ்மி. தாடங்கனாய நீயோ, கயாசிரார்த்த பலனில் அற்பமாகிய ஒரு சிறு கூறு அவ்வழிப்போக்கர் உனக்குத் தத்தம் பண்ணினதால், இத்துணைக் கீர்த்தியையும் பெருமையையும் இப்பிறப்பில் அடைந்து, இந்த சிம்ஹள தேயத்துக்கு அரசனா யிருக்கின்றாய். நீ செய்த சிசு ஹத்தியே உனக்குச் சந்ததி யில்லாமற் செய்துவிட்டது. ஆதலின், மன்னவ, நீ காசிக்குப் போய்க் கங்கைக் கரையிற் கயா சிரார்த்தம் செய்து முற்பிறப்பில் அவ்வழிப்போக்கருக்கு நீ வாக்களித்தபடியே கடனை நிறைவேற்றினால், சிவசாமீப பதவியிலிருக்கும் அவரும் சிவ சாரூபம் பெற்று சிவ கணத்தவருள் ஒருவராவார்; உனக்குந் தவறாது புத்திரப்பே றுண்டாகும். சிம்ஹத்வஜ! நீ கவலுதல் வேண்டாம். காசிக்குச் செல்லுக, கங்கா ஸ்நாநஞ் செய்க, விசுவநாதருக் கன்பனாகுக. நாகபூஷணரது அன்பு கிடைக்க வேண்டின் பாகீரதி ஸ்நாநஞ் தான் அதற்கு ஔஷத மாகும். காசித் தலத்தின் பெருமையையும் அவ் விசுவேசரது பெருமையையும் யான் என்னென்றெடுத்துரைப்பேன். ஆயிரம் நாவுடைய ஆதிசேடனாலுஞ் சொல்ல முடியாது. ஆயினும் என் ஆசை அடங்க யான் சிறிது கூறுவேன்:--

"இரண்டெ ழுத்தினா லாகிய காசியென் றிசைக்கும்
அரண்ட ருந்திர மந்திரம் அளற்றீனின் றெடுத்துத்
திரண்ட இன்புலா முத்தியிற் சேர்க்குமேற் சிலம்பு
குரண்ட நீர்ச்செழுங் காசிமான் மியமெவர் குறிப்பார்? [8]

"வார ணாசி யுளநினைத்தோர் வளமார் சிவசா லோக்கியரே
வார ணாசி வாய்மொழிவோர் வளமார் சிவசா மீப்பியரே
வார ணாசி தரிசித்தோர் வளமார் சிவசா ரூப்பியரே
வார ணாசி வசித்தமர்வோர் வளமார் சிவசா யுச்சியரே.[9]

"காசியை நினைக்க முத்தி காசியென் றுரைக்க முத்தி
காசியைக் காண முத்தி காசியைச் சூழ முத்தி
காசியில் வசிக்க முத்தி காசியைக் கேட்க முத்தி
காசியின் வசிப்போர் தம்மைக் கண்டுதாழ்ந் திடுதன் முத்தி.[10]

"காசி யுள்ளுநர், காசி கேட்டுநர்
காசி காணுநர், ஆசின் முத்தரே." [11]
-------------
[8,9,10,11].காசி ரகசியம்.

     காசிநாதரை வணங்காத மனிதன் வஞ்சகன். ஒருவன் காசிக்குப் போகின்றேன் என்று தனது பாதத்தை முன்னிட்டு முன்னிட்டு வைத்தால் அவனுடைய பாபங்களெல்லாம் பின்னிட்டுப் பின்னிட்டு ஓடிப்போகும். 'காசிக்குப் போகின்றேன் நான்' என்ற உரைகளைக்கேட்ட அளவில் பிரமஹத்தியாதிகள் பயப்பட்டு ஓடும்.

     'கங்கா' என்னும் பதத்திலுள்ள அக்ஷரங்களைத் தியானஞ்செய்தால் மனிதன் சுத்தனாவான். நமது கையின் பயன் விசுவேசரைத் தொழக் கூப்புவதே. காலின் பயன் அவர்கோயிலை வலம் வருவதே. செவியின் பயன் அவர் புகழைக் கேட்பதே. கண்ணின் பயன் அவர் ஸ்தலத்தைக் காண்பதே. தலையின் பயன் அவரை வணங்குவதே. நெஞ்சின் பயன் அவரை நினைவதே.

