திருச்சிற்றம்பலம்
ஆண்ட நம்பி
நாடகம் : 1 அணுக்க வன்றொண்டர்
காட்சி : 1
( சுந்தரர் திருமணக் கோலத்தில் அமர்ந்துள்ளார். முதியவர் திருமண மண்டபத்தில் வாயிலுக்கு வருகிறார் ).
முதியவர் : எனக்கும் உனக்கும் ஒரு வழக்கு உள்ளது. அதனை முடித்து விட்டு நீ உன்னுடைய திருமணச் சடங்கை நடத்து.
நம்பி : வழக்கா?! அப்படியொன்று உண்டென்றால் அதனை முடிக்காது இத்திருமணம் செய்யமாட்டேன். உமது வழக்கைக் கூறும்.
முதியவர் : ( எல்லோரையும் நோக்கி ) இந்த திருநாவலூரன் என்னுடைய அடிமை.
நம்பியும் பிறரும் : ( சிரித்து ) நல்ல கதையையா இது!
முதியவர் : ஏன் சிரிக்கின்றாய்?! உன் பாட்டனார் பாட்டனார் செய்த ஓலை எழுதிச் செய்த உறுதி அது, எவ்வாரடா சிரிக்கிறாய்!
நம்பி : அந்தணர் வேறோர் அந்தணர்க்கு அடிமையாதல் இல்லாத தொன்று. நீரென்ன பித்தரா, இவ்வாறு பேச?
முதியவர் : பித்தன் என்றும் சொல்! பேயன் என்றும் சொல்! இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். வித்தகம் பேச வேண்டாம் பணி செய்ய வேண்டும்!
நம்பி : எங்கே அந்த ஓலை? காட்டும்!
முதியவர் : அதை உனக்கேன் காட்ட வேண்டும். அவையோர் முன் காட்டுவேன், நீ எனக்கு பணிசெய்!
( நம்பி கோபமுற்று பெரியவரின் ஓலையை வறிக்கப் பார்க்கிறார். முதியவர் ஓட, நம்பி துரத்திச் சென்று ஓலையைப் பறிக்கிறார். )
நம்பி : நல்ல ஓலையாம்! ( கிழிக்கிறார் )
முதியவர் : ஆ! இது முறையோ! இவன் இவ்வோலையை வாங்கிக் கிழித்ததே இவன் அடிமை என்பதை அறிந்துள்ளான் என்பதற்க்கு சான்று!
நம்பி : என்னையா! பெரிய கூத்தாடியாக இருப்பீர்போல்!
திருமணத்துள்ளோர் : ( நம்பியை விலக்கி ) இவ்வுலகில் இல்லாத வழக்கை கூறுகின்றீர்கள். தாங்கள் யாரையா?
முதியவர் : எம் ஊர், அருகிலுள்ள திருவெண்ணெய் நல்லூராகும். அங்குள்ள சபையோர் நீதி மிக்கோர். அங்கு என் வழக்கை கூறுவேன். இவன் கிழித்தது படியோலை தான். மூலவோலையைக் கொண்டு வழக்கு செய்வேன்.
நம்பி : உங்கள் வெண்ணெய் நல்லூருக்கே போய் உன் பொய் வழக்கைத் தீர்க்கலாம்.
முதியவர் பின் நம்பி செல்லக், கூட்டத்தா தொடர்கிறார்கள்.
காட்சி 2:
( திருவெண்ணெய் நல்லூர் சபை. சபையோர் முன் நம்பியும், முதியவரும் நிற்கின்றனர். )
அவைத் தலைவர் : ஐயா! உம் வழக்கென்ன?
முதியவர் : அந்தத் திருநாவலூர் ஆரூரன் எனக்கு அடிமை என்று உள்ள ஓலையைக் கிழித்து அடிமை என்பதை ஏற்க மறுக்கிறான்!
அவைத்தலைவர் : இது வழக்கில் இல்லாததோர் வழக்கு!
