எரையூர் அ/மி ஸ்ரீ இன்பாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ இருள்நீக்கீசுவரர் சுவாமி
திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

srI inbAmbikai uDanuRai srI iruLn^IkkIswarar temple mahA kumbAbishEham
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ இருள்நீக்கீசுவரர் சுவாமி திருக்கோயில், எரையூர், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.

தலவரலாறு:

எரி என்னும் அக்னி வழிபட்டதால் இத்தலம் எரியூர் எனப்பட்டது. எரியூர் என்பது மருவி எரையூர் எனப்பட்டது. எரி என்பது ஒளி. அம்மையின் பெயரோ இன்பாம்பிகை; இறைவன் இருள்நீக்கீசுவரர். சிவபெருமான் நெருப்பு வடிவானவன். அந்த நெருப்பினைக் கண்டால் இருள்நீங்கும். அதனை நீக்குபவரே இருள்நீக்கீசுவரர். இருள் விலகினால் இன்பம் பெருகும். அந்த இன்ப வாழ்வை அளிப்பவள் இன்பாம்பிகை. இருளை அகற்றி வாழ்வில் ஒளியேற்றும் இத்திருத்தலப் பெயரும் பெருமானின் பெயரும் பெருமாட்டியின் பெயரும் பொருத்தமாக அமைந்து காணப்படுவது இத்தலத்தின் பெருமைக்குச் சான்று.

சிறப்பு:

சாபத்தால் ஒருமுறை அக்னி இருளில் மூழ்கினான்; தன் இருளைப் போக்கிக் கொள்ள இத்தல இறைவனைப் பூஜித்து சாப விமோசனம் பெற்றான்; அக்னியின் இருளை நீக்கியதால் இத்தல இறைவன் இருள்நீக்கீசுவரர் எனப்பட்டார். அக்னியால் உருவாக்கப்பட்ட தீர்த்தமே இங்குள்ள அக்னி தீர்த்தமாகும். மற்றொரு ஒளிக் கிரகமான சூரியன் தன் மனைவியரோடு இத்தலத்திற்கு வந்து குளம் தொட்டு நீரெடுத்து இவ்விறைவனை வழிபட்டார்; சூரியனால் உருவாக்கப்பட்ட தீர்த்தமே சூரிய தீர்த்தம் என்ற பெயரில் இன்று இத்தலத்தில் பெருங்குளமாக காட்சியளிக்கிறது. ஆண்டு தோறும் பங்குனி மாதம் முழுவதும் சூரிய ஒளி இவ்விறைவன் மீது (சூரியன் வழிபாடு செய்வது) விழுவது சிறப்பாகும். மேலுமொரு ஒளிக் கிரகமான சந்திரன் இத்தலத்தில் தீர்த்தம் ஏற்படுத்தி, இவ்விறைவனை வழிபாடு செய்து தனக்கு ஏற்பட்ட சண்டாள தோஷத்தை நீக்கிக்கொண்டான். மூன்றாம் பிறை நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி இவ்விறைவனை வழிபாடு செய்து, மாலையில் மூன்றாம் பிறையக் கண்டால் நீடித்த ஆயுளும், சித்த சுவாதீன நிவர்த்தியும் ஏற்படும். மேலும் ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் நீங்கப்பெறுவர்; விவசாயம் விருத்தி அடையும்.

விஷ்ணு இத்தலத்து இறைவை வழிபட ஒரு தீர்த்தம் உண்டாக்கி, துளசி தளம் இட்டு வழிபட்டதாக ஐதீகம். ஆகவே இத்தலம் சங்கரநாராயிணத் தலமாகவும் விளங்குகிறது. மகாவிஷ்ணு உண்டாக்கிய திருக்குளம் மகாவிஷ்ணு தீர்த்தம் என்ற பெயரில் விளங்குகிறது. இத்தலம் ஒரு காலத்தில் சங்கரநாராயிணபுரம் என்றத் திருப்பெயரில் விளங்கியுள்ளது. இத்திருத்தலம் ஐந்து தீர்த்தங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தலத்தின் தல விருட்சம் கடம்ப மரமாகு.

இத்தல இறைவனை அகத்திய முனிவர் வழிபட்டு இரசவாத முறைகளையும், சித்த வைத்திய முறைகளையும் கற்றார் என்பர். இத்தலத்தில் சனிக்கிழமைகளில் ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டால் சித்தப் பிரமை உள்ளிட்ட அனைத்துப் பிணிகளும் நீங்கும் என்பது மக்கள் நம்பிக்கை. சப்த கன்னியர்கள் ஒருசேர இறைவனை வழிபட்டத் தலம்.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால் பிற்காலச் சோழர்கள் காலத்தில் இத்தலம் திருப்பணி செய்யபட்டதாக இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மேலும் நாயக்கர் கால கல்வெட்டுக்களும், பல்லவர் கால கல்வெட்டுக்களும் உள்ளன.

கும்பாபிஷேக விழா:

நிகழும் மங்களகரமான சர்வஜித் ஆண்டுப் பங்குனி திங்கள் 03ம் நாள், (16 - 03 - 2008) ஞாயிற்றுக்கிழமை, காலை 09.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில் அ/மி ஸ்ரீ இன்பாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ இருள்நீக்கீசுவரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ இன்பாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ இருள்நீக்கீசுவரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

Back to Important Events Page
Back to Shaivam Home Page