"கண்ணுதலா லயநோக்குங் கண்களே கண்கள்,
      கறைக்கண்டன் கோயில்புகுங் கால்களே கால்கள்,
பெண்ணொருபா கனைப்பணியுந் தலைகளே தலைகள்,
      பிஞ்ஞகனைப் பூசிக்குங் கைகளே கைகள்,
பண்ணவன்றன் சீர்பாடு நன்னாவே நன்னா,
      பரன் சரிதை யேகேட்கப் படுஞ்செவியே செவிகள்,
அண்ணல் பொலங் கழனினைக்கும் நெஞ்சமே நெஞ்சம்.
      அரனடிக்கீழ் அடிமைபுகும் அடிமையே அடிமை." [12]
----------------
[12]. பிரமோத்தரகாண்டம்

     சிம்ஹத்வஜ! சிவபிரான் மெய்யர்க்கே மெய்ய ராதலின் அவர்மாட்டுக் கெடாத உறுதியும் நம்பிக்கையும் உனக்கு இருத்தல் வேண்டும். நல்வழி ஒன்று தோன்றும்போது அதனை உடனே கைப்பற்றுதல்வேண்டும். காசிக்குப் போவது மகாகஷ்டம்; வழியிற் பலவித இடையூறுகள் நேரிடக்கூடும். அடியார்களது உறுதியைச் சோதிப்பதிற் சிவபெருமானுக்கு எப்போதும் ஆசையுண்டு. உறுதியுள்ளவர்களுக்கு எம்பிரான் அருள் புரிவார். ஆதலின், சிம்ஹத்வஜ! நீ காசிக்கு அவசியம் போகவேண்டும். சந்திரசேகரமூர்த்தியின் கருணையினால் புத்திரபாக்கியம் முதலிய சகல சம்பத்தும் உனக்கு உண்டாகும். இது

     நிச்சயம், நிச்சயம், முக்காலும் நிச்சயம்" என்று உரைத்து அரசனுக்கு ஆசி கூறி அவன்பால் விடைபெற்றுப் போயினர்.

     அரசனும் அப்போதே வேறு ஆலோசனை ஒன்றுஞ் செய்யாது காசியாத்திரைக்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாஞ் செய்தான். வைதிக பிராமண சிரேஷ்டர்களும் சிவ முநிவர்களுந் தன்னொடு வரத் தனது மனைவி மந்தார லக்ஷ்மியோடு புறப்பட்டான். காட்டுவழிக்கு இன்றி யமையாத வில், அம்பு, முதலிய ஆயுதங்களையும் எடுத்துச் சென்றான்.

     பலநாள் யாத்திரை செய்து வந்தவர்கள் ஒரு நாள் அந்தி வேளையில் விந்தமலையின் பக்கத்திலுள்ள காட்டிற்றங்கும்படி நேரிட்டது. அப்போது திடீரென்று மலையின் ஒரு சாரலினின்று அநேகங் கள்ளர்கள் வந்து அரசனைச் சூழ்ந்து கொண்டார்கள். சூழ்ந்தவர் அரசனது பொக்கிஷத்தை ஒரு நொடியிற் கவர்ந்தனர். அவர்கள் தலைவன் மந்தாரலக்ஷ்மியைத் தூக்கிச் சென்றான். இதனைக் கண்ட அரசன் அக் கள்ளர் தலைவனைத் துரத்திச் சென்று யுத்தஞ் செய்யப் பிரயத்தனப் பட்டான். 