ஆரூரரே! நீர் எவ்வாறு இம்முதியவரின் ஆவண்த்தைக் கிழிக்கலாம்? உம் தரப்பு நியாயத்தை சொல்லும்.
நம்பி : பெரியோர்களே! ஆதிசைவர் பிறர்க்கு அடிமையாவது எங்கும் இல்லாதது என்பதை அறிவீர். இம்முதியவர் பெருமாயையில் தேர்ந்தவராய் நம்மையெல்லாம் ஏமாற்றுகின்றார். இது தவிர எனக்கொன்றும் புரியவில்லை.
அவைத்தலைவர் : பெரியவரே! உங்கள் வழக்கை நீங்கள் ஆதாரத்தோடு நிருபிக்க வேண்டும். வழி வழியாக வரும் மரபாட்சி, ஆவணம் அல்லது கண்கூடாக பார்த்த பிறர் சாட்சி ஆகிய மூன்றில் ஒன்ரு கொண்டு உம் வழக்கை நிறுவ வேண்டும்.
முதியவர் : அப்படியே ஆகட்டும். இவன் முன்பு கிழித்தது படியோலை. மூல ஓலை இதோ! ( ஓலையை கொடுக்கிறார் )
( அவைத்தலைவர் அருகிலுள்ளவரிடம் கொடுக்கிறார். அவர் படிக்கிறார் )
ஆவணம் படிப்போர் : “திருநாவலூர் ஆரூரனாகிய நான் வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு நானும், என் மறபில் வருவோரும் வழியடிமை என்று ஒப்புக்கொண்ட ஆவணம்”.
அவைத்தலைவர் : இவ்வோலையில் உள்ள கையொப்பம் இவ்வாரூரர் தம் பாட்டனுடையது தானா என்பதைக் கூற முடியுமா?
ஆவணக்காரன் : ஐயா! அரசு ஆவணக் காப்பில் இருந்த அவருடைய மற்றொரு ஓலையைக் கொண்டு கையொப்பம் ஒப்பிட்டதில் இவ்வோலையில் உள்ள கையொப்பம் ஒத்துள்ளது. எனவே அவர் எழுதியது தான் இவ்வோலை என்பதில் ஐயமில்லை.
அவைத்தலைவர் : அரூரா! நீர் தோற்றீர். இவ்வெணெய் நல்லூர் முதியவருக்கு அடிமைப்பணி ஆற்றுவது உம் கடமை.
நம்பி : ( மனம்வெறுத்து ) தீர்ப்பு இவ்வாறு ஆனபின் இனிப் பணி செய்ய மாட்டேன் என்று கூறமுடியுமா?
அவைத்தலைவர் : ஐயா! நீங்கள் இவ்வூரென்கிறீகள். நாங்கள் யாரும் உம்மைக் கண்டதில்லை. தங்களுடைய இல்லம் எது என்று நாங்கள் அறியலாமா?
முதியவர் : ( கட கடவென சிரித்து ) நம் இல்லத்தை அறியவில்லையோ? வாருங்கள்!
முதியவர் பின் நம்பியும் மற்றோரும் தொடர்கின்றனர்.
முதியவர் திருவருட்டுறை புகுந்து பின் காணப்படவில்லை.
நம்பி : ஆகா எங்கள் பிரான் திருமுன் புகுந்து மறைந்தாரே. இவர் யார்? இவர் யார்?
இறைவர் வாக்கு : நம்பி! நம்முடைய தொண்டனே! நம் கட்டளைப்படி மண்ணில் பிறந்தனை. நாம் கூறியது படி உன்னைத் தடுத்தாட்கொண்டோம். பித்தன் என்று வன்மை பேசியமையால் வன்றொண்டன் எனப் பெயர் பெறுவாய். நமக்கு அருச்சனை பாட்டேயாகும். பித்தன் எண்றே தொடங்கிப் பாடுக.
நம்பி : பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.