திருச்சிற்றம்பலம்
மணியினை மாமறைக்காட்டு மருந்தினை வண்மொழியாற்
திணியன நீள் கதவம் திறப்பித்தன; தெண் கடலிற்
பிணியன கல் மிதப்பித்தன; சைவப் பெருநெறிக்கே
மணியன நாவுக்கரையர் பிரான் தன் அருந்தமிழே.
நாடகம் - 1 (பெருவாழ்வு பெற்றது)
காட்சி 1
இடம்: புகழனார் இல்லம்
(திலகவதியாரும் மருணீக்கியாரும் விளையாடிக் கொண்டிருக்கிறர்கள்.)
புகழனார் மாதினியாரிடம்: மாதினி! நம் செல்வங்கள் திலகவதியும் மருணீக்கியும் தம் குணத்தால் ஒருவரை ஒருவர் மிஞ்சுவர் போலும். இவர்கள் குணச்சிறப்பில் நாம் எவ்வாறு அவர்களுக்கு வழிகாட்டுவது? சிவபெருமான் தான் இக்குழந்தைகளைப் பேணவேண்டும். (ஆனந்தம் கலந்த பெருமூச்சு விடுகிறார்.)
காட்சி 2
(பின்குரல்): சிறிது காலம் சென்றபின் திலகவதியாருக்கு மாவீரர் கலிப்பகையாருடன் மணம் பேசி நிச்சயம் செய்கிறார் புகழனார். அப்போது வந்த ஒரு போரில் பங்குகொள்ள கலிப்பகையார் போர்முனைக்குச் செல்கிறார். இதற்கிடையில் புகழனாரும் மாதினியாரும் இவ்வுடல் நீத்து விண்ணுலகு எய்துகின்றனர். கலிப்பகையாரும் போரில் உயிர் நீக்கிறார். தழுவி வளர எல்லாப் பற்றுகளும் அற்ற நிலையில் திலகவதி என்ற அக்கொடி வாயக் கருதுகிறது.)
இடம்: புகழனார் இல்லம்
(திலகவதியார் நஞ்சுண்ன முற்படுகிறார். மருணீக்கியார் ஓடி வந்து அவர் திருவடிகளில் வீழ்கிறார்.)
மருணீக்கியார்: அன்னையும் தந்தையும் இல்லாத போழ்தும் அக்கா, உங்களை வணங்கி இதுவரை உயிர் வாழ்ந்தேன். இனி நீங்களும் என்னை விட்டுச் செல்ல நினைத்தால் அதன் முன் நான் இவ்வுலகை விட்டு நீங்குவேன்.
(நச்சுக் கிண்ணத்தைப் பறித்து உண்ண முற்படுகிறார். திலகவதியார் தட்டி விடுகிறார்.)
திலகவதியார்: (அழுதுகொண்டே) தம்பீ! இல்லை தம்பீ! நீ வாழவேண்டும். உன் பெருவாழ்வுக்கேனுமாவது நான் வாழ்வேன். சிவபெருமானே! சிவபெருமானே! (கட்டித் தழுவுகிறார்.)
காட்சி 3
பின்குரல்: மருணீக்கியார் பல அறங்கள் செய்வதில் தம் கருத்தைச் செலுத்துகிறார். அவர்து அறச்சாலையில் ....
இடம்: மருணீக்கியார் அறச்சாலை
(மருணீக்கியார் வருவோர்க்குத் தண்ணீர் அளித்துக் கொண்டிருக்கிறார். அவர் தமக்குள்)
மருணீக்கியார்: இவ்வுலக வாழ்க்கை தான் எத்தகையது. தந்தை தாயை இழந்தேன். அக்கா திலகவதியாரும் அம்பொன் மணி நூல் தாங்காது துறவுக் கோலத்தில் உள்ளார். நிலை பேறான பொருள் தான் என்ன?
(சமணர் அவ்வழிச் செல்கின்றார்.)
சமணர்: நாமே நம் துன்பங்களுக்குக் காரணம். நாமே நம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும். அறம் ஒன்றே இறுதியானது. இவ்வுடல் இன்பத்தை முழுதும் நீத்து உடலைத் தவம் என்னும் தீயில் வாட்டினால் இவை எல்லாவற்றிலிருந்தும் விடுதலை அடையலாம். கடவுளால் ஆவதில்லை. அவர் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? அத்தி நாத்தி!!