     கள்ளர் தலைவன் மந்தஹாஸத்துடன் அரசனை நோக்கி, 'ஏடா! மூடா! இந்த மஹாவிந்த கோரகானன வழியில் அந்தி வேளையில் வந்து பாளையத்துடன் இறங்கினாய். உன் மதியை யிழந்தாய்; நிதியை யிழந்தாய்; தாரத்தையு மிழந்தாய். இங்ஙனம் இழந்தது மல்லாமல் எதிர்த்து மீட்கவும் புறப்பட்டாய். இது சுத்த மதிஹீனம். வழிபோக்கரிடத் திருந்து தட்டிப் பறிப்பதில் மஹா சாமர்த்யமுள்ள தும்பீரன் என்பவன் நான். உன்னுடைய இந்த மனைவியைப் போல இவ்விதத்திற் கிடைத்த ஆயிரம் மனைவிமார் எனக்கு உண்டு. ஏடா! இன்றல்ல இந்த சௌரியம் எனக்குப் பிறந்தது. இங்ஙனம் வழி பறித்தல் நாங்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்து வரும் தருமமாம்' என்று சொல்ல, மகாவீரனாகிய அரசன் அடங்காக் கோபத்தோடு 'அடே, துஷ்டா! உனது புன்னெறி இன்றோடு முடிவு பெறுகின்றது, பார்! சற்சனங்களுடைய திரவியத்தை அபகரிக்கிற துர்ச்சனத் தலைவா! நில்லடா. இதோ எனது கொடிய பாணங்களுக்கு உன்னை இரையாக்குகின்றேன். கள்ளப்பயலே! உன்னுடைய தலை இதோ தூள் தூளாகப் போகிறது பார். பிழைத்தோட வேண்டு மென்றிருந்தால் எனது மனைவி மந்தாரலக்ஷ்மியை விட்டுவிட்டுப் போடா. என்னை யாரென்று நினைத்தாயடா? உங்களைப்போன்ற மிருகங்களை அழிப்பதற்கென்றேற்பட்ட மிருகேந்திரனாய சிம்ஹத்வஜன் என்னும் அரசன் நான். சங்காருத்திரனுடைய பக்தன் நான். ஆயிரங் காக்கைக்கு ஓர் கல் போதாதா? இதோ உன்னையும் உன் இனத்தாரையும் ஒரு நொடியிற் சங்கரிக்கின்றேன்; துஷ்ட பிண்டமே! சண்டாள ஜன்மமே! அர்த்தத்திற்கு[13] ஆசைப்பட்ட உனக்கு அநர்த்தம் சமீபித்துவிட்டது' என்று கூறி எதிர்த்தான்.
-----------------------
[13]. அர்த்தம் = பொருள்

     இங்ஙனம் வாதித்த அரசனுக்குங் கள்ளர் தலைவனுக்கும் யுத்தம் வெகு கோரமாய் நடந்தது. கோபத்தினாற் கண் சிவந்து புருவத்தை நெறித்துத் தனது வில்லை விளைத்துச் சரமாரி பெய்தனன் அரசன். அவைகளை எல்லாந் தடுத்துத் தானும் மறுமாரி பெய்தான் தும்பீரன். அதிக கோலாகலத்துடன் வெகுநேரம் இருவர்க்கும் சண்டை நடந்தது. ஈற்றில் மஹா கொடியனான தும்பீரன் சிம்ஹத்வஜனுடைய வில்லை முறித்துச் சிம்ஹநாதஞ் செய்தான். அரசன் உடனே முஷ்டியுத்தத்திற்குப் பாய்ந்தடுத்தான். அந்த யுத்தத்தில் தும்பீரன் அரசனைப் பிண்டம் பிடித்து விட்டான். அரசனும் மூர்ச்சித்துத் தரையில் வீழ்ந்தான். தும்பீரவேடன் அரசனுடைய உடம்பை எலுமிச்சம்பழரத்தைப் பிழிவதுபோற் கசக்கி விட்டு மந்தாரலக்ஷ்மியையும் உடன் கொண்டு தனது பரிவாரங்களுடன் போய்விட்டான். ஆபத்து வேளையில் அரசனோடு எஞ்சிநின்ற சில சந்நியாசிகள் அவனுக்கு மூர்ச்சை தெளிவித்தார்கள். அப்போது அவன் அவர்களை நோக்கி மிகுந்த துக்கத்துடன் கூறுகின்றான் :--

     'அந்தோ! ஐயன்மீர்! நமது காலதோஷத்தைக் கண்டீர்களா? சண்டையில் தோற்ற என் சரீரம் மிகத் தளர்ந்தது. அவயவங்களை அசைக்கக்கூட முடியவில்லை. எனது சஸ்த்ரங்கள், அஸ்த்ரங்கள், வஸ்த்ரங்கள் யாவுந் தொலைந்தனவே. கஷ்டம், நான் ஏன் இன்னும் பிழைத்திருக்கின்றேன். கங்காதரா! என்னைக் கைவிட்டாயோ? எவ்வகைத்தான யுத்தத்திலும் எனக்கு ஒப்பாவார் கூட இதுவரையும் நான் கண்டதில்லையே! அத்தகைய மஹா வீரனாகிய என்னைச் சயித்த அத் தும்பீரன் என்பான் எவனோ? இந்த லோகத்தானோ? மற்றெந்த லோகத் தானோ? என்னே அவன் ஆற்றல்! பாவி, எனது மந்தாரலக்ஷ்மியையுங் கொண்டு போய்விட்டானே. ஈசா! யான் பிள்ளைவரங் கேட்க வந்து பெண்டிழந்து போனேனே. இஃதென்ன காலகதி.'

     இங்ஙனந் தன்மனைவியை நினைத்து நினைத்து, மனம் பதறி அரசன் புலம்புகின்றான் :--

"மந்தார லக்ஷுமியே! மந்தார லக்ஷுமியே!
பந்தார் முலையாய்! பதகன் உனைப்பிரித்தான்;
அந்தோ! அவலத் தழுங்கிப் புலம்புகின்றேன்;
இந்தோ எனுமுகத்தாய்! என்றுன்னைக் காண்பேனோ?

காசித் தலத்துறையுங் கங்கா தரா! வுன்னைப்
பூசித் தடிபணியப் பூரியேன் போந்தேனென்
ஆசைத் தளிரியலை யொரோ ஒரு பாவி
கூசித் தவிராது கொண்டிருப் போயினனே.

கண்ணே! கருணைக் கடலே! அருமறைகள்
அண்ணா எனவேத்தும் அத்தா! அடியேன் றன்
கண்ணான காதலியைக் காட்டாயோ? காட்டாயோ?
உண்ணோ யகற்றாயோ? உண்ணோ யகற்றாயோ?

     இங்ஙனம் புலம்பித் தன்னோ டிருந்தவர்களை நோக்கி, 'அன்பர்களே! பாகீரதி ஸ்நாநத்தால் வரும் யோகமும் புண்ணியமும் பெறுதற்கு நான் பாத்திரனல்லன் போலும். ஜன்மஜன்மமாய்ச் சேர்ந்த வினைத் தொகுதியோ இங்ஙனந் தடைசெய்தது? எது எப்படியானாலும் நாம் உறுதியைக் கைவிடக்கூடாது, எடுத்த காரியத்தை நிறைவேற்றியே தீர வேண்டும். ஸ்ரீநாரத முனிவர் உபதேசித்ததை நான் மறக்க இல்லை. எவ்வகையாலும் காசிக்குப் போதலே நன்று' எனத் துணிபுடன் கூறித் தன் தேகநோயையும் புறக்கணித்துப் புறப்பட்டான்.

     அவன் கோவண ஆடையன்; 'மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியன்'; வழியிற் பிச்சை யெடுத்துங், காய், கனியுண்டும் பசியையாற்றுவன்; சித்தத்தை எப்போதுஞ் சிவன்பாலே வைத்தவன்; சிவன் புகழையே எடுத்தோதும் நாவினன்.

"தலையாற் பயனென்ன? தாளின்கீழ்ச் சீதக் [14]
கலையாற் கலைத்தான்றன் காசியைத் தாழாக்கால்.

கண்ணாற் பயனென்ன? காமருவு செம்பதுமக் [15]
கண்ணாற்குங் காணாதான் காசியைக் காணாக்கால்.

செவியாற் பயனென்ன? செம்மேனி வெங்கட்
செவியாற்[16] புனைந்தான் செழுங்காசி கேளாக்கால்.

மூக்காற் பயனென்ன? மூவுலகத் துங் குட
மூக்காற்[17] கிடமாம் மூதூகாசி மேவாக்கால்.

வாயாற் பயனென்ன? மாயச்சூர்ச் செற்ற அலை[18]
வாயாற் பயந்தான் மகிழ்காசி வாழ்த்தாக்கால்.

நெஞ்சாற் பயனென்ன? நீளுலகம் உய்ய அன்று
நஞ்சா ற்களங் கறுத்தான் [19] நற்காசி நாடாக்கால்.

கையாற் பயனென்ன? காவிரியைத் தந்தருள் ஐங்
கையா ற்குத் [20] தாதைவாழ் காசி தொழா அக்கால்.

மெய்யாற் பயனென்ன? மெய்யிற் கடல் சேர்த்த
கையாற்[21] குகந்தான் கவின்காசி மேவாக்கால்.

காலாற் பயனென்ன? கால னகங்குலையக்
காலாற் கடந்துகந்தான் காசிக்குப் போகாக்கால்.

------------------
[14]. சீதக்கலையான் -- சந்திரன். 
[15]. செம்பதுமக் கண்ணான் -- செந்தாமரைக் கண்ணன் -- விஷ்ணு. 
[16]. கட்செவியாற் புனைந்தான்-- நாகபூஷணன். 
[17]. குடமூக்கு-- கும்பகோணம். 
[18]. அலைவாயான்--திருச்செந்தூர்க் கடவுள். 
[19] களம்-- கழுத்து. [20]. ஐங்கையான் -- விநாயகர்.
[21]. மெய்யிற் கடல் சேர்த்தகையான் -- கடலைக் கையாலெடுத்து உட்கொண்ட அகஸ்த்யர்.