மருணீக்கியார்: ஒருவேளை இவர்கள் சொல்வது தான் உண்மையோ? அறத்தால் நாமே தான் துன்பம் நீங்கவேண்டுமோ? அச்சமணர் பின் செல்வோம்.
காட்சி 4
பின்குரல்: மருணீக்கியார் எது உண்மை எனக்காணும் நோக்கில் அறவுரைகளல் ஈர்க்கப்பட்டு சமணரானார். அயராத தமது ஆர்வத்தால் சமணர்கள் எல்லாம் மேலாகக் கொண்டாடுகின்ற தருமசேனர் என்ற பெரும்பதவியும் பெற்றார். இங்கு அவர்தம் குல முதல் திலகவதியரோ...)
இடம்: திருவதிகை வீரட்டம்
திலகவதியார்: (சிவபெருமானை வழிபட்டுப் பணி செய்து கொண்டு) சிவபெருமானே! தருமசேனனாம்! சமணர்க்கெல்லாம் தலைவனாம்! தேசமெல்லாம் புகழ்ந்து தேவன் என்று இருக்கினும் ஈசா! உன் உறவுக்கு இணையாகுமா? தவமென்று நினைத்து உண்மைப் பொருள் அறியாது அவத்தில் வீழ்ந்த என் தம்பியைத் தாங்கள் தான் வீழாது காத்தருளவேண்டும். (தேம்புகிறார்.)
சிவபெருமான்: உன்னுடைய மனக்கவலையை ஒழி! உன்னுடன் பிறந்தான் முன்னமே முனியாகி என்னை அடையத் தம் முயன்றான். எல்லாமும் தன் கருமமே என்று கட்டுண்டிருக்கும் தருமசேனனை நாம் இறைச்சத்தி காட்டிச் சூலை தந்தாள்வோம்!
காட்சி 5
இடம்: திருவதிகை வீரட்டம்
(திலகவதியார் உழவாரப்பணி செய்து கொண்டிருக்கிறார். தருமசேனர் அவர் திருவடியில் வந்து வீழ்கிறார்.)
தருமசேனர்: அக்கா! நம் குலத்தின் தவக்கொழுந்தே! கொடுமையான சூலை என் வயிற்றைக் குதறுகின்றது. வலிக்கின்றது அக்கா, வலிக்கின்றது! சமணர்களும் இது அவருடைய மந்திர தந்திரங்களால் தீர்க்கமுடியாதது என்று ஒன்றும் புரியாதவராய் அஞ்சிக் கைவிட்டார்கள். இனி உங்கள் திருவடியே சரணடைந்தேன். தாங்கமுடியவில்லை அக்கா! சற்றும் தாமதிக்காது உய்ந்து கரையேறும் வழி காட்டுங்கள் அக்கா!
திலகவதியார்: உண்மையை உணராத ஆரம்பச் சமயக் குழி விழுந்தீர்! எழுந்திரீர்!
(தருமசேனருக்குத் திலகவதியார் திருநீறு அளிக்கிறார். உழவாரப்படை கையில் கொடுக்கிறார். தருமசேனர் உழவாரப்பணி செய்துகொண்டு பாடுகிறார்.)
கூற்றாயினவாரு விலக்கிகிலீர் கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே.
தருமசேனர்: ஆ! என் வலி போய்விட்டது!! சிவபெருமானே! அருக்கனிற் சோதி அமைத்து, மதியில் தண்மை வைத்து, தீயில் வெம்மை செய்து, நீரில் இன்சுவை நிகழ்த்தி, மண்ணில் திண்மை வைத்து எனப் பலபலவற்றையும் எம் போன்ற உயிர்களை உய்ய வைக்கத் தாங்கள் படைத்து நிற்கும் பெருங்கருணையை மறந்து அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டேனே! இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே!
சிவபெருமான்: சொல்வளம் மிக்க பாடலிற் சிறந்த தொடுத்துப் பதிகம் பாடினீர்! இனி உமது திருநாமம் நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நயப்புற மன்னுக!
திருநாவுக்கரசர்: நானடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே! நானடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே! (ஆடுகின்றார்.)