உற்றாரா ருள்ளார்? உயிர் கொண்டு போம்பொழுது செற்றார் புரமெரியச் செய்காசி நாதனல்லால்."

என அவர் தலத்தின் சீர்த்தியைப் புகழ்ந்து அங்கமாலை பாடியும்,

"வேதப் பொருளே சரணஞ் சரணம்
விடையே கொடியா யுடையாய் சரணம்
போதத் துருவே சரணஞ் சரணம்
பொலிநீர் பிறைசேர் சடையாய் சரணம்.

காதற் றுணையே சரணஞ் சரணம்
கடையே னிடர்நோய் களைவாய் சரணம்
ஓதற் கினியாய் சரணஞ் சரணம்
உமையாள் கணவா சரணஞ் சரணம்.

முக்கண் ணுடையாய் முதுகா டுறைவாய்
மைக்கண் ணுமையாள் மகிழ்கூ றுடையாய்
அக்கண் ணனுமந் தணனும் மறியா
மைக்கண் டநின்மா மலர்த்தாள் சரணம்."

என அவர் புகழின் கீர்த்தியைப் பரவியும், 

ஐயா மாயன் மைத்துனரே! உமது வஞ்சனையை இன் றறிந்தேன்.
உம்மைப்போல் என்னையும் ஆக்கிவிட்டீரே! பிச்சை யெடுக்கச் செய்தீரே! 
விபூதியின்றி வேறு அணிகலனில்லாது போம்படி செய்தீரே! 
கோவணமின்றி வேறு ஆடை இல்லா திருக்கவுஞ் செய்தீரே. நன்று! நன்று!

"நீறே பூசிச் சில்பலி நேடி நெடுங்கானிற்றூறே [22]
தோறுந் தேய்மதி யொடுஞ் சுழல்கின்றேன்
வேறே ஆடை கோவண மன்றி மிகையில்லை [23]
தேறா யென்னை உன்னிணை செய்தாய் சிவனேயோ!"

என அவரை வசை பாடியும், வழியின் கஷ்டத்தை மறப்பான்.
----------------
[22] தூறு--புதர்; [23]. மிகை--மிகுதி. 

     இங்ஙனம் பன்னாள் காடு, மலை, யாறு முதலியவற்றைக் கடந்து கண்டவர்க்குக் களிப்பளிக்குங் கங்கைக் கரையைக் கண்டான்; பேராநந்தங் கொண்டான்; குனிப்பான்; [24] சிரிப்பான்; களிப்பான்; 'யானுங் கங்கைக் கரையைக் கண்டேனே, கண்டேனே' எனப்பூரித்து மனமகிழ்ந்து சாட்டாங்க நமஸ்காரஞ் செய்தெழுந்து, 'சகல லோகத்தவரும் வணங்குகின்ற தேவதே! யான் உன்னை வணங்குகின்றேன். ஆகாச கங்கையே போற்றி போற்றி! லோகமாதாவே போற்றி போற்றி! அன்னாய்! கங்காதேவி உனது பெருமையை யான் என்னென் றெடுத்துரைப்பேன்'
எனப் பலவாறு புகழ்ந்து துதிக்கின்றான் :--
--------- 
[24]. குனிப்பான்--கூத்தாடுவான்.

"பொன்னேர் மெய்ந்நி றத்துப்புவி யாக்குவிக் கும்முதலுங்
கன்னேர் திண்பு யத்துக் கடல் வண்ணனுங் காண்பரிய
முன்னோன் நெஞ்சுவந்து முடி மேற்புனைந் தானுனையே
அன்னே! உன் பெருமை அளத் தற்கரி தம்மவம்ம!"

     இங்ஙனம் கங்கையை ஸ்தோத்திரஞ் செய்து அதின் மூழ்கி, கயாசிரார்த்தத்தையுஞ் செய்து, முன் ஜன்மத்தில் அவ்வழிப் போக்கர் தனக்கு அளித்த பலனுக்குக் கைம்மாறான பிரதி பலனையுந் தந்து கங்கைக் கரையோரமாய்ச் செல்லும்போது காணுதற் கரிய ஸ்ரீ காசி மாநகரைக் கண்டான். கண்டதும் பேருவகை கொண்டான். பொன்மயமான மாடமாளிகைகளும், ரத்நசிகரங்களும், ரத்ன தோரணங்களும், யாண்டும் பேரொளி வீசுதலைக் கண்ணுற்றுப் பேராநந்தம் அடைந்தான்.

     சுற்றிலும் விஷ்ணு, வைரவன், சூரியன், சந்திரன் முதலியோருடைய ஆலயங்கள் விளங்க, அவற்றின் மத்தியில் எமது விசுவேசரது திருக் கோயிலானது செவ்விய ரத்தினக் கல்லாலாகிய ஒரு பதக்கத்தில் நடுநாயகமாய்ப் பதித்துள்ள விலையிலா வைரக்கல் போலத் திகழா நின்றது. காசி மாநகர் எங்கும் சிவமயமாய்ப் பொலிந்திருந்தது. திருநீறு, ருத்திராக்ஷம், புலித்தோல் ,கட்டுவாங்கம், சூலம் முதலிய கொண்டுள்ள முநிவரர் குழாம் ஒருபால்; சிவநாம சங்கீர்த்தனஞ் செய்யும் பக்தர் குழாம் ஒருபால்; திருக்கோயிலுக்குப் பூத் தொடுப்பார் ஒருபால்; அலகிடுவார் ஒருபால்; 'இன்னிசை வீணையர் யாழின ரொருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பின ரொருபால்; துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்; தொழுகைய ரழுகையர் துவள்கைய ரொருபால்'--ஆக இவ்வாறு சாரூப சாம்பிராச்சிய பதவியில் வாழுங் கோடா கோடி, பக்த ஜனங்களைக் கண்ணுற்ற அரசன் புளகாங்கிதனாய்ப் பன்முறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி,

"செங்கனி யிற்பிறை சேர்த்தரு னெம்பிரான்
மன்னு காசி வளநகர் காணவும்
இன்ன காட்சியிலின்புற் றுருகவும்
என்ன புண்ணியஞ் செய்தனன் யானுமே"

எனக் கூறிப் பெரிதும் மனமகிழ்ந்தான்.

     பின்பு கங்கையில் ஸ்நாநஞ் செய்து, விபூதி, ருத்தி ராக்ஷமணிந்து, விசுவநாதரது திருக்கோயிலை வலம் வருங்கால், கங்காநதி பாரிசத்தில் விசித்திர மண்டபம் ஒன்றில் தென்றற் காற்றின் சுகத்தைஏற்றுக்கொண்டு தனது மனைவியாகிய மந்தாரலக்ஷ்மி ஓர் சிங்காதனத்தில் வீற்றிருப்பதைக் கண்டான்; கண்டதும் பிரமித்தவனாய், 'இஃதென்னை! மாயையோ அல்லது கனவோ! தும்பீர வேடன் தூக்கிச் சென்ற எனது கண்மணி மந்தாரலக்ஷ்மியை ஈண்டுக் காண்கின்றேனே! அற்புதம்! அற்புதம்! உமாபதீ! இதனை உருவெளித் தோற்றமாக்கி விடாதே! பார்வதி பாகா! இவ்வுருவை மாயையாக்கி விடாதே! உனதருளின் பிரபாவத்தை ஒளிக்காதே. அந்தகாசுரனைச் செற்ற அண்ணலே! உன் கிருபா பிரபாவத்தால் ஐந்து வர்க்கங்களில் என்ன அதிசய விளைவுதான் உண்டாகாது?' என்று சொல்லி அற்புத மனத்தனாய் நிற்கும்போது, கருணாகர மூர்த்தியாகிய விசுவேசர் இடபவாகன ரூடராய்ப் பிரத்தியக்ஷமாயினர்.

     விசாலாக்ஷியம்மையார் தமது இடப் பாகத்தில் விளங்கவும், கங்காதேவியும் இளம்பிறையும் சடைமீது பொலியவும், விநாயகக் கடவுளும் வேற்கரத் தண்ணலும் தமது அருகிற் றிகழவும், விஷ்ணு, பிரமன், இந்திரன் முதலிய தேவர் தலைவரும், அகத்தியர், பிருகு ஆகிய முநிபுங்க வருந்தற்சூழவும், சித்தர், வித்தியாதரர், கின்னரர், இயக்கர் முதலிய பதினெண் கணங்களும் தமது புகழை எடுத்தோதவும், நாரதர், தும்புரு ஆகிய இருவரும் இன்னிசை பயக்கும் யாழும் வீணையும் வாசிக்கவும், பேரற்புத கோலத்தோடு எம்பிரான் விளங்குவதைக் கண்ட அரசன் ஆநந்த பரவசனாய்க், 'கைகளுந் தலைமீ தேறக் கண்ணில் ஆநந்த வெள்ளம் மெய்யெலாம் பொழிய, வேத முதல்வரைப் பணிந்து போற்றி, ஐயனே! அடியனேனை அஞ்சல் என்றருள வல்ல மெய்யனே!' எனத் துதித்துப் பாடினான்; பரவினான்; பணிந்தான்.

     அப்போது கங்காதேவி ஞெரேலென இறங்கி மந்தார லக்ஷ்மியின் கரத்தைத் தனது திருக்கரத்தாற் பற்றிக் கொண்டு, 'சிம்ஹத்வஜ! வருக! உன் மனைவியைக் கொள்க!' எனத் திருவாய் மலர்ந்தருளுதலும், அரசனும் உவப்புடன் சென்று கங்கா தேவியை வணங்கித் தனது மனைவியைப் பெற்றுக் கொண்டு, கருணாநிதியாகிய கண்ணுதற் கடவுளைத் துதிக்கின்றான்:

"ஐங்கர யானை யளித்தனை போற்றி!
வெங்கர யானை வெகுண்டனை போற்றி!
பொங்கர வாரணி பூண்டனை போற்றி!
சங்கர போற்றி சதாசிவ போற்றி!

செருத்திகழ் முப்புரஞ் செற்றனை போற்றி!
அருத்தியி லென்னையு மாண்டனை போற்றி!
கருத்தட நின்றெனைக் காத்தனை போற்றி!
உருத்திர போற்றி உமாபதி போற்றி!

மாகுல வும்பொழில் வான நெருங்கும்
வாருள காசி மகிழ்ந்துறை மன்னா!
பாகுல வும்மொழி பாவையை யீந்தென்
ஆகுலம் யாவும் அகற்றினை போற்றி!"

     இங்ஙனம் மெய்யன்போடு துதித்தலைக் கேட்ட சிவ பெருமான் அரசனை நோக்கி, 'சிம்ஹத்வஜ! நமது கண நாதனாகிய நந்திகேசுரனைத் தும்பீரன் என்னும் வேடனாக அனுப்பி உனது தரும பத்தினியை ஈண்டுக் கொணர்வித்ததும், சண்டையில் உனது நிதி முதலியவற்றைக் கவர்வித்ததும் நாமே. இங்ஙனம் அச்சுறுத்தி வெருட்டினால் வந்தவழியே திரும்பிப் போய்விடுவாயோ அல்லது உறுதியோடும் அன்போடும் இந்த க்ஷேத்திரத்திற்கு வருவாயோ என உன்னைப் பரீக்ஷித்தோம். எமக்கு இப்போது முற்றுஞ் சந்தோஷமே. நீ புத்திமான், தைர்யசாலி. இப்போது நீ கயா சிரார்த்தம் செய்தமையால் உன் பாபம் எல்லாம் அறவே ஒழிந்தன. அதுவுமன்றி, முன் பிறப்பில் தனது சிரார்த்த பலனில் உனக்கு ஒருகூறு கடன் கொடுத்த வழிப் போக்கனும் நமது கணங்களில் ஒருவனாவான். இனி நீ பாரியாஸமேதனாய் உன் ஊருக்குப் போகலாம். இனி உனக்கு நன்மையே வரும். இன்னும் பன்னீராயிர வருடம் இப் பூவுலகைப் பரிபாலிப்பாய். உனக்கு ஓர் அருமைப் புதல்வன் பிறப்பான். நீ கவற்சியுற வேண்டாம். ஈற்றில் நீங்கள் எமது லோகத்தை அடைவீர்கள். மந்தார லக்ஷ்மியும் நீயும் இம் மந்தாகினியில் [25] முழுகுவீரானால் உங்கள் நகரத்து அரண்மனை வாவிக் கரையில் எழுவீர்கள்.உங்களுக்கு என்றும் மங்களமே" எனத்திருவாய் மலர்ந்து மறைந்தருளினார்.
------------------
[25]. மந்தாகினி--கங்கை.

     வெகு விநயத்தோடு சுவாமியின் திருவார்த்தையைக் கேட்டுக் கொண்டிருந்த அரசன் ஆநந்தக் கடலுள் திளைத்து, 'யார்க்கும், முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ' என வியந்து களிகூர்ந்தான்.

     சிம்ஹத்வஜன் பலநாள் அம் மஹாக்ஷேத்திரத்திற்றங்கி யிருந்து அந்நகர் முழுமையுந் தரிசித்துத் துண்டி விநாயகரையும், கதிர்காம வேலவரையும் வணங்கிப் போற்றி, விசுவநாதரையும் விசாலாக்ஷியம்மையையும் பன்முறை தாழ்ந்து வணங்கி,

"கோலச் சடைமேற் கங்கையொடு
      கொக்கின் இறகுங் கோளரவும்
வாலப் பிறையும் பொலிந்திலங்க
      மாசு மனத்தேன் முன்வந்து
சாலத் திருக்கண் ணருள்பொழிந்து
      தமியேன் உய்யும் வழிமொழிந்த
சூலக் கரத்துப் பெருமானுன்
      சுடற்பொற் பாதந் தொழுகின்றேன்.

தேவா வீசவ நாதாநற்
      செல்வி யன்ன பூரணியோ
டோவா தென்றுங் காசிநக
      ரோங்கிப் பொலிய அமர்ந்தருள்வோய்!
மூவா முதல்வா அடியேனை
      முன்பு சோதித் தருள் புரிந்த
கோவே உன்னை மொழிந்தேனே
      கொடிய பிறவி யொழிந்தேனே"

வேறு.

" ஈசன் காண் எவ்வுயிர்க்குங் கண்ணா னான்காண்
      ஏழ்கடலும் ஏழுலகுஞ் சேர்ந்து நின்ற
தேசன்காண் திருக்கயிலை மலைவாழ் வான்காண்
      சிறியேனைத் தொடர்ந்துவரு கொடிய பாச
நாசன்காண் நல்விசுவநாதன் றான்காண்
      நலமளித்துப் பவந்தொடைக்குந் தலமாங்காசி
வாசன்காண் மங்கைவிசா லாக்ஷி யாட்கு
      மணவாளன் காணவனென் மனத்து ளானே."

எனத் தோத்திரஞ் செய்து பிரியா விடை பெற்றுச், சிவபெருமானைச் சிந்தித்தவனாய்ச் தனது மனைவியோடு மந்தாகினியில் முழுகுதலும், தங்கள் ஊரிலுள்ள மாளிகை வாவிக் கரையில் யாவரும் வியக்கும்படி இருவரும் எழுந்தார்கள்.

     அரசனுக்கும் இறைவன் ஆக்ஞையின்படி ஓராண் குழந்தை பிறந்தது. அது வெகு திவ்விய ரூபத்தோடு பொலிந்தது. அரசன் அக் குழந்தைக்குத் தாலத்துவஜன் [26] என்ற நாமகரணஞ் செய்தான். பின்னர் கால முறையில் தனது மகனுக்குப் பட்டங்கட்டி முடியுஞ் சூட்டினான். தாலத்வஜன் மன்னுயிர்களைத் தன்னுயிரெனக் கருதிச் செங்கோல் செலுத்தி உலகைப் புரந்து வருதலைக் கண்டு அரசன் பேருவகை பூத்தான். பன்னீராயிர வருட முடிவில் சிம்ஹத்வஜனும் மந்தாரலக்ஷ்மியும் சிவபிரான் றிருவடி நீறலிற் சேர்ந்தனர். இருவரும் 'அவன் அருளாலே அவன்றாள் வணங்கி' அழியாப் புகழுக்குப் பாத்திரரானார்கள். தாலத்வஜனும் பன்னாள் இவ்வுலகை ஆண்டிருந்து அரன் சேவடியடைந்தான்.
-------------------
[26] பனைமரத்தைக் கொடியாக உடையவன்.

     காசித்தலத்தின் அருமையையும் கங்கா நாயகன் பெருமையையும் எடுத்தோதும் இக்கதையைக் கேட்போர்க்கு அழியா மேன்மை உண்டாகும்; அவர்செய்த பாபங்களெல்லாம் நசிக்கும்; புகழும் புண்ணியமுந் தோன்றும்; என்றும் சிவம் பெருகும்.

     இங்ஙனம் சிவபக்த சிரோமணியாகிய சூதமுநிவர்; இக்கதையைப் பத்திச்சுவை நனி சொட்டச் சொட்டச் சொல்லியருள, நைமிசாரணிய முநிவர்களும் அன்பினால் மனமுருகி 'அரகர' என்று சொல்லித் தொழுதார்கள்.

வாழ்த்து. 

கங்கை வாழி காசி வாழி காம கோப னெண்குணன்
நங்கள் விஸ்வ நாதன் வாழி நாரி அன்ன பூரணி
பங்க யப்ப தங்கள் வாழி பால்வெண் ணீறு வாழிய
எங்கு மிக்க தைப்ர பாவ மேத்து மன்பர் வாழிய.

திருச்சிற்றம்பலம்.
---------------

Related